பவர் பத்திரம் - இவற்றையும் மனதில் கொள்வது உத்தமம்

Update:2023-08-26 12:42 IST

இன்றைய சூழலில் பல காரணங்களின் அடிப்படையில் ஒருவர் தனக்கு சொந்தமான அசையா சொத்துக்களை விற்க, சட்டப்படி வரையறை செய்யப்பட்ட அதிகாரம் பெற்ற ஒருவரை சட்டப்படி நியமிக்கலாம். அதை சட்டப்பூர்வமாக ஆக்குவது அதிகார பத்திரம் ஆகும் அதில் பொது அதிகார பத்திரம் (General Power Of Attorney) மற்றும் தனி அதிகார பத்திரம் (Limited Power Of Attorney) என இரு வகை உண்டு.

பொது அதிகார பத்திரம் என்பது அதன் முகவராக உள்ளவருக்கு சம்பந்தப்பட்ட சொத்தை விற்கவும், நிலத்தை மனைப்பிரிவுகளாக ஆக்கவும், அரசு அலுவலகங்களில் சொத்து சம்பந்தமான ஆவணங்களில் கையொப்பம் இடவும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கும்

தனி அதிகார பத்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்கு மட்டும் அதிகாரம் தரப்பட்டிருக்கும். அதாவது, சொத்தை விற்பது அல்லது நிலத்தை மனைப்பிரிவுகளாக பிரிப்பது போன்ற குறிப்பிட்ட செயலை தவிர வேறு எதையும் அவர் மேற்கொள்ள இயலாது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள், மூத்த குடிமக்கள், பெண்கள் ஆகியோரே அவர்களது சார்பில் செயல்படுவதற்கு அதிகார முகவர்களை நியமிப்பது வழக்கம் என்பது அறியப்பட்டுள்ளது. பொதுவாக அதிகாரப்பத்திரம் கொடுப்பவர் அல்லது பெற்றவர் இறந்துவிடும் நிலையில் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கூட்டாக அதிகாரம் கொடுத்திருப்பது மற்றும் பெற்றிருப்பது ஆகிய நிலைகளில் யாரேனும் ஒருவருக்கு இறப்பு நிகழ்ந்தாலும் பத்திரம் சட்டப்படி தனது நிலையை இழந்துவிடும்.

2009 நவம்பர்-1 முதல் அதிகார பத்திரம் பதிவு செய்வதற்கான புதிய முறைகள் அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி அதிகார பத்திரம் தமிழகத்தில் எந்த சார்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், சொத்து அமைந்துள்ள சார்பதிவு அலுவலகத்துக்கு அதன் விவரங்கள் அனுப்பப்படும். ஆனால், 2009 நவம்பர், 1ம் தேதிக்கு முன்னர் பதிவான பவர் பத்திரம் குறித்த விவரங்கள் வில்லங்க சான்றிதழில் இருக்காது. அதனால், பவர் பெற்றவரிடம் வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் சமயத்தில் அது முறையாக ரத்து செய்யப்பட்டிருப்பதை அறிந்து கொள்ளவேண்டும். அந்த நிலையில் கீழ்க்கண்ட விவரங்களை உறுதி செய்து கொண்டு தக்க முடிவெடுக்கலாம்.

சம்பந்தப்பட்ட சொத்தின் உரிமையாளரிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பவர் ரத்து செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது பாதுகாப்பானது. சொத்துக்கான உரிமையாளரை நேரில் தொடர்பு கொள்ளாமல் பவர் ஆப் அட்டர்னி மூலமாகவே அனைத்து பதிவு நடவடிக்கைகளையும் மேற்கொள்வது பல சிக்கல்களை உருவாக்கலாம்.

சொத்தின் உரிமையாளர் அல்லது பவர் ஆப் அட்டர்னி மூலம் மட்டுமே அதிகார பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அதற்கான நகல் வேண்டி விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் பவர் ரத்து செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்று அறிந்து கொள்ளமுடியும்.

Tags:    

மேலும் செய்திகள்