பழங்கால கட்டிடங்கள் அமைக்கும் முன் செய்யப்பட்ட பூமி பரீட்சை
பழங்கால மன்னர்கள் கால கட்டிடங்களை அமைப்பதற்கு முன்னர் இன்றைய மண் பரிசோதனை போன்ற பூமி பரீட்சை முறைகள் கடைப்பிடிக்கப்பட்டன.;
அன்றைய காலகட்டத்தில் நிலங்கள் ஏராளமாக இருந்ததால், சரியான நிலத்தை தேர்ந்தெடுப்பது சிக்கலாக இருந்தது. அதற்காக அனுபவம் மிக்க நிபுணர்களைக் கொண்டு நிலம் பரிசோதிக்கப்பட்டு, குடியிருப்புகள் அல்லது அரண்மனைகள் கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டது.
இன்று நவீன முறைப்படி கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன் சம்பந்தப்பட்ட மனையில் மண் பரிசோதனை செய்வது வழக்கம். இக்காலத்தில் கடைப்பிடிக்கப்படும் தொழில்நுட்ப அம்சங்களை பயன்படுத்தி உயரமான கட்டிடங்கள் அமைக்கப்படுவதுபோல அக்காலங்களிலும் பூமி பரீட்சை செய்து இடத்தை தேர்ந்தெடுத்து உயரமான கட்டுமானங்களை அமைத்துள்ளார்கள்.
அன்றைய காலகட்டத்தில் நில அமைப்புகளையும், பளு தாங்கும் திறன் மற்றும் மண்ணின் தன்மை ஆகியவற்றை கண்டறிய பல முறைகள் இருந்தன. நிலத்தின் தன்மையை நிறம், மணம், ஓசை, தொடு உணர்வு, தூசி என ஐந்தாக பிரித்து பரீட்சை செய்தனர்.
பூமியின் நிறத்தை வெள்ளை, பொன் நிறம், சிவப்பு, கருப்பு என்று நான்கு விதமாக வகைப்படுத்தி இருந்தார்கள். அந்த நிறங்களை மையப்படுத்தி பூமியின் தன்மையை அவர்கள் எளிதாக கண்டறிந்தனர். கருப்பு நிற நிலப்பகுதி குடியிருப்புகளுக்கு பொருந்தாது என்று கருதப்பட்டது. ஆனால், இன்று அஸ்திவார தொழில்நுட்பம் மூலம் எந்த மண்ணிலும் கட்டிடங்கள் அமைக்கலாம்.
பின்னர், நிலத்திலிருந்து கிளம்பும் மணத்தை முகர்ந்து அறிந்தார்கள். பாலின் மணம், பூக்கள் வாசனை, கிழங்கு வாசம் மற்றும் தண்ணீரின் மணம் கொண்ட நிலங்கள் பெரிய கட்டமைப்புகள் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டது. புன்னை மலர், ஜாதி முல்லை, தாமரை, தானியங்கள், பாதிரிப்பூ மற்றும் பசுவின் மணம் போன்ற வாசனை கொண்ட நிலங்களில் குடியிருப்புகள் அமைக்கலாம் என ஏற்கப்பட்டது. தயிர், நெய், தேன், எண்ணெய், இரத்தம் மற்றும் மீன் ஆகிய மணம் கொண்ட நிலங்கள் வேண்டாம் என விலக்கப்பட்டன.
நிலத்தை கொத்தும் போது கேட்கும் சப்தம், குதிரை கனைப்பது, யானையின் பிளிறல், மூங்கில் உராய்தல், வீணை நாதம், கடல் அலையின் ஓசை ஆகிய சப்தங்கள் எழுமானால் அந்த நிலம் கட்டிடங்கள் அமைக்க சிறப்பானது என்று கருதினார்கள்.
ஒரு நிலத்தில் முதலில் காலடி வைக்கும்போது, அதன் மையப்பகுதியை சுத்தப்படுத்தி, கைகளால் தொட்டு பார்த்து நிலத்தின் இயல்பான தன்மைகளை கண்டறிந்தனர். அதாவது, நுட்பமான தொடு உணர்வு கொண்டவர்கள் நிலத்தின் பசைத்தன்மை, சொர சொரப்பு, ஈரப்பதம் மற்றும் வறண்ட தன்மை ஆகியவற்றை உணர்ந்து கட்டிடம் நிலைத்து நிற்குமா என்று கணித்தார்கள்.
நிறைவாக, அதிகாலையில் நிலத்தின் ஒரு பகுதி மண்ணை எடுத்து உலர்த்தி, அதை வலது உள்ளங்கையில் கொஞ்சம் எடுத்து, கிழக்கு திசை பார்த்து நின்று மண்ணை ஊதி பறக்க விட வேண்டும். அவ்வாறு ஊதும்போது அதிலிருந்து வெளிப்பட்டு பறக்கும் தூசிகள் மற்றும் கீழே விழும் மண் ஆகியவற்றைக்கொண்டு பூமியின் உறுதித் தன்மையை கணித்துள்ளனர்.