கோடை வந்துவிட்டது வீட்டை குளுமையாக்குவோமா!!

நாம் வசிக்கும் வீடு என்பது அதீத குளிர்ச்சி அதீத வெப்பம் போன்றவற்றிலிருந்து நம்மை பாதுகாப்பதற்காகவே. அந்த வகையில் இந்த கோடை காலத்தில் நம் வீட்டை குளுமையாக வைப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம். முழுக்க முழுக்க ஏசியை போட்டுக் கொண்டிருப்பதும் நம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல எனவே வீடு வெப்பத்தை முழுவதுமாக எடுத்து உள்ளே அனுப்பக் கூடியதாய் இல்லாமல் வெப்பத்தை பெருமளவு குறைப்பதற்கு என்னென்ன விஷயங்களை நாம் செய்ய வேண்டும் என்பது முக்கியம்.

Update: 2023-02-18 01:56 GMT

மரங்களின் நிழல்:

வீட்டின் அருகில் அதிகபட்ச நிழல் இருப்பது வீட்டை வெப்பம் தாக்காமல் காக்க கூடியது. இது இயற்கையாக அமையக்கூடிய நிரந்தர தீர்வு. அதற்கான வசதி உள்ளவர்கள் வீட்டின் தெற்கு பகுதியிலும் மேற்கு பகுதியிலும் மரங்களை வளர்ப்பது நல்லது. இது மேலும் நம் ஏசியில் இருந்து வெளியாகும் கார்பன் மாசை தவிர்க்கவும் உதவும். பெரிய இடம் இல்லாதவர்கள் தெற்கு பகுதியிலும் மேற்கு பகுதியிலும் தொட்டியில் செடிகளை வைப்பது கூட நல்லதே.

ஜன்னல்களினால் அனுகூலம்:

ஜன்னல்கள் நம் வீட்டை குளுமையாய் வைத்துக் கொள்வதற்கு பெருமளவில் உதவும். கிராஸ் வெண்டிலேஷன் என்ற முறையில் அதாவது வீட்டின் இரு துருவங்களில் காற்று உள்ளே நுழைந்து வெளியே செல்லுமாறு கதவுகளோ ஜன்னல்களோ இருப்பின் எல்லாவற்றையும் காலை நேரங்களில் திறந்து வைப்பது மிகவும் நல்லது. இதனால் வீட்டிற்குள் சுத்தமான காற்று ஒரு பகுதியில் புகுந்து மறுபகுதியில் வெளியேறும் போது வீட்டில் உள்ள வெப்பத்தை கடத்திச் செல்லும். அடுத்ததாக ஜன்னல்களுக்கு திரைசீலைகளை அமைப்பது பயனளிக்கும். ஜன்னல்களில் போடும் திரை சிலைகள் இன்சுலேட்டிங் வகையாக இருக்க வேண்டும். அதாவது கோடைகாலத்தில் வெப்பத்தை உறிந்து கொள்ளக் கூடியதாகவும், குளிர் காலத்தில் குளிரிலிருந்து காக்கக்கூடியதாகவும் இருக்கும் திரை சிலைகளை உபயோகிக்க வேண்டும்.

மொட்டைமாடி தளங்களை வெள்ளை அடிப்பது:

வீட்டின் மொட்டை மாடியில் உள்ள தளங்களுக்கு நாம் சில நேரங்களில் சிவப்பு நிற டெரகோட்டா பெயிண்ட் அடிப்போம். ஆனால் பல நேரங்களில் அதற்கு நாம் எதுவும் செய்வதில்லை. ஆனால் மொட்டை மாடி தளங்களில் வெள்ளை நிற பெயிண்ட் அடிப்பது நம் வீட்டிற்குள் வரும் வெப்பத்தை ஐந்து முதல் பத்து டிகிரி வரையில் குறைக்க கூடியது என்பது நிஜம். ஆம்! வெள்ளை நிறம் சூரிய ஒளியை பிரதிபலிக்கச் செய்து விடும். எனவே வெப்பம் முழுவதுமாக வீட்டிற்கு உள்ளே கடத்தப்படுவதில்லை. இது கோடை வெப்பத்தை ஐந்து முதல் 1பத்து டிகிரி வரை குறைக்கும். இதனால் தான் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வீட்டின் மேற்பகுதி தளத்தில் வெள்ளை அடிப்பது வழக்கம். நல்ல தரமான வெள்ளை நிற, நீர் புகா பெயிண்டை தேர்ந்தெடுத்து இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வீட்டின் தளத்தை வெள்ளை அடிப்பது சிறந்தது.

மாடித்தோட்டம்:

மாடித்தோட்டம் போடுவதற்கான வசதி இருப்பவர்கள் இதை கண்டிப்பாக செய்யலாம். தொட்டிகளிலோ அல்லது பிளாஸ்டிக் ஷீட்டுகள் போட்டோ மணல் அல்லது தேங்காய் நார் போன்றவற்றை உபயோகித்து செடி வளர்ப்பது நம் வீட்டிற்கு காய்கறி பழங்கள் பூக்கள் கொடுப்பதுடன், வீட்டிற்குள் வெப்பத்தை முழுவதுமாக தடுத்து விடும். தேனீக்கள் பறவைகள் பட்டாம்பூச்சிகள் போன்றவைகளை நகர்ப்புறங்களில் ஈர்ப்பதற்கும் இந்த மாடி தோட்டங்கள் வழி வகுக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த வழியை பின்பற்றுவது மூலம் நாம் நம் இடத்தை பசுமையாக்குவதுடன் கோடையின் தாக்கத்திலிருந்தும் விடுபடலாம்.

தளங்களில் தட்டிகள் போடுவது:

வீட்டின் தளங்களில் கசகசா கார்பெட் என்று அழைக்கப்படும் தட்டிகளை வாங்கி தளத்தின் மேற்பரப்பில் போட்டு அதன் மேல் நீர் தெளித்து விடுவர். இதே போல் தென்னை ஓலை பனை ஓலை போன்றவை கிடைத்தால் அவற்றையும் வீட்டின் தளத்தின் மேல் பரத்தி வைத்து அதன் மேல் தினமும் மாலை வேளையில் நீர் தெளித்து வைப்பது வீட்டிற்குள் வெப்பம் பரவுவதை பெருமளவில் குறைத்து விடும். அதே போல் வீட்டின் ஜன்னல்களுக்கு மற்றும் பால்கனிகள் திறந்த வெளியாக இருப்பின் அங்கேயும் வெட்டிவேர் தட்டி, நன்னாரி தட்டி மற்றும் மூங்கில் தட்டிகளை போட்டு அவற்றின் மேல் நீர் தெளித்து வைப்பது வீட்டின் உள்ளே குளிர்ச்சியையும் நறுமணத்தையும் வீச செய்வதாய் இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்