கட்டுமானத்துறை வளர்ச்சிக்கு ஏற்ற தொழில்நுட்ப முறை

Update:2023-07-29 09:31 IST

இந்த 21-ம் நூற்றாண்டில் பல்வேறு நவீன கட்டுமான தொழில்நுட்பங்கள் பரவலான பயன்பாட்டில் இருந்து வருகின்றன. சிக்கன பட்ஜெட்டில் வீடுகளை கட்டமைக்க அவை உதவுகின்றன. பொதுமக்கள் பலருக்கும் தங்கள் சொந்த வீட்டுக் கட்டுமான பணிகளில் அவற்றை பயன்படுத்த ஆர்வமாக உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

பொதுமக்களின் ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும் கட்டுமான பொறியியல் தொழில்நுட்ப ரீதியாக அவற்றை பயன்படுத்தி இரண்டு தளங்கள் கொண்ட வீடுகளை அமைப்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது பற்றி கட்டுமான பொறியாளர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

கட்டிடத்தின் அஸ்திவார அமைப்பை பொறுத்து அவை, சுமை தாங்கும் கட்டமைப்பு (Load Bearing Structure) மற்றும் சட்டக கட்டமைப்பு (Frame Structure) என்று இரு நிலைகளில் உள்ளன.

பிரேம்டு ஸ்ட்ரக்சர்

பிரேம்டு ஸ்ட்ரக்சர் கன்ஸ்ட்ரக்ஷன் முறையில், அஸ்திவாரம், பூட்டிங், தூண், உத்திரம், கூரை என அனைத்து பாகங்களும் டி.எம்.டி கம்பிகள் உள் அமைக்கப்பட்ட கான்கிரீட் அமைப்பாக உருவாக்கப்படுகின்றன. இதன் காரணமாக, கட்டுமானத்தை அதன் தேவைக்கேற்ற அளவு உயரமாக அமைக்க இயலும், மேலும்,கட்டுமான பணிகளை விரைவாகவும் செய்து முடிப்பதும் சாத்தியம்.

குறிப்பாக, பிரேம்டு ஸ்ட்ரக்சர் முறைப்படி அமைந்த கட்டுமானங்கள் நில அதிர்வு பிரச்சினையால் அதிக பாதிப்புக்கு உள்ளாவதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. அதன் காரணமாக, உயரமான கட்டுமானங்களுக்கு மட்டுமல்லாமல் இரண்டு, மூன்று மாடிகள் கொண்ட கட்டிடங்களும் பிரேம்டு ஸ்ட்ரக்சர் கன்ஸ்ட்ரக்ஷன் முறையில் அமைக்கப்படுகின்றன.

அதன் அடுத்த கட்டமாக அஸ்திவாரம் தவிர்த்த கட்டுமானத்தின், படிக்கட்டுகள் உள்ளிட்ட அனைத்து பாகங்களையும் முன்கூட்டியே தயாரித்து வைக்கப்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து தேவைக்கேற்ப அவற்றை வாங்கி வந்து, தக்கவாறு இணைத்தும் வீடுகள் மற்றும் குடியிருப்புகளை அமைத்துக்கொள்ள இயலும். அதன் அடிப்படையில் இரு மாடிகள் கொண்ட வீட்டு கட்டமைப்புக்கு வழக்கமான முறைகளே போதுமானது. காரணம், செலவுகளில் பெரிய வித்தியாசம் இருக்காது. ஆனால், உயரமான குடியிருப்புகளில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விரைவாக பணிகளை செய்து முடிக்கலாம்.

லோடு பேரிங் ஸ்ட்ரக்சர்

சுமை தாங்கும் கட்டமைப்பு என்பது மனையில் அஸ்திவாரத்திற்கான குழியை தக்க அகலம் மற்றும் நீளத்தில் நாற்புறமும் எடுத்து, அதில் கருங்கல் அஸ்திவாரம் அமைப்பதாகும். அதற்கு மேலாக கிரேடு பீம் (பெல்ட் பீம்) அமைத்து, செங்கல் சுவர் எழுப்பப்படும். அதன் பின்னர் தக்க பகுதிகளில், தேவைக்கேற்ப பீம் மற்றும் லிண்டல் உள்ளிட்ட துணை அமைப்புகள் கட்டப்படும். அதற்கும் மேல் மேற்கூரை அமைத்து வீடு முழுமை பெறும்.

இந்த கட்டிடமானது, அதன் வடிவமைப்பின் தன்மைக்கேற்ப நில அதிர்வு சமயத்தில் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும். மேலும், இந்த அஸ்திவார அமைப்பில் நான்கு மாடிகளுக்கும் மேலான உயரத்தில் கட்டிடங்களை அமைத்தால் கட்டிடத்தின் நிலைப்புத்தன்மை பாதிப்புக்கு உள்ளாகும் என்பது அறியப்பட்டது. அதனால், சட்டக கட்டமைப்பு நடைமுறைக்கு வந்தது.

ஸ்டீல் பிரேம்டு ஸ்ட்ரக்சர்

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும், பட்ஜெட் சிக்கனமாகவும், விரும்பிய வடிவத்திலும் கட்டுமானங்களை அமைக்க உதவும் முறை இரும்பு கட்டுமான (Steel framed Structure) முறை மூன்றாவதாக வருகிறது. இந்த கட்டுமான அமைப்பு உலக அளவில் பிரபலமானதாகும். கம்பி கட்டி சென்டரிங் பணிகளை முடித்து, கான்கிரீட் அமைப்பதில் ஆகும் பட்ஜெட் மற்றும் கால அவகாசம் ஆகியவற்றில் உள்ள சிக்கனம் காரணமாக, வர்த்தக கட்டமைப்புகளில் இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது.

பெருநகரங்களின் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை கட்டிடங்கள் அனைத்தும், இரும்பு கட்டுமான முறையில்தான் அமைக்கப்படுகின்றன. இந்த முறைக்கு தேவைப்படும் தூண்கள், பீம்கள், பக்கவாட்டு சுவர்கள், மேற்கூரை ஆகிய பல்வேறு கட்டுமானப் பொருட்கள் அதிநவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படுகின்றன. அதனால், தேவை மற்றும் பட்ஜெட் ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றை தேர்வு செய்து கொண்டு, திட்டமிட்ட கட்டுமானத்தை விரைவாக அமைக்க இயலும்.

வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளில் அமைக்கப்படும் வர்த்தக கட்டுமானங்களில் பெரும்பாலானவை இரும்பு கட்டுமானங்களே என்பதையும், உலக அளவில் கவனத்தை கவர்ந்துள்ள இந்த முறையே எதிர்கால தொழில்நுட்பமாக மலரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் கட்டுமான வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்