மின்சார சிக்கனம் ! எல்.இ.டி. தேவை இக்கணம் !
மின் விளக்குகளிலிருந்து குறைவான வெப்பத்தை வெளிப்படுத்தும் எல்.இ.டி விளக்குகளை பயன்படுத்த பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்படுகிறது.
வீடுகள் அல்லது குடியிருப்பு கட்டிடத்தின் தோற்றம், பெயிண்டிங் தேர்வு, இன்டிரியர் அமைப்பு, கார்டனிங் போன்ற வெவ்வேறு உள் கட்டமைப்புகளுக்கு பொருத்தமாக லைட்டிங் செய்யப்படுவது அவசியம். அப்போதுதான் வீடு அல்லது குடியிருப்பு கண்கவரும் இருப்பிடமாக மாற்றமடைகிறது.
லைட்டிங் என்ற உள்கட்டமைப்பில் மின் விளக்குகள் தேர்வு என்பது மிக அடிப்படையான விஷயமாகும். செலவு சிக்கனம் மட்டுமல்லாமல் உழைப்பு மற்றும் சூழல் பாதுகாப்பு என்ற நிலைகளில் எல்.இ.டி விளக்குகள் அனைத்து கட்டிடங்களிலும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
எந்த ஒரு கட்டிடத்திற்கும் கண்கவரும் அழகை அளிப்பதில் லைட்டிங், லைட் செட்டிங் முக்கியமான இடத்தை பெறுகிறது. கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள லைட்டிங் என்பது கட்டிடத்தின் அனைத்து பகுதிகளிலும் விதவிதமான மின் விளக்குகளை அமைப்பது மட்டுமல்ல. அவற்றின் வடிவம், நிறம், அமைப்பு, ஒளி தரும் திறன், ஒளியின் நிறம், மின் நுகர்வு ஆகிய அம்சங்களின் அடிப்படையை கணக்கிட்டும் கச்சிதமாக அமைக்கப்பட வேண்டும்.
சர்வதேச அளவில் புவி வெப்பமயம் ஆவதை ஓரளவாவது குறைக்க வேண்டும் என்பது வலுவான கருத்தாக மாறி வருகிறது. மின் விளக்குகளிலிருந்து குறைவான வெப்பத்தை வெளிப்படுத்தும் எல்.இ.டி விளக்குகளை பயன்படுத்த பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்படுகிறது.
அதன் அடிப்படையில் 3 முதல் 50 வாட்ஸ் கொண்ட மின் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றுக்கு அதிகப்படியான பராமரிப்பு தேவையில்லை என்பதுடன் மின்சார பயனீடு குறைவாகவே இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
இன்றைய ஸ்மார்ட் ஹோம் யுகத்தில் லைட்டிங் டெக்னாலஜி என்பது அதி நவீனமாக மாறி இருக்கிறது. எல்.இ.டி பயன்பாட்டில் உள்ள தொழில்நுட்ப அம்சங்களை இங்கே காணலாம்.
* மின்னழுத்த மாற்றங்களால் ஷார்ட் சர்க்கியூட் ஏற்படும் நிலையிலும் அவை சேதம் அடைவதில்லை. வேறு காரணங்களால் எளிதாக அவை உடைவதும் இல்லை. விளக்கிலிருந்து வெளியாகும் ஒளி சீராக இருக்கும். அதை பலமுறை ஆன், ஆப் செய்தாலும் வெப்பம் அடையாது.
* எல்.இ.டி மின் விளக்குகள் சுவிட்ச் போட்டவுடன் உடனடியாக ஒளிரக்கூடிய தன்மை பெற்றவை. நகர்ப்புறங்களில் அடிக்கடி உருவாகும் மின் அழுத்த குறைபாடுகளால் எல்.இ.டி விளக்குகள் பாதிக்கப்படுவதில்லை. அதாவது, குறைந்த மின் அழுத்தமான 85 வோல்ட் அல்லது அதிக மின் அழுத்தமான 285 வோல்ட் ஆகிய ஏற்றத்தாழ்வுகளிலும் விளக்கு தொடர்ந்து வெளிச்சம் தரும்.
* எல்.இ.டி விளக்குகளிலிருந்து மெர்க்குரி, அல்ட்ரா வயலட், இன்ப்ரா ரெட் போன்ற கதிர் வீச்சுக்கள் வருவதில்லை என்றும், ஒரு எல்.இ.டி மின் விளக்கு கிட்டத்தட்ட 3 முதல் 5 ஆண்டுகள் வரையில் உழைக்கக்கூடியது என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.