வீடுகளை அலங்கரிக்கும் கண்ணாடி ஓவியங்கள்

வீடுகளை அலங்கரிப்பதில் கண்ணாடிகளுக்கு பழங்காலம் தொட்டு பெரிய பங்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. வெறும் கண்ணாடிகளை கதவுகள் ,ஜன்னல்கள், வென்டிலேட்டர்கள், போன்றவற்றில் பதிப்பது உண்டு.. ஆனால் கண்ணாடிகளில் அழகழகான வண்ணங்களில் ஓவியங்களை தீட்டி வீடுகளில் பொருத்தும் போது அதன் அழகும் கவர்ச்சியும் பன்மடங்கு அதிகரிக்கிறது வீடுகளை பொருத்தவரையில் வரவேற்பறையில், பூஜை அறையில், படுக்கையறைகளில், படிகட்டுகளின் தளங்களில் மற்றும் வீட்டில் மேற்கூரைகளில் அழகான ஓவியங்கள் கொண்ட கண்ணாடிகளை பதிப்பது வீட்டின் மதிப்பை மேலும் உயர்த்துகிறது.

Update: 2022-12-11 05:04 GMT

வீட்டின் வரவேற்பறை உணவு கூடம் போன்ற இடங்களில் வெஸ்டிபியூல் என்று ஒரு பகுதியை அமைப்பதுண்டு. மிகச்சிறிய வீடாக இருந்தாலும் கூட பால்கனியை இந்த மாதிரி வெஸ்டிபியூல் ஆக பலர் மாற்றி அமைக்கின்றனர். இந்த இடத்தில் பல அடுக்குகள் கொண்ட படிகள் அமைத்து அதன் மேல் வரிசையாக செடிகளையோ அல்லது அழகுப் பொருட்களையோ அடுக்கி வைப்பதுண்டு இந்த இடங்களின் மேற்கூறையை கான்கிரீட் கொண்டு மூடாமல் கண்ணாடியால் அலங்கரிக்கும் பொழுது, கண்ணாடியை கூரையாக பயன்படுத்தும் பொழுது, வெளிச்சம் ஊடுருவி அந்த இடத்தை பொலிவாக்குகிறது. அந்த இடத்தில் அமர்ந்து பாட்டு கேட்பது புத்தகம் படிப்பது போன்றவைகளுக்கு மிகவும் அழகாக இருக்கும்.

அந்த மேற்கூறையில் அமைக்கப்படும் கண்ணாடிகளில் அழகான ஓவியங்களை தீட்டி அமைக்கும் பொழுது ஊடுருவும் வெளிச்சம் பல நிறங்களில் தரையில் பட்டு வண்ணமயமான அழகான தோற்றத்தை அளிக்கும். இதேபோல் இன்று பலரும் நவீன கட்டமைப்பு கொண்ட வீடுகளில் கூட முற்றங்களை அமைத்து கட்டுகின்றனர். அந்த காலங்களில் வீடுகளில் முற்றம் என்பது வீட்டின் நடுவில் தூண்களுக்கு இடையே சற்று பள்ளமான ஒரு இடமாகவும் மேலே கூரையின்றியும் இருக்கும். மழைக்காலங்களில் இந்த இடத்தில் மழை நீர் கொட்டும். வெயில் காலங்களில் சுளீர் என்று வெயில் அடிக்கும். இது வீட்டிற்கு குளிர்ச்சியையும் சூட்டையும் காற்றோட்டத்தையும் அளிக்கக் கூடியதாய் இருந்தது.

மேற்கூறையில் ஓடுகள் வேய்ந்து, உயரம் குறைவான மேற்கூரை அமைக்கப்பட்ட அந்த நாட்களில் இந்த மாதிரியான முற்றம் மிகவும் உபயோகமாக இருக்கும். குழந்தைகள் விளையாடவும் ஆண்கள் முற்றத்தைச் சுற்றி உட்கார்ந்து சீட்டு, தாயம் போன்ற விளையாட்டுகளை விளையாடவும், பெண்கள் பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை விளையாடவும், அரட்டை அடிக்கவும் மிகவும் வசதியாகவும் கலகலப்பாகவும் ஒரு வீட்டை மாற்றக்கூடியதாய் இருந்தது. இன்றைய காலகட்டங்களில் வீடுகளில் முற்றம் அமைப்போர் மேற்கூறையை மூடாமல் விடுவதில்லை.

இரண்டு மாடி வைத்து கட்டும் பொழுது இந்த முற்றத்தின் மேற்கூறையை அதாவது இரண்டாவது தளத்தில் கூரையை அமைக்கின்றனர். அங்கு கண்ணாடியால் கூரையை அமைத்து அந்த கண்ணாடிகளில் அழகான வண்ண ஓவியங்களை கொண்டு அலங்கரிக்கின்றனர். இதனால் வீட்டில் ஊடுருவும் வெளிச்சம் வண்ணமயமாக முற்றம் முழுவதும் பரவி இருப்பதால் வீடு மிகவும் ரம்யமாக காட்சி அளிக்கும். இந்த இடத்தில் உட்கார்ந்து பாட்டு கேட்பது படிப்பது குழந்தைகள் விளையாடுவது வயதானவர்கள் ஈசி சேரில் அமர்ந்து ஓய்வெடுப்பது போன்ற பல காரியங்களுக்கும் மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது.

படுக்கை அறை ஜன்னல்களுக்கு வண்ணம் தீட்டப்பட்ட அல்லது பல வண்ணங்கள் கொண்ட கண்ணாடியை பயன்படுத்தும் பொழுது திரைசீலைகளை உபயோகிக்க வேண்டிய அவசியம் கூட இல்லாமல் படுக்கையறையின் தனிமையை கூட்டுகிறது. இந்த கண்ணாடிகளின் வழியே வெளிச்சம் ஊடுருவி படுக்கையறையை மிகவும் அழகாகவும் நளினமாகவும் மாற்றுகிறது. வெளிர் நீல மற்றும் வெளிர் பச்சை நிறங்களில் டிசைன்கள் கொண்ட ஓவியம் அல்லது வண்ணம் தீட்டப்பட்ட கண்ணாடிகளை படுக்கையறையில் அமைக்கும் பொழுது படுக்கையறையில் ஒரு மிக மெல்லிய வெளிச்சம் பகல் நேரங்களில் கூடுதல் அழகை கொடுக்கும்.

எனவே வண்ணம் தீட்டப்பட்ட அல்லது பல வண்ணங்களால் ஆன கண்ணாடிகளை முடிந்தவரை நம் வீடுகளில் பயன்படுத்தினோம் என்றால் வீட்டிற்கு நல்ல வெளிச்சத்தையும், அழகையும், பொலிவையும், திரைச்சீலை அமைக்க வேண்டிய செலவையும் குறைத்து வீட்டை புதுமையாகவும் கவர்ச்சியாகவும் மாற்ற உதவும் என்பதில் ஐயமில்லை.

Tags:    

மேலும் செய்திகள்