நாட்டின் வளர்ச்சிக்கு சான்று ஸ்மார்ட் சிட்டி
பலமுறை நாம் ஊடகங்களிலும் மக்களுடன் பேசும் போதும் கேட்கும் ஒரு சொல் ஸ்மார்ட் சிட்டி என்பது. அது என்ன ஸ்மார்ட் சிட்டி? இந்திய அரசாங்கத்தால் நாடெங்கும் உள்ள மெட்ரோ நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக மாற்ற, 100 நகரங்களை தேர்ந்தெடுத்து ஒரு திட்டமாக தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தின் அடிப்படையில் இன்று பல நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக உருவெடுத்து இருப்பதை காண முடிகிறது.
ஸ்மார்ட் சிட்டி என்றால் என்ன?
நகரின் கட்டுமானங்களையும் தினசரி செயல்பாடுகளையும் சிறப்பாகவும் முழுமையாகவும் வடிவமைக்க உதவும் தொழில்நுட்பங்களையும் தகவல்களையும் பயன்படுத்தி வளர்ச்சி காண்பதே ஸ்மார்ட் சிட்டி என்பதாகும். இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், பசுமை நிறைந்த இடங்களை உருவாக்குவதிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த நகரங்களில் பரிவர்த்தனை தொழில்நுட்பம் மூலம் பொது போக்குவரத்தையும் உற்பத்தி தொழில் கூடங்களையும் இயக்குவது என்பது பெருமளவில் அழியக்கூடிய இயற்கை வளங்களை காப்பதற்கான வழிமுறைகளைக் கொண்டதாகும். மேலும் இந்த நகரங்களில் பொது கட்டுமானங்களும் சுகாதாரமும் புதிய தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்டு சிறப்பான முறையில் இயங்குவது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட் சிட்டிகளில் இருக்கக்கூடிய முக்கிய தொழில்நுட்பங்கள்
1. கிளவுட் கம்ப்யூட்டிங்
2. மெஷ் நெட்வொர்க்கிங்
3. பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சேவைகளில் சுலபமாக உபயோகிக்க கூடிய ஆப்கள் (யூஐ பேஸ்ட் இன்டர்பேசஸ்) ஏடிஎம் கவுண்டர்களிலும், கட்டணங்கள் செலுத்துவதற்கும், டிக்கெட் வாங்கும் இடங்களிலும் இந்த ஆப்கள் பயன்படுத்தப்படுகிறது.
4. போக்குவரத்து (மெட்ரோ, பேருந்து, டாக்ஸி சேவைகள்)
மேற்கூறிய எல்லா தொழில்நுட்பங்களும் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதமாக எல்லா இடங்களிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. மொத்தத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகர மேலாண்மையை எளிமையாகவும் அதே நேரத்தில் சிறப்பாக வசதியானதாகவும் தொழில்நுட்பங்கள் மூலம் இயங்கச் செய்வதே நோக்கமாகும். அதாவது நகரத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய வேலைக்கு செல்வதிலும், சுலபமாக வாகனங்களை நிறுத்துவதற்கும், தங்களுக்கு தேவையான ஆவணங்களை அரசு அலுவலகங்களில் இருந்து சுலபமாக பெறுவதற்கும், கட்டணங்களை வீட்டில் இருந்தபடியே கட்டுவதற்கும், தங்களுடைய எல்லா தேவைகளும் சுலபமாகவும் பிரயத்தனமின்றியும் நடைபெறுவதற்கும் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் உதவுகிறது.
ஸ்மார்ட் சிட்டி நிர்மாணத்திற்கு முதல் படி
அர்பன் பிளானிங் என்று அழைக்கப்படும் நகர வரைவு என்பதே ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்படுவதற்கான முதல் படி. இந்த நகர வரைவு ஒவ்வொரு காலகட்டத்திலும் நாகரீகங்கள் வளர்ச்சி அடைந்து அடுத்த நிலைக்கு செல்வதற்கு தேவைப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 1950 மற்றும் 60களில் உலகப் போர்களுக்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் தங்களுடைய நகரங்களை முழுமையான அளவில் வாழ்வதற்கு ஏற்ற சிறப்பான இடமாக மாற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்திற்கு முக்கியமான உயிர் நாடி என்பது பொதுமக்களின் தினசரி வாழ்க்கைத் தரம் உயர்வது, இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுவது, அதற்கான பசுமை திட்டங்கள் ஒவ்வொரு துறையிலும் கடைப்பிடிக்கப்படுவது, சுற்றுச்சூழலுக்கு உகந்ததான வழிமுறைகளை பேணுவது, டிஜிட்டல் உலகத்திற்கும் நிஜ உலகத்திற்கும் இடையே சரியான இணக்கமான தொடர்பை ஏற்படுத்தி அதன் மூலம் நகரத்தில் நடக்கும் எல்லா செயல்பாடுகளையும் சிறப்பானதாகவும் துரிதமானதாகவும் மாற்றியமைப்பது போன்றவைகள் என்று கூறலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் பல நகரங்கள் உள்ளன. அந்த நகரங்களில் தான் அதன் சுற்று வட்டார பகுதியில் வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டப்படுவது செயல்படுத்தப்படுவது போன்றவை எல்லாம் நடக்கின்றன. எனவே ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியை தீர்மானிப்பது நகரங்களின் வளர்ச்சியும் அதன் தொழில்நுட்பங்களும் தான் என்றால் மிகையல்ல. எனவே நம் நாட்டின் பல மாநிலங்களிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக உருவெடுக்கும் போது ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி அபரிமிதமாக உயரும் என்பதை மறுப்பதற்கில்லை.