கட்டிட அமைப்புகளுக்கான நெருப்பு தடுப்பு முறைகள்

Update: 2023-09-16 00:33 GMT

மனித தவறுகள், தொழில்நுட்ப கோளாறுகள், இயற்கை சீற்றங்கள் ஆகிய காரணங்களால் கட்டிட அமைப்புகளில் எதிர்பாராத தீ விபத்துக்கள் ஏற்பட்டு விடுகின்றன. தீயணைப்பு துறையின் புள்ளி விவரப்படி மின்சார கசிவு காரணமாக கிட்டத்தட்ட 50 சதவிகித தீ விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. அதற்கு அடுத்தாக, 20 சதவிகிதம் தீ விபத்துகள் சமையல் எரிவாயு கசிவு மற்றும் 20 சதவிகிதம் ரசாயன பொருட்கள் ஆகியவற்றால் தீ விபத்து ஏற்படுவதாக தீயணைப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.

தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த தகவல்களை இங்கே காணலாம்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் தீ விபத்தை கையாளுவதற்கு அலாரம், தீயணைப்பு சிலிண்டர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பராமரித்து வருவது முக்கியம். தீயினால் பாதிப்பு ஏற்படும் அவசர காலங்களில், உடனடியாக வெளியேற மாற்று வழி அல்லது வெளிப்புற படிக்கட்டு முன்னதாகவே அமைக்கப்பட வேண்டும். தீ விபத்து நேர்ந்த நிலையில் லிப்டு பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். படிகள் வழியாக இறங்கி அல்லது ஏறிச் செல்வதே பாதுகாப்பானது.

குடியிருப்பு அல்லது வீடுகளில் ஏற்பட்ட தீயினால் உருவான புகை மண்டலத்துக்குள் சிக்கி, வெளியேற வழி தெரியாமல் அறைக்குள் சிக்கிக்கொள்பவர்கள், அறை கதவுகளை மூடிவிட்டு, ஈரமான டவல் அல்லது பேப்பர் ஆகியவற்றை பயன்படுத்தி கதவுகளின் துவாரங்கள் மற்றும் இடைவெளிகள் அடைத்து விட வேண்டும். அதனால், அறைக்குள் புகை பரவாமல் தடுக்கப்படும்.

அறைக்குள் புகை பரவும்போது புகை உள்ளிட்ட இதர வாயுக்கள் அறையின் மேல் புறமாக தேங்கி நிற்கும் தன்மை கொண்டவை. அதனால், தரையில் படுத்து தரைத்தளத்தில் உள்ள ஆக்ஸிஜனை சுவாசித்தவாறு மீட்பு நடவடிக்கை கிடைக்கும் வரை அமைதியாக இருக்க வேண்டும். வீடுகள் அல்லது குடியிருப்புகளில் புகை உணரும் அலாரம் பொருத்த வேண்டும். அதனால் தீ விபத்தை உடனடியாக கண்டறிந்து பாதிப்புகளை தடுக்கலாம். குடியிருப்புகளில் உள்ள தீ அணைப்பான் (Fire extinguisher) தேதி மற்றும் ரீபில் ஆகியவற்றை சரி பார்த்து, பராமரித்து வர வேண்டும். அடுக்கு மாடி வீடுகளில் உள்ள அறைகள், பொது இடங்கள், காரிடார் போன்ற பகுதிகளில், நெருப்பை அணைப்பதற்கான, ஸ்பிரிங்ளர் அமைப்பு மற்றும் புகை அலாரம் கருவி ஆகியவற்றை பொருத்துவது அவசியம்.

அடுக்குமாடி குடியிருப்பு சங்கம் மூலம் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, மேற்கொள்ள வேண்டிய தீ பாதுகாப்பு முறைகள் பற்றிய கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அடுக்குமாடி குடியிருப்பு அல்லது வீட்டுக்கு அருகில் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வந்து செல்வதற்கு தக்க இடவசதி இருக்க வேண்டும்.

குடியிருப்பின் மேல்தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் உள்ள நீரை, தீ விபத்தின் போது பயன்படுத்தும் விதமாக தக்க குழாய் அமைப்புகளை செய்து கொள்ளலாம். அல்லது தனிப்பட்ட தொட்டி அமைத்தும் நீரை நிரப்பி வைக்கலாம். பெரு நகரங்களில் உள்ள குடியிருப்புகள் 45 மீட்டருக்கும் மேல் உயரமாக இருக்கும் நிலையில் அவசர கால மீட்பு பணிகளுக்கு, மேல் தளத்தில் ஹெலிபேட் அமைப்பது பற்றி பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்