அடுக்குமாடி குடியிருப்புகளில் செடிவளர்ப்பு சாத்தியமா?

பொதுவாகவே வீடுகளில் எந்த ஒரு அலங்காரப் பொருட்களை அமைப்பதாக இருக்கட்டும் அல்லது செடி வளர்ப்பதாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் நமக்கு என்று சொந்தமாக ஒரு வீடு இருந்தால் இதையெல்லாம் செய்யலாம்..;

Update: 2022-07-30 01:09 GMT

அதுவும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்துகொண்டு செடி வளர்ப்பதற்கு ஆசைப்படலாமா? என்று புலம்புவதைப் பார்க்க முடியும்.அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தாலும்,தனி வீடுகளில் இருந்தாலும் மாடியிலேயே தோட்டம் அமைத்து பராமரிக்கலாம் என்பதை இப்பொழுதுதான் மக்கள் ஏற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தவும் செய்கிறார்கள்.

*அடுக்குமாடி குடியிருப்புகளில் பயனுள்ள மாடித் தோட்டம் அமைப்பதற்கான உதவிக்குறிப்புகள்

தோட்டக்கலை என்பது ஒரு திறமையான கலையாக இருந்தாலும், செடிகளை பராமரிப்பதற்கும் அவற்றை பாதுகாப்பதற்கும் அதிகப்படியான பொறுமையும், உழைப்பும் தேவை.சிலருக்கு ஆர்வம் மட்டும் இருக்கும் ஆனால் அவற்றை பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் தேவையான உழைப்பை தருவதற்கு தயாராக இருக்க மாட்டார்கள்.ஆனால் சில எளிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் அதை எளிதாக்கி, உங்கள் தோட்டத்தில் தாவரங்களை ஆரோக்கியமாக வளர்க்கலாம்.அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது:

* ஒவ்வொரு செடிக்கும் தொடக்கத்திலேயே அதனுடைய வளர்ச்சிக்கு ஏற்றார்போல மண் தொட்டிகள், பிளாஸ்டிக் தொட்டிகள் அல்லது குரோ பேக்குகளை தேவையான அளவுகளில் தேர்வு செய்துகொள்ள வேண்டும்..

* மாடி மற்றும் பால்கனியில் செடிகளை வைக்க விரும்புபவர்கள் இப்பொழுது வரும் தண்ணீர் கேன்களுக்கு வெளிப்புறத்தில் அழகான வண்ணங்களை பூசியும் உபயோகப்படுத்தலாம்.

* இவ்வாறு தொட்டிகளில் வைக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பொழுது அவை மண்ணுடன் கலந்து வெளியில் சிந்தி தரை அழுக்காவதைத் தவிர்ப்பதற்காக சில படர் செடிகளை ஒவ்வொரு தொட்டியிலும் வைத்துவிடலாம். இந்த படர் செடிகள் தொட்டியின் மேற்புறத்தில் விளிம்பு வரை வளர்ந்தவுடன் அவற்றை ட்ரிம் செய்துவிடலாம். இவ்வாறு ஒவ்வொரு தொட்டியிலும் நாம் வளர்க்கக்கூடிய செடிகளுடன் இவற்றை வைக்கும்பொழுது தண்ணீர் கீழே சிதறினாலும் தரையில் அழுக்காவது தவிர்க்கப்படுகின்றது.

* வாரம் ஒரு முறை நம்முடைய தோட்டத்தில் வேலை செய்வதற்கென்று நேரத்தை ஒதுக்கி கொண்டோமானால் அதிகப்படியான களைகள் மற்றும் குப்பை சேருவதைத் தவிர்க்கலாம்.

* ஓரளவு இடைவெளிவிட்டு தொட்டிகளை வைக்கும்பொழுது ஒவ்வொரு செடியின் வளர்ச்சியிலும் ஏற்படும் மாற்றத்தை எளிதாக கவனிக்க முடியும். அதேபோல செடிகளுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டாலும் அவை எளிதில் பரவுவதைத் தவிர்க்க முடியும்.மேலும் ஒவ்வொரு செடிக்கும் வளர்வதற்கான காற்றோட்டம் தேவையான அளவு கிடைத்து அவை ஆரோக்கியமாக வளர்வதற்கும் போதிய இடைவெளி அவசியமாகும்.

* ஒவ்வொரு தொட்டிகளுக்கு கீழும் அந்த தொட்டிகளை விட சற்று பெரிய அளவில் இருக்கும் தட்டுகளை வைக்கும்பொழுது தொட்டிகளில் இருந்து வெளியேறும் அதிகப்படியான நீர் அவற்றில் தங்கிவிடுவதால் தரை வீணாவது தவிர்க்கப்படும்.

* சில நேரங்களில் தொட்டிகளில் சிவப்பு அல்லது கருப்பு எறும்புகள் வலைகளை வைக்கும்பொழுது அந்தச் செடியை காப்பாற்றுவது என்பது மிகக் கடினமான ஒன்றாகிவிடும். இதுபோன்ற சமயங்களில் மஞ்சள் தூள் அல்லது சிறிதளவு கேமேக்சினை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

* நம் வீட்டு சமையலறை கழிவுகளை உரமாக மாற்றி அவற்றை செடிகளுக்கு போடும் பொழுது அவற்றின் வளர்ச்சி அபாரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

* சில கிழங்குகளை வேக வைக்கும் நீரை நாம் சமையலுக்கு உபயோகிக்காமல் அவற்றை கொட்டி விடுகிறோம். அந்த நீரை வீணாக்காமல் இதுபோன்று வளர்க்கும் செடிகளுக்கு ஊற்றலாம். அந்த நீரிலும் செடிகளுக்கு தேவையான சில சத்துக்கள் இருக்கின்றன.

* பீட்ரூட் மற்றும் கேரட் தோல்கள் ,முட்டை ஓடுகள் மற்றும் உபயோகப்படுத்திய டீ தூள்களை மண்ணுடன் கலந்து ரோஸ் மற்றும் கிரிஸான்தமம் செடிகளுக்கு போடும்பொழுது அவை நன்றாக வளர்வதுடன் அவற்றின் பூக்களின் வண்ணம் கவர்ச்சிகரமாகவும் இருக்கின்றது.

* மொட்டை மாடியில் தோட்டம் அமைக்கும் பொழுது எந்த இடத்தில் எந்த செடியை வைக்க வேண்டும் என்பதை சரியாக தேர்வு செய்து அமைப்பது முக்கியம்.சில செடிகளை நேரடியான வெய்யிலில் வைத்து வளர்க்கக்கூடாது..சில செடிகளுக்கு சூரியனின் வெளிச்சமும், வெப்பமும் நேரடியாக தேவைப்படும்.எனவே செடிகளின் பண்புகளை முழுதாக அறிந்து கொண்டு நிழல் தேவைப்படும் செடிகளுக்கு பசுமை வீடுகளை அமைத்து அல்லது பால்கனியில் வெயில் குறிப்பிட்ட நேரம் வரை படக்கூடிய இடத்தில் வைத்து வளர்க்கலாம்.

* செடிகளுக்கு தண்ணீர் விடும் பொழுது அதற்கென்று பிரத்தியேகமாக இருக்கும் பூவாளிகளைக் கொண்டு செடியின் இலைகள் மற்றும் பூக்களிலும் படுவதுபோல் தண்ணீர் ஊற்ற வேண்டும்.. இவ்வாறு செய்யும்பொழுது இலைகளின் மேல் படிந்திருக்கும் அழுக்குகள் தண்ணீரில் கரைந்து இலைகளுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து அவை ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவி செய்கின்றன.

* சிலர் மாடித் தோட்டத்தை துவங்கும் பொழுது மிகவும் அதிகமான செடிகளை வாங்கி வைத்துக்கொண்டு அவற்றை சரியாக பராமரிக்காமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இது போன்று இல்லாமல் அளவான செடிகளை வாங்கி அவற்றை சரியாக பராமரித்து நமக்கு நம்பிக்கை வந்த பிறகு சிறிது சிறிதாக மேற்கொண்டு செடிகளை வாங்கி வளர்க்கலாம்.

* வீட்டில் மிகவும் சிறிய பால்கனி வைத்திருப்பவர்களாகவோ அல்லது மாடித் தோட்டத்தை எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் அனுமதிக்கமாட்டார்கள் என்று சொல்பவராகவோ நீங்கள் இருந்தால் அது குறித்து கவலை வேண்டாம்.வீட்டிற்குள்ளேயே வைத்து வளர்க்கக்கூடிய போன்சாய் செடிகள் இதுபோன்றவர்களுக்கான வரப்பிரசாதமாகும். போன்சாய் செடிகள் மட்டுமல்லாமல் வீட்டிற்குள்ளேயே வைத்து வளர்க்கக்கூடிய பிரத்தியேகமான செடிகளும் இப்பொழுது ஏராளமாக வந்துவிட்டன.

Tags:    

மேலும் செய்திகள்