அசத்தும் ஐடியாக்கள் கொண்டு வீட்டை அழகு செய்யும் "ஹோம் இன்டீரியர்"

Update: 2023-07-01 09:51 GMT

ஹோம் இன்டீரியர் என்ற வீட்டு அலங்கார பணிகளில் முதலாவது பொருத்தமான பெயிண்டிங் செய்வதாகும். மோனோகுரோம், டை கலரிங் மற்றும் மல்ட்டி கலரிங் ஆகிய 3 விதமான முறைகளில் வீடுகளுக்கான பெயிண்டிங் செய்யப்படுகிறது.

மோனோகுரோம் என்பது கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு அடிப்படை வண்ணங்களை பயன்படுத்தி அறைகள் அல்லது வெளிப்புற சுவர்கள் ஆகியவற்றில் பெயிண்டிங் செய்வதாகும். இதர இரு முறைகளில் வெவ்வேறு கலர்கள் தக்க இடத்திற்கேற்ப கண்கவரும் விதமாக டெக்ஸ்டர்டு, பேட்டர்ன் என வெவ்வேறு வகைகளை பயன்படுத்துவார்கள்.

கதவுகளில் மஞ்சளின் சாயல் கொண்ட நிறம் பெயிண்டிங் செய்யப்பட்டால், மகிழ்ச்சி மற்றும் நேர்மறை எண்ணங்கள் வீடுகளில் நிலவும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்போது, உள் அலங்காரம் மினிமல் என்ற நிலையில் எளிமையாக இருக்க வேண்டும். பல நிறங்கள் கொண்ட அலங்காரங்கள் மஞ்சள் நிறத்துக்கு பொருத்தமாக இருப்பதில்லை.

கண்களுக்கு குளிர்ச்சியான வார்ம் கிரீன் நிறமும், வீட்டின் அறைகளை அழகாக காட்டும். அறைகளுக்குள் பேஸ்டல் நிற வண்ணம் தேர்வு செய்யப்பட்டால், கதவுகளுக்கு பச்சை நிறம் எடுப்பாக இருக்கும்.

வீட்டின் தலைவாசல் உள்ளிட்ட இதர வாசல் கதவுகளின் நிறம் பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சுவர்களுக்கு தேர்வு செய்த நிறத்திற்கு எதிரான, காண்ட்ராஸ்ட் கலரில் கதவுகளுக்கான பெயிண்டிங் செய்வது அழகாக இருக்கும். அல்லது எல்லா கதவுகளையும் அதன் இயல்பான மர வண்ண நிறத்திலேயே வார்னிஷ் பினிஷிங் கொடுத்து எளிமையாகவும் காட்டலாம். அதன் அடிப்படையில், நமது பகுதிகளில் உள்ள நிறைய வீடுகளின் கதவுகள் 'உட் பிரவுன்' கலரில் பெயிண்டிங் செய்யப்பட்டிருக்கும்.

நீல நிற பெயிண்டிங் கதவுகளுக்கு ஸ்டைலான தோற்றத்தை அளிக்கும். சிவப்பு நிறத்தின் சாயல் உள்ள நிறங்கள் பளிச்சென்று காண்பவர்களின் கண்களை கவரும். வெள்ளை நிறத்தை தேர்வு செய்யும்போது சுவர்கள் காண்ட்ராஸ்ட் ஆக இருக்க வேண்டும். அதற்கேற்ப டெனிம் புளூ வெள்ளை நிறத்திற்கு பொருத்தமாக, கண்களுக்கு இதமாக காட்டும். எவ்வகை பெயிண்டிங் செய்யப்பட்டுள்ளதோ அதற்கேற்ப பர்னிச்சர்களை தேர்வு செய்தால் வீட்டின் அழகு முழுமையாக இருக்கும். மல்ட்டி கலர் பெயிண்டிங் முறையை தேர்வு செய்யும்போது, பர்னிச்சர் வகைகளும் மல்ட்டி கலர் பாணியில் இருப்பது வீட்டின் தோற்றத்தை சிறப்பாக வெளிப்படுத்தும். மரத்தால் செய்யப்பட்ட பர்னிச்சர்களைவிட, ஸ்டீல் மற்றும் கண்ணாடி ஆகிய 'டிரெண்டி' பர்னிச்சர் வகைகள் நிறைய வீடுகளை அலங்கரிக்கின்றன.

சுவர் நிறங்களுக்கு ஏற்ற போட்டோ பிரேம் வடிவமும், அதன் நிறமும் இருப்பது முக்கியம். மேலும், புக் ஷெல்ப், கேண்டில் ஸ்டாண்டு, ஹேங்கிங் மற்றும் கார்னர் ஷெல்ப் ஆகியவை சுவரை அழகாக காட்டுகின்றன. விழாக்காலங்களுக்கு ஏற்ப பொருத்தமான வால் பேப்பர்கள் ஒட்டி வீட்டை வித்தியாசமாக காட்டலாம்.

வீடுகளின் தரைத்தள அமைப்பில் வழக்கமான டைல்ஸ் தவிர அழகிய புகைப்படங்கள் கொண்ட எபாக்ஸி மற்றும் முப்பரிமாண புளோரிங் அமைக்கலாம். வரவேற்பறை, குளியலறை, படுக்கை அறை ஆகியவற்றில் ஒருவருக்கு விருப்பமான படத்தையோ அல்லது வடிவத்திலோ முப்பரிமாண புளோரிங் செய்யப்படுகிறது. மரத்தால் செய்யப்படும் புளோரிங், புளோரல் புளோரிங், கார்ப்பெட் புளோரிங், மேட் பினிஷிங் போன்ற வகைகளை பயன்படுத்தி தரைத்தளத்தை அழகாக காட்டலாம்.

மாடுலர் கிச்சன், அலமாரிகள், பூஜை அறை, டிவி ஸ்டாண்ட் அல்லது கேபினெட், டிரெஸ்சிங் டேபிள் ஆகியவற்றை பி.வி.சி மற்றும் பிளைவுட் கொண்டு சிக்கன பட்ஜெட்டில் அமைத்துக்கொள்ளலாம். அவற்றில் சாதாரண மர பர்னிச்சர்களில் ஏற்படும் கரையான் போன்ற பூச்சித் தொல்லைகள் இருப்பதில்லை. சந்தையில் பி.வி.சி மற்றும் பிளைவுட் பொருட்களே பெரும்பாலும் கிடைக்கின்றன.

உள் அலங்கார பாணியில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வழிமுறைகள் உலகின் பல்வேறு பகுதிகளில் கடைபிடிக்கப்படுகின்றன. தனி மனித விருப்பத்தை அப்போதைய டெக்னாலஜியுடன் இணைத்து அலங்கார பாணியை உருவாக்குவதால், வீடுகளுக்கு வித்தியாசமான தோற்றம் கிடைக்கிறது. ஒரு வீட்டின் கட்டுமானப் பணிகளின்போதே அதன் உள் அலங்கார பணிகளுக்கான பிளானை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்று இன்டீரியர் டிசைனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்