சொந்த வீடு கட்டுபவர்களுக்கு கம்பிகள் பற்றி பல சந்தேகங்கள் இருக்கும். ஒரு சிலர் கம்பியின் நிறத்தை வெறும் கண்களால் பார்த்தே அதன் தரத்தை அறிந்து கொள்வார்கள். ஒரு அடி நீளம் கொண்ட கம்பியை கைகளில் பிடித்து கொண்டு அதன் மறுமுனையை தரையில் தட்டும்போது அதில் ஏற்படும் அதிர்வுகளைக் கொண்டு கம்பியின் தரம் அறியப்படுகிறது.
கட்டுமானப்பணிகளில் அஸ்திவாரம் முதல் மேல் தளம் அமைப்பது வரை கான்கிரீட் உபயோகத்தின், ஒவ்வொரு நிலையிலும் உள்ளீடாக கம்பிகள் இருக்கும். கான்கிரீட்டின் கொள்ளளவு அடிப்படையில் கம்பிகளை கூடு போன்று தயாரிக்கப்படும். அது சென்டரிங் அல்லது கம்பி கட்டுதல் எனப்படும்.
இரும்பு கம்பிகள் வாங்கும்போது அதில் சோதனை செய்த சான்றிதழ், ஐ.எஸ்.ஐ தரச்சான்றிதழ், கம்பியின் மேல் பதிக்கப்பட்ட தர முத்திரை, பயன்பாட்டாளர் மற்றும் கட்டிட பொறியாளர் அங்கீகாரம் பெற்ற தயாரிப்பு உள்ளிட்ட விஷயங்களை கவனிக்க வேண்டும்.
கட்டிடங்களின் ஸ்திரம், நீண்ட ஆயுள் மற்றும் இயற்கை அழிவுகளிலிருந்து பாதுகாக்க வேண்டுமெனில், கான்கிரீட்டுடன் சேர்க்கும் இரும்பு கம்பிகள் எண்ணெய் பிசுக்கு, சேறு, மண், இதர பிசிறுகள் இல்லாமல், சுத்தம் செய்து கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். அசுத்தங்கள் காரணமாக பிணைப்பு வலுவாக இல்லாமல், கட்டிட வலிமை பாதிக்கப்படக்கூடும்.
இரும்பு கழிவுகளை உருக்கி கம்பிகள் தயார் செய்யப்படுவதால், ஒவ்வொரு முறையும் கம்பிகளை சோதித்தே பயன்படுத்த வேண்டும். மொத்த கம்பிகளில் இரண்டு அடி அளவுள்ள ஒரு துண்டு கம்பியை எடுத்து, அதன் நீட்டல், வளைவு திறன் ஆகியவற்றை சோதிக்கலாம். கம்பிகளை வளைக்கும் போது அதில் முறிவுகள் ஏற்படக் கூடாது. யுனிவர்சல் டெஸ்டிங் மிஷின் மூலம் கம்பிகளின் குறுக்களவு, தாங்கும் திறன் உள்ளிட்ட தகவல்களை அறியமுடியும்.
* ரவுண்டு கம்பிகளின் வலிமை சுமார் 250 N/mm2
* சாதாரண முறுக்கு கம்பிகளின் வலிமை சுமார் 400 N/mm2
* டி.எம்.டி கம்பிகளின் வலிமை சுமார் 500 N/mm2
முறுக்கு கம்பிகள் சி.டி.டி அதாவது கோல்டு ட்விஸ்டடு டிபார்ம்டு என்ற முறையிலும், முறுக்காத கம்பிகள் டி.எம்.டி அதாவது தெர்மோ மெக்கானிக்கல்லி ட்ரீட்டடு என்ற முறையிலும் தயாரிக்கப்படுகின்றன. டி.எம்.டி முறையில் தயாரிக்கப்படும் கம்பிகள் வெப்ப குளிரூட்டு முறையில் சுமார் 1000 டிகிரி செல்சியஸ் அளவிலிருந்து 500 டிகிரி செல்சியஸ் வரை பதப்படுத்தப்படுவதால் குறைந்த கார்பன் அளவு, வலு, துரு பாதிக்கப்படாததாகவும் சொல்லப்படுகிறது.
கட்டுமான பணிகளுக்கான கம்பிகளின் அளவு, அதற்கான செலவு போன்றவை ஒவ்வொரு கட்டிடத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டிடத்திற்கான விதிமுறைகள் ஆகிய காரணங்களை பொறுத்து அமைகிறது. கட்டுமான பொறியாளர், கட்டிடக்கலை வல்லுனர், வடிவமைப்பு பொறியாளர் ஆகியோரை ஆலோசித்து தக்க முறையில் கம்பிகளை பயன்படுத்தும்போது பட்ஜெட் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
இந்திய தர நிர்ணய கழகம் கம்பிகளின் தரத்தை IS1786/1985, TM Fe 415, Fe500 என்ற மூன்று கிரேடுகளாக பிரித்துள்ளது. கட்டிடங்களுக்கு Fe 415 தரம் கொண்ட கம்பிகளையாவது குறைந்தபட்சம் பயன்படுத்தவேண்டும் என்று பொறியாளர்களால் வலியுறுத்தப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் கம்பிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச வலிமை Fe 500 ஆகும்.