ஆக்ஸிஜனை அதிகரிக்கும் அலங்கார செடிகள்

வீட்டை அழகுபடுத்தும் அம்சமாக உள்ள உள் அலங்கார செடிகள், அறையை அழகு செய்வதுடன், காற்றை தூய்மைப்படுத்தி ஆரோக்கியத்திற்கும் துணையாக உள்ளன.

Update: 2023-09-14 15:45 GMT

நகரமயம் காரணமாக காற்றின் சுத்தம் குறைந்து விட்டது. வெளியிடங்களில் மட்டுமின்றி வீட்டுக்குள் நுழையும் காற்றிலும் மாசு கலந்துள்ளது. சாலைகள், தெருக்களில் மரங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது அதற்கு முக்கிய காரணம் ஆகும். அதன் காரணமாகவும், வாஸ்து பரிகாரமாகவும் வீடுகளில் செடிகள் வளர்ப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அழகுக்காக மட்டுமே செடிகள் வளர்த்து வந்த நிலை மாறி தங்கள் தேவைகளுக்காக செடிகளின் பயன்பாட்டை மாற்றிக்கொண்டு மாடித்தோட்டம் அமைப்பதும் தற்போது அதிகரித்து வருகிறது.

மரங்களுக்கு இணையாக அனைத்து செடிகளும் காற்றை சுத்திகரிக்க இயலாது. ஒருசில செடிகள் வீட்டை அழகாக காட்டுவதுடன், அறைக்குள் உள்ள காற்றையும் சுத்திகரிக்கின்றன. அத்தகைய செடிகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

சாமந்திப்பூ செடி

அழகாக உள்ள சாமந்திப்பூச்செடி காற்றை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது. இதனை சூரிய ஒளியின் கீழ் நேரடியாக வைக்கக்கூடாது. தொட்டிகளில் வளர்க்கும்போது மண்ணில் ஈரப்பதம் குறையாமல் இருப்பதை கவனிக்க வேண்டும். சாமந்தி பூக்கள் அமோனியா வாயுவை அகற்றுவதாக சொல்லப்படுகிறது. இதனை வீட்டின் வாசல் பகுதியில் அல்லது வீட்டின் உள் பகுதிகளில் வைத்து வளர்க்கலாம். இந்த செடியை வீட்டின் பல இடங்களில் வைத்து வளர்ப்பதன் மூலம் அறைகளுக்குள் சுத்தமான காற்றோட்டத்தை நிலவச் செய்யலாம்.

கோல்டன் போதோஸ்

தாவரவியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி காற்றை சுத்தப்படுத்தும் தாவரங்களின் வரிசையில் மூன்றாம் இடம் பிடித்திருப்பது கோல்டன் போத்தோஸ் (golden pothos) செடி ஆகும். இவை, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சி, காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும். இந்த செடி காற்றில் கலந்துள்ள பார்மால்டிஹைடு, பென்சைன் மற்றும் சைலின் போன்றவற்றை வெளியேற்றி, வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கிறது.

மூங்கில்

கார்பன் மோனாக்சைடு, பென்சீன், பார்மல்டீஹைடு, குளோரோபார்ம் போன்ற நச்சு வாயுக்களை மூங்கில் அகற்றி விடுவதாக சொல்லப்படுகிறது. வீட்டின் வரவேற்பறைக்கு பொருத்தமான செடியாக இதை சொல்லலாம். வீட்டின் எந்த அறையிலும் வளர்வதற்கு ஏற்ற இந்த செடியை படுக்கை அறையிலும் வளர்க்கலாம். வீட்டை சுற்றிலும் உள்ள காற்று மண்டலத்தில் கலந்துள்ள ரசாயனங்களை அகற்ற மூங்கில் செடி சிறந்தது. இதற்கு நேரடி சூரிய வெளிச்சம் அதிகம் தேவைப்படாது. அதனால் நிழலாக இருக்கும் பகுதியிலும் வளர்க்கலாம்.

பாக்கு பனை

பாக்கு பனை (Areca Palm) என்ற மூங்கில் பனையை போன்ற இந்தச் செடி வில் வளைவுகளைப் போன்ற வடிவத்தில் இலைகளை கொண்டிருக்கும். இந்த செடி கண்கவரும் விதத்தில் அழகாக இருக்கும். காற்றில் ஈரப்பதம் ஏற்படுத்தவும், பென்சீன், கார்பன் மோனாக்சைடு, ஸைலீன், ட்ரைகுளோரோ ஈத்தலைன் மற்றும் பார்மல்டீஹைடு ஆகிய நச்சு வாயுக்களை அகற்றவும் இந்த வகை செடிகள் நல்ல தேர்வாகும்.

பாம்பு செடி

வீட்டுக்குள் உள்ள காற்றில் கலந்திருக்கும் நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் பார்மால்டிஹைடு போன்றவற்றை பாம்பு செடி உறிஞ்சி, சுத்தமாக்குவதாக குறிப்பிடப்படுகிறது. இவ்வகை செடிகளுக்கு அதிகமாக தண்ணீர் விட்டு பராமரிக்க வேண்டும் என்பதில்லை.

Tags:    

மேலும் செய்திகள்