வீடு கட்டுவதற்கு முன் கண்காணிக்க வேண்டியவைகள்

Update: 2023-04-22 01:22 GMT

வீடு கட்டுவது என்பது அனைவருக்கும் உள்ள ஒரு மிகப்பெரிய லட்சியமாகும். தனக்கென்று ஒரு சிறு வீடாயினும் வேண்டும் என்பதில் ஒவ்வொருவரும் ஆவலோடு முயற்சி எடுக்கின்றனர்.

வீடு கட்டுவதற்கு முன் முன்னெச்சரிக்கையோடு பார்க்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றது. ஏற்கனவே வீடு கட்டும் இடத்தில் சொந்தமாக நிலம் இருந்தால் வீடு கட்டுவதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.

நிலம் எவ்வளவு பரப்பளவில் எந்த வடிவில் உள்ளது என்பதை முதலில் பார்க்க வேண்டும். பிறகு இந்த நிலம் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி மாநகராட்சிக்கு உட்பட்டவைகளா என்பதை பரிசோதிக்க வேண்டும். கட்டுமான வல்லுனர்களிடம் கலந்து ஆலோசித்து இதற்கு ஒரு மதிப்பீடு வாங்கிக் கொள்ளுதல் அவசியம்.

அந்த மதிப்பீட்டைப் பொறுத்துதான் நிதி வசதியை உருவாக்க முடியும். வீடு கட்டுவதற்கு தேவையான அளவு பணம் கையில் உள்ளதை வங்கியில் சேமிப்பில் உள்ளதற்கு ஏற்ப வங்கி கடன் பெற வேண்டும். வங்கி கடன் பெறுவதாக இருந்தால் அதற்கான ஆவணங்கள் நம்மிடம் உள்ளதா என்பதை சோதிக்க வேண்டும். நகைகள் மூலமாகவும் கடன் வசதி பெறலாம்.

வீடு கட்டுவதற்கு முன் அந்த இடத்திற்கான பாதுகாப்பு பற்றி முழுமையாக சோதிக்க வேண்டும். அங்கு தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளையும் கவனமாக கையாள வேண்டும். அந்த இடத்தின் தரங்களை பரிசோதிக்க வேண்டும். அந்த மண்டலத்தில் தண்ணீர வசதி, வடிகால். கழிவு நீர். மின்சாரம் போன்ற வசதிகள் இருப்பததை அறிந்து கொள்ள வேண்டும். வீடு கட்டுவதற்கு முன் வீட்டின் வடிவமைப்பு திட்டம் (பிளான்) போடுதல் மிகவும அவசியமாகும். பிளானில் வாஸ்து பிரகாரம் எங்கு சமையலறை பூஜை அறை படுக்கையறை வரவேற்பறை அமைப்பது என்பதை முன்பே குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு அறையும் எந்த அளவில் கட்ட வேண்டும் என்பதை வடிவமைப்பில் குறிப்பிட வேண்டும். எதிர்காலத்தில் அந்த வீட்டை விரிவாக்கம் செய்வதாக இருந்தால் அதற்கேற்றவாறு அமைக்க வேண்டும்.

வீடு கட்ட தேர்ந்தெடுக்கும் வல்லுனர் சிறந்த திறமையான கை தேர்ந்தவர் என்பதை உறுதி செய்ய வேண்டும். சந்தையில் அவரைப் பற்றியும் அவர் உருவாக்கிய கட்டட அமைப்புகளின் தரத்தை பற்றியும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய நவீன காலத்தில் கட்டட வல்லுநர்களை பற்றி ஆன்லைன் மதிப்புரைகளை வைத்தும் அறிந்து கொள்ளலாம்.

அவர் குறித்த காலத்துக்குள் வீட்டை தரமானதாகவும் உறுதியானதாகவும் அழகாகவும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டமைப்பு உருவாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

அதிகாரிகளிடம் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து அனுமதியை முறையாக பெற வேண்டும். அனைத்து ஆவணங்களையும் முறையான அதிகாரிகளிடம் சமர்ப்பித்து சரிபார்த்துக் கொள்ளுதல் மிக மிக முக்கியமான ஒன்றாகும். மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவு நீர் வசதிக்கான அனுமதிகளையும் முறையாக பெற வேண்டும்.

வீடு கட்டுவதற்கான வரவு செலவு திட்டங்களை ஆரம்பத்திலேயே வகுக்க வேண்டும். கட்டுமானத்திற்கு தேவையான பொருள்களான மணல் சிமெண்ட் கம்பிகள் செங்கல் மற்றும் தினக்கூலி போன்ற செலவுகளுக்கான பட்ஜெட்டை முன்பே தயாரித்துக் கொள்ள வேண்டும். அதை தவிர்த்து வரும் அவசர தேவைகளுக்கான பணத்தை ஏற்பாடு செய்து கொள்ளுதலும் முக்கியமாகும்.

கட்டடம் கட்டும் போதே கட்டடத்தின் மறு விற்பனை மதிப்பீட்டையும் கவனிக்க வேண்டும். கட்டடம் கட்டுவதற்கு தேவையான மூலப்பொருட்கள் தரமான இடத்தில் சிறந்த முறையில் சரியான விலையில் வாங்குவதை உறுதி செய்ய வேண்டும். கட்டடத்தில் உள் அமைப்புகளில் பயன்படுத்தும் சாதனங்கள் அனைத்தும் தரமானதாகவும் நீண்ட நாட்கள் உழைப்பவையாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதில் கவனம் கொள்ள வேண்டும். கட்டடத்தின் உட்புறத்தில் மழை நேரங்களில் நீர் கசிவுகள் ஏற்படாத வண்ணம் பூச்சுகள் அமைவதையும் உறுதி செய்ய வேண்டும்.

வீடு கட்டுவது என்பது மிகப்பெரிய வாழ்நாள் திட்டமாகும். ஆதலால் பக்குவமாக பார்த்து சிறந்த முறையில் கையாள வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்