ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள்: பஞ்சாப்-கொல்கத்தா, லக்னோ-டெல்லி அணிகள் மோதல்

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா, லக்னோ-டெல்லி அணிகள் மோதுகின்றன.

Update: 2023-04-01 00:46 GMT

மொகாலி,

16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை 3.30 மணிக்கு மொகாலியில் நடக்கும் ஒரு ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்சும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதுகின்றன.

கடந்த சீசனில் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்ட பஞ்சாப் அணி இந்த ஆண்டு பல அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. குறிப்பாக கேப்டன் மயங்க் அகர்வாலை கழற்றி விட்டு, ஷிகர் தவான் கேப்டன் பதவிக்கு கொண்டு வரப்பட்டார். இதுவரை இல்லாத தொகையாக ஆல்-ரவுண்டர் சாம் கர்ரனை ரூ.18½ கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

ஆனால் வெளிநாட்டு வீரர்களில் ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து), வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் முதல் ஆட்டத்தில் ஆடாதது பின்னடைவாகும். இதே போல் அதிரடி பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ காலில் ஏற்பட்ட காயத்தால் தொடர் முழுவதும் விலகி விட்டார். இப்போதைக்கு தவான், சாம் கர்ரன், அர்ஷ்தீப்சிங், ஷாருக்கான், மேத்யூ ஷார்ட், சிகந்தர் ராசா, ராகுல் சாஹர் ஆகியோரைத் தான் அந்த அணி மலை போல் நம்பி இருக்கிறது.

இதே நிலைமையில் தான் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா அணியும் உள்ளது. முதுகு காயத்தால் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதல் பாதி ஆட்டங்களில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக நிதிஷ் ராணா அணியை வழிநடத்த உள்ளார். சர்வதேச போட்டி காரணமாக வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசன், லிட்டான் தாஸ் ஆகியோர் முதல் ஆட்டங்களில் விளையாடவில்லை. ஆல்-ரவுண்டர்கள் ஆந்த்ரே ரஸ்செல், சுனில் நரின், வெங்கடேஷ் அய்யர் மற்றும் ஜெகதீசன் தான் கொல்கத்தாவின் தூண்களாக உள்ளனர். பந்து வீச்சில் டிம் சவுதி, லோக்கி பெர்குசன், ஷர்துல் தாக்குர், உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி வலுசேர்க்கிறார்கள்.

கடந்த ஆண்டு 7-வது இடத்துக்கு தள்ளப்பட்ட கொல்கத்தா அணி இந்த தொடரை வெற்றியோடு தொடங்கும் வேட்கையுடன் ஆயத்தமாகியுள்ளது. இவ்விரு அணிகள் இதுவரை 30 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10-ல் பஞ்சாப்பும், 20-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளன. போட்டி நடக்கும் மொகாலிஆடுகளம் பொதுவாக வேகப்பந்துவீச்சுக்கு உகந்தது. அங்கு நேற்று மழையால் ஆடுகளம் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரவு 7.30 மணிக்கு லக்னோவில் அரங்கேறும் மற்றொரு ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

கடந்த சீசனில் அறிமுக தொடரிலேயே 4-வது இடத்தை பிடித்து கவனத்தை ஈர்த்த லக்னோஅணி, டெல்லிக்கு எதிரான இரு லீக்கிலும் வெற்றி பெற்றிருந்தது. கேப்டன் ராகுல், தீபக் ஹூடா, குருணல் பாண்ட்யா, நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், ஜெய்தேவ் உனட்கட், ரொமாரியா ஷெப்பர்டு லக்னோ அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்.

டெல்லி அணியில் கேப்டன் ரிஷப் பண்ட் காயத்தால் ஆடாத நிலையில் மூத்த வீரர் வார்னர் வழிநடத்த உள்ளார். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அதிரடியில் மிரட்டிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், பிரித்வி ஷா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், மனிஷ் பாண்டே, சர்ப்ராஸ் கான், ரோமன் பவெல் என்று டெல்லி அணியில் நட்சத்திர வீரர்களுக்கு குறைவில்லை. சர்வதேச போட்டி காரணமாக டெல்லி வேகப்பந்து வீச்சாளர் இங்கிடி, நோர்டியா, முஸ்தாபிஜூர் ரகுமான் இன்றைய மோதலில் ஆடமாட்டார்கள்.

இவ்விரு ஆட்டங்களையும் டி.வி.யில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், இணையதளத்தில் 'ஜியோ சினிமா'விலும் பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்