சிக்கனமாய் வீடு கட்டுவோமா

சொந்தமாய் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. நிதி நிலைமை இடம் கொடுக்காத பட்சத்தில் அதை தள்ளி போடுவோரும் நிறைய. ஆனால் சிக்கனமாய் வீடு கட்ட பல வழிகள் உண்டு. மனை வாங்குவதிலிருந்து வீடு கட்டி முடிக்கும் வரை பல்வேறு விஷயங்களை சரியான முறையில் பின்பற்றும்பொழுது குறைவான செலவில் அழகான வீட்டை நாம் கட்ட முடியும்.;

Update:2023-02-18 07:42 IST

மனை தேர்ந்தெடுப்பது:

நம் வீட்டை கட்டுவதற்கான மனையை சரியாக தேர்ந்தெடுத்து விட்டாலே பெருமளவில் செலவை குறைக்க முடியும். சாலையில் இருந்து மிகவும் பள்ளமாகவோ மிகவும் மேடாகவோ இல்லாத வகையில் உள்ள மனையை தேர்ந்தெடுப்பது முக்கியம். ஏனென்றால் வீட்டின் உயரத்தை தூக்குவதற்கும் குறைப்பதற்கும் நாம் நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கும். கணிசமான ஒரு தொகையை நாம் பயன்படுத்தினால் மட்டுமே நம் வீட்டின் உயரம் சாலையின் மட்டத்திற்கு வர முடியும். எனவே மனையை சரியான அளவில் பார்த்து வாங்குவது அவசியம்.

வீட்டின் அளவுகளை எளிமையாக திட்டமிடுதல்:

வீட்டிற்க்கான பிளான் அல்லது வரைபடத்தை அமைக்கும் பொழுது அதை மிகவும் எளிமையானதாக அமைக்க வேண்டும். வீட்டின் உட்புறத்தில் உள்ள அறைகள் வளைவானதாகவோ பன்முனை கொண்டதாகவோ நாம் அமைக்க விரும்பினால் அது கட்டுமான செலவை உயர்த்தி விடும். எனவே அறைகளை சதுர அல்லது செவ்வக வடிவில் கச்சிதமாக திட்டமிட்டு கொள்ளும் பொழுது கட்டுமான செலவு பெருமளவில் குறையும்.

கட்டுமான பொருட்களை தேர்ந்தெடுத்தல்:

கட்டுமானத்திற்கான பொருட்களை சரியான முறையில் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். பல விற்பனையாளர்களின் விலை பட்டியலை வாங்கி அதில் குறைவான விலை, தரமான பொருள் போன்றவற்றை விசாரித்து ஒரே இடமாக கட்டுமான பொருட்களை வாங்குவது நல்லது. பொருட்கள் விலை குறைவாக இருந்தாலும் தரமானதாக இருக்கிறதா என்பதும் மிகவும் முக்கியம்.

பளு தாங்கும் கட்டுமானம் சிறந்தது:

லோட் பேரிங் என்ற பளு தாங்கும் கட்டுமானம் சிறந்ததாக இருக்கும். ஏனென்றால் நாம் கட்டப் போகும் வீடு அதிக உயரம் அதிக அடுக்குகள் கொண்டதாக இல்லாத பட்சத்தில் இது சிக்கனத்திற்கு வழிவகுக்கும். குறைந்த அளவு இரும்பு கம்பிகளும் கான்கிரீட்டும் இதற்கு தேவைப்படும். மேலும் லோட் பேரிங் கட்டுமானத்திற்கு குறைவான நேரமும் குறைவான மனித உழைப்பும் தேவைப்படும் என்பதால் சிக்கனமும் கிட்டும்.

கட்டிடத்தின் அஸ்திவாரம்:

ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் என்பது மிகவும் முக்கியம் இது மொத்த வீட்டின் கட்டுமான செலவில் 10 முதல் 15 சதவிகிதத்தை எடுத்துக் கொள்ளும். பொதுவாக தரையில் இருந்து மூன்று முதல் நான்கு அடி ஆழத்திற்கு கடகால் தோண்டப்படும். ஆனால் சில வகை மண் தன்மைக்கேற்ப இரண்டு அடி ஆழம் எடுத்தாலே போதுமானது. அதை கணக்கிட்டு அதற்கு ஏற்ப தோண்டப்படும் கடைக்கால் ஆழம் குறைவாக இருக்கும் பட்சத்தில் அஸ்திவாரம் அமைப்பதற்கான செலவும் பெருமளவில் குறைந்து விடும்.

ஆயத்த கட்டுமான பொருட்கள்:

தற்போதைய காலங்களில் ஆயத்த கட்டுமான பொருட்கள் பெருமளவில் செலவை குறைக்க உதவுகிறது. தரை அமைக்கும் ஸ்லாப்புகள் ஜன்னல்கள் கதவுகள் போன்றவை ஆயத்த தயாரிப்பாக பார்த்து வாங்கும் பொழுது வீடு கட்டும் இடத்தில் வந்து செய்வதைவிட இது பெருமளவில் சிக்கனத்திற்கு வழி வகுக்கிறது. எனவே முடிந்த வரையில் இந்த ஆயத்த கட்டுமான பொருட்களை வீட்டில் பயன்படுத்தும் பொழுது செலவு குறையும்.

படிக்கட்டுகள் அமைத்தல்:

படிக்கட்டுகள் கட்டுவது என்பது அதிக நேரமும் செலவும் பிடிக்கக்கூடிய ஒரு கட்டுமான பணி. ஆனால் தற்போதைய காலங்களில் 'பிரீ காஸ்ட் ஸ்டேர்கேஸ்' முறையில் வீட்டிற்கான படிக்கட்டுகளை ஏற்கனவே கட்டி விற்கப்படுகிறது. இதை அப்படியே கொண்டு வந்து நம் வீட்டில் நிறுவி விட வேண்டியது தான் இதற்கு ஒரு கேண்டி லீவர் கொடுத்து பொருத்திவிட வேண்டும். இதன் மூலம் ஆல் கூலி பெருமளவில் குறைக்கப்படுகிறது. அத்துடன் கட்டுமான செலவும் குறைவதுடன் நேரமும் மிச்சப்படுகிறது.

மின் சாதன பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும்:

மின் அமைப்பு நிறுவும் பொழுதும் சுவிட்சுகள் சாக்கெட்டுகள் அமைக்கும் போதும் அவை நல்ல தரமான பிராண்டாக இருப்பது அவசியம். இதனால் கட்டுமானத்திற்கு பின்பான பழுதுகள் குறைக்கப்படும். மேலும் இதனால் செலவுகளும் குறையும். எனவே ஒரு கடைக்கு பல கடைகள் சென்று விசாரித்து நல்ல பிராண்ட் ஆகவும் நியாயமான விலை கொண்டதாகவும் பார்த்து வாங்கி உபயோகிப்பது சிறந்தது.

மேற்கூறிய குறிப்புகளை பின்பற்றி வீடு கட்டும் பொழுது வீட்டின் செலவு பெருமளவு குறைவதுடன் குறிப்பிட்ட காலத்தில் நாம் வீட்டை கட்டி முடிக்கவும் கட்டுமானத்திற்கு பின்பான பராமரிப்பு செலவுகளை குறைப்பதற்கும் உபயோகமாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்