வீட்டை ரசனையுடன் அழகுபடுத்த சில எளிமையான வழிகள்

வீடுகளையும் அறைகளையும் அவ்வப்பொழுது நம் ரசனைக்கு ஏற்ப சில மாற்றங்களை ஏற்படுத்தி அதற்கேற்ற பொருட்களை தேர்ந்தெடுத்து அலங்கரிக்கும் பொழுது நம் எண்ணங்களும் உணர்வுகளும் நேர்மறையான விதத்தில் மாறுகிறது இதனால் வீட்டில் இருப்போரின் உணர்வுகள் சந்தோஷமாகவும் நேர்மறையாகவும் இருப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்படுகிறது.

Update: 2022-06-25 01:36 GMT

முதலில் எந்த அறையை நீங்கள் மாற்றவோ அழகுபடுத்த விரும்புகிறீர்களோ அந்த அறையில் நிறத்தை தேர்வு செய்து கொள்ளவும். வெள்ளை மஞ்சள் பச்சை, சிவப்பு என்று அறையின் சுவரின் நிறம், பர்னிச்சர் நிறம், திரைச்சீலைகளின் நிறம், அறையின் தரையில் உள்ள தரைவிரிப்புகள் நிறம், சோபா போன்றவற்றின் நிறம் மற்றும் சுவர் அலங்காரங்களின் நிறம் ஒன்றுடன் ஒன்று அழகாக மேட்ச் ஆகும் வகையில் இருப்பது அவசியம். வெள்ளை மற்றும் கருப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள், பச்சை மற்றும் ஊதா அல்லது நீலம் மற்றும் ஊதா போன்று சில நேரங்களில் கூட்டாகவும் இந்த நிறங்களின் தீமை தேர்வு செய்யலாம். அந்த நிறத்திற்கு பொருந்தக் கூடிய வகையிலேயே அந்த அறையில் உள்ள எல்லா பொருட்களும் இருக்கும்படி அமைப்பது நன்றாக இருக்கும்.

இவ்வாறு அறையின் நிறத்தை நம் விருப்பத்திற்க்கேற்ப சற்றே மாற்றும் பொழுது அறையின் அழகும் பொலிவும் கூடலாம். அல்லது நம் கண்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி புத்துணர்ச்சி அளிக்கலாம். எனவே அறையின் நிறத்தை குறைவான செலவில் மாற்றுவதற்கு பெயிண்டிங் ஒரு சிறந்த வழி அல்லது மென்மையான நிறங்களில் உள்ள வால்பேப்பர்களையும் தேர்ந்தெடுக்கலாம். சிலநேரங்களில் பெயிண்ட்டை விட வால்பேப்பர் செலவு குறைவாக இருக்கும். ஏற்கனவே இருந்த நிறத்தை மாற்றுவதற்கு பிரைமர் கொடுத்து, பட்டி பார்த்து பெயிண்ட் அடிக்க நேரமும் செலவும் கூடுதல் ஆகலாம். ஆனால் வால்பேப்பர் சட்டென்று அந்த அறைக்கு ஒரு மாற்றத்தையும் அழகையும் கொடுத்துவிடும்.

ஒவ்வொரு அறையிலும் அதிக அளவில் அலங்காரப்பொருட்களோ பர்னிச்சர்களோ இல்லாமல் பார்த்துக்கொள்வது நளினமான ஒரு தோற்றத்தைக் கொடுக்கும். அதேபோல் ஒவ்வொரு அறையிலும் ஏதேனும் ஒரு பொருள் பார்ப்பவரின் கண்களை சட்டென்று கவரக்கூடிய வகையில் இருப்பதாக அமைப்பது கூடுதல் சிறப்பு. ஒரு அறையின் தோற்றத்தை மாற்ற விரும்பும் பொழுது ஏற்கனவே அந்த அறையிலுள்ள ஃபர்னிச்சர், பெயிண்டின் நிறம் திரைச்சீலைகளின் நிறம் அல்லது தன்மை ஜன்னல்களின் அமைப்பு போன்ற எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு அதற்கேற்ப பொருட்களை மாற்றுவதும், கூட்டுவதும், குறைப்பதும் நல்லது.

உங்கள் அறை அல்லது வீட்டிற்கு மாடர்ன் லுக் கொடுக்க விரும்புகிறீர்களா அல்லது பாரம்பரியமான முறையில் அலங்கரிக்க விரும்புகிறீர்களா என்பதை முடிவு செய்துக் கொள்ள வேண்டும். ஒரு அறையை பாரம்பரிய முறையிலும் ஒரு அறையை நவீன பர்னிச்சர்கள் நவீன திரைச்சீலைகள் நவீன அழகு பொருட்கள் கொண்டு அலங்கரித்தால் அது பார்ப்பதற்கு அழகாக இல்லாமல் முரணாக தெரியும். எனவே ஒரு அறையில் எல்லா பொருட்களுமே மார்டனாக இருப்பதாகவோ அல்லது பாரம்பரிய முறையில் இருப்பதாகவோ அலங்கரிப்பது நன்றாக இருக்கும்.

தட்பவெட்ப மாறுபாடுகளுக்கு ஏற்ப வீட்டை அலங்கரிப்பது நன்றாக இருக்கும். வெயில் காலங்களில் மென்மையான நிறங்களில் திரை சீலைகளும் தரைவிரிப்புகளும் இருப்பது நேர்த்தியாக இருக்கும். அதுவே மழைக்காலங்களில் அடர்த்தியான நிறங்களில் திரைச்சீலைகள் அல்லது அடர்த்தியான துணியில் திரை சிலைகளும் இருப்பது நன்றாகவும் தேவைக்கேற்பவும் இருக்கும். வெயில் காலங்களில் குறைவான ஃபர்னிச்சர் களும் மென்மையான நிறங்களில் குஷன் கவர் போன்றவைகளும் இருப்பது நன்றாக இருக்கும். அதேபோல் மழைக்காலங்களில் அறையில் பர்னிச்சர்கள் கூடுதலாக போட்டிருந்தாலும், அடர்த்தியான நிறங்களில் குஷன்களை கூடுதலாக போட்டிருந்தாலும் பார்ப்பதற்கு நிறைவாகவே இருக்கும்.

ஒரு அறையை அலங்கரிப்பதற்கு முன்பு அங்கு தேவையான பொருட்கள் அதாவது ஃபர்னிச்சர், பெயிண்ட், திரைச்சீலைகள், லேம்ப்ஷேடு, டீபாய், அலங்கார பொருட்கள், தரை விரிப்புகள், சுவரில் அலங்கரிக்க வேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் நிறைவாக தேர்ந்தெடுத்து கையிருப்பில் வைத்துக் கொண்ட பின்பு அலங்கரிக்கும் வேலையை தொடங்கினால் சீக்கிரமாகவும் நிறைவாகவும் செய்து முடிக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்