காலி நிலம் மற்றும் வீட்டு மனைகளுக்கு எல்லையிட்டு பாதுகாப்பது அவசியம்
நிலத்தை வாங்கிய போது எப்படி இருந்ததோ அந்த நிலையிலேயே போட்டு வைத்திருந்தால் பின்னர் பல சிக்கல்களுக்கு அது வழி வகுத்து விடக்கூடும்.
பெருநகர் பகுதியின் புறநகர் பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் சேமிப்பு மற்றும் முதலீட்டு நோக்கில் வீட்டுமனை, காலி இடம் ஆகியவற்றை பலரும் வாங்குவதுண்டு. அதன் பின்னர், அவற்றிற்கு தக்க பாதுகாப்பு அளித்து வேலி அமைக்க வேண்டும் என்பதை பெரும்பாலானோர் மனதில் கொள்வதில்லை. நிலத்தை என்ன தூக்கிக்கொண்டு ஓடவிட முடியுமா என்றும் ஒரு சிலர் சொல்லக்கூடும்.
இடம் சிறியதோ, பெரியதோ அதற்கான நான்கு பக்க எல்லை, கம்பி வேலி அல்லது கார்னர் பகுதிகளில் ட போன்ற செங்கல் கட்டுமானம் ஆகியவற்றை அமைத்து பாதுகாப்பது எப்போதும் பாதுகாப்பானது என்பதை ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.
நிலத்தை வாங்கிய போது எப்படி இருந்ததோ அந்த நிலையிலேயே போட்டு வைத்திருந்தால் பின்னர் பல சிக்கல்களுக்கு அது வழி வகுத்து விடக்கூடும். பக்கத்து மனை உரிமையாளர் கட்டும் வீடு நமது மனைக்குள் அமைந்து விடலாம் அல்லது மற்றவர்களின் சொந்தப் பயன்பாட்டுக்கு நமது இடம் பயன்படுத்தப்படலாம்.
மேலும், எந்தெந்த சூழ்நிலைகளில் அல்லது காரணங்களால் ஒருவருக்கு சொந்தமான மனை அல்லது காலி இடம், மற்றவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சட்டப்பூர்வமான சிக்கலுக்கு உள்ளாக்கப்படுகிறது என்பதை ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அவை குறித்த முக்கியமான சில செய்திகளை இங்கே காணலாம்.
1.அறிமுகம் இல்லா புதிய ஊர் அல்லது அறிமுகம் இல்லாதவர்கள் வசிக்கும் பகுதிகளில் மனை அல்லது நிலம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க இயலாத நிலையில் அவ்வாறு செய்ய வேண்டி வந்தால், வேலி அல்லது சுற்றுச்சுவர் அமைத்து அதில் மனைக்குரிய பட்டா எண், பத்திர பதிவு எண், சம்பந்தப்பட்ட உரிமையாளர் பெயர் ஆகியவை அறிவிப்பு பலகை தகவலாக வைக்காமல் விடுவது.
2.வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் வசிப்பவர்கள் மனை அல்லது நிலத்தை வாங்கிவிட்டு, தக்க பாதுகாப்பு செய்ய மறந்து விடுவது.
3.மனை அல்லது இடத்தை பொருத்தமற்ற அல்லது நன்கு அறிமுகமற்ற நபர்களுக்கு வாடகைக்கு அளிக்கப்படும் நிலையிலும் சிக்கல்கள் ஏற்படலாம்.
4.மனை அல்லது காலி நிலத்தின் ஆவணங்களை முறையாக பாதுகாக்காமல் உறவினர்களை நம்பி கொடுத்து வைத்திருப்பது அத்துடன் மனையை நீண்ட காலமாக நேரில் சென்று பார்க்காமல் இருப்பது.
5.நிலத்திற்கான பத்திரம் காணாமல் போயிருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட இடம் அல்லது நிலத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது.
6.குறிப்பிட்ட இடம் அல்லது மனைக்கு டபுள் டாகுமெண்டு என்ற சட்டப் பிரச்சினை இருப்பது.
7.காலி நிலம் அல்லது வீட்டு மனையை பராமரிப்பு செய்ய தவறான நபர்களுக்கு அனுமதி அளித்திருப்பது.
8.மனையின் நான்கு பக்க எல்லைகளை சரியாக அளந்து எல்லை கற்களை அந்தந்த இடங்களில் நடாமல் விடப்படுவது.
9.கூட்டு பட்டா நிலம் அல்லது மனையாக இருக்கும் நிலையில் அவற்றின் நீள அகலங்கள் குறிப்பிடாமல் உள்ள கிரய பத்திரங்கள்.
மேற்கண்ட விஷயங்களை, பெருநகரம் அல்லது நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் வீட்டு மனை அல்லது காலி இடம் வாங்கும் அனைத்து தரப்பு மக்களும் மனதில் கொண்டு முடிவுகளை எடுப்பதே முதலீடுகளுக்கு பாதுகாப்பானது.