அழகான மொட்டை மாடி அமைப்பது எப்படி ?

தளம் போடப்பட்ட எல்லா வீடுகளிலுமே மொட்டை மாடி என்பது இருக்கின்றது.மொட்டை மாடியை மிகவும் அழகானதாகவும், அமைப்பான தாகவும் மாற்றுவது அவரவருடைய கற்பனைத்திறன், விருப்பம் மற்றும் பட்ஜெட்டை பொறுத்து அமைகின்றது.

Update: 2022-02-26 15:05 GMT
மொட்டை மாடியை எப்படி எல்லாம் அற்புதமாக அமைக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க.

* மொட்டை மாடி என்பது பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாத இருட்டான இடமாகவே இருக்கும். அதை வெளிச்சமான இடமாக மாற்றும் பொழுது வீட்டில் இருக்கும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசலாம், சாப்பிடலாம் மற்றும் விருந்தினர்கள் வரும்பொழுது விருந்து நிகழ்ச்சிகளையும் அங்கே ஏற்பாடு செய்யலாம்..அனைவரையும் கவர்வது போல் அழகான லைட்டுகளை ஆங்காங்கே அமைத்து அவற்றைப் பார்க்கும் பொழுது நிச்சயமாக மனதிற்கு அமைதியான ஒரு சூழலை நாம் உணர முடியும்.. குறிப்பாக நவீன லாந்தர் விளக்குகள், டிக்கி டார்ச் லைட்டுகள், ஸ்டிரிங் லைட்டுகள் மற்றும் எளிமையான போஸ்ட்களை அமைக்கும் பொழுது அவை அரேபிய இரவுகள், வேடிக்கையான ஹவாய் தோற்றம் போன்றவற்றை தருவதோடு மொட்டை மாடியை அதிக இடம் உள்ளது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும்..இந்த லைட்டுகளை இயக்குவதற்கு மின்சாரம் அல்லது சோலார் சக்தியையும் பயன்படுத்தலாம்.

* மொட்டை மாடிக்கு ஒரு ரிச்சான தோற்றத்தை தருவதற்கு மாடியில் சுற்றுச்சுவரின் உட்புறமாக செடிகளை வளர்ப்பதற்கு வசதியாக கட்டுமானம் செய்து அவற்றில் செடிகளை வைக்கலாம்.. அதை ஒட்டி அமர்வதற்கு வசதியாக மரப் பலகைகளை நவீன விதமாக அமைத்து மரப்பலகைகளால் ஆன தரைத்தளத்தை அமைக்கலாம்.. இவ்வாறு வளர்க்கப்படும் செடிகள் வெளியிலிருந்து பார்க்கும் பொழுது தொங்கும் தோட்டம் போன்று மிகவும் அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.இதுபோல் அமர்வதற்கான பலகைகளை ஆங்காங்கே அமைக்கலாம்.. மழை மற்றும் வெயிலால் மரப்பலகைகள் பாதிப்படையும் என்று நினைப்பவர்கள் அழகிய ப்ளாஸ்டிக் கூரைகளை அமைக்கலாம்.. அல்லது அமர்வதற்கு கடப்பா மற்றும் கிரானைட் கற்களை உபயோகப்படுத்தி மொட்டை மாடிக்கு கூடுதல் அழகை தரலாம்.

* குறைந்த விலையில் ஆனால், கவர்ச்சிகரமாக ஃபர்னிச்சர்களை அமைத்து மொட்டை மாடியை அழகுபடுத்த நினைப்பவரா நீங்கள்? சோஃபா கம் பெட் அமைத்து அதற்கு அழகான வண்ணங்களில் தலையணைகளை அமைக்கலாம்.. ஒரு சிறிய டைனிங் டேபிள் செட், எதிர்ப்புறத்தில் பெரிய டிவியை அமைத்து உலோக பீம்களை அமைத்து ,டிவியின் கீழ்ப்புறத்தில் மரத்தினாலான ஸ்டோரேஜ் அமைப்புகளை வைக்கலாம்.. இங்கு அமைக்கப்பட்டிருக்கும் அனைத்தும் ஒரே வண்ணங்களில் இருப்பதுபோல் சிறிய ரூஃப் டாப் அறையை தயார் செய்யலாம்.

* ரூஃப்டாப்பின் நடுநாயகமாக நீச்சல் குளத்தை அமைத்து அதற்கு ஏற்றார் போல் இருக்கைகளை அமைத்து அங்கேயே ஸ்னாக்ஸ் மற்றும் பானங்களை அருந்துவதற்கு வசதியாக சிறிய அளவில் அமைப்பதும் இப்பொழுது பிரபலமாகி வருகின்றது.தனி வீடுகள் மட்டுமல்லாது, அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இதுபோன்ற நீச்சல் குளங்களைப் பார்க்க முடிகின்றது.

* சிறிய புல்வெளிகளை அமைத்து அதன் நடுவில் செயற்கை நீரூற்று அமைப்பதும், ஓரத்தில் செயற்கை நீரூற்று வைத்து அதிலிருந்து வடியும் நீர் செடிகளுக்கு பாய்வதுபோல் செய்யப்படுவதும் இயற்கையான நீரூற்றை சிறிய அளவில் பார்ப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது.

* படுத்தும், அமர்ந்தும் திறந்தவெளியில் படம் பார்க்கும் வசதியை ஓப்பன் தியேட்டராக மொட்டை மாடியில் அமைக்கலாம்..

* உங்களது மொட்டைமாடியில் பெர்கோலா அல்லது கெஸோபோவை அமைக்கலாம்.இந்த கட்டமைப்புகள் இடத்தை அரவணைப்பாகவும் கவர்ச்சியாகவும் மற்றும் உங்களுக்கு வசதியாகவும் உருவாக்குகின்றன.இங்கு நவீனமாக இருக்கும் ஊஞ்சல்கள் அமைக்கும் பொழுது அவை நமது மொட்டை மாடிக்கு புதிய பரிணாமத்தை வழங்குகின்றன.

* சரியான லைட் வெளிச்சம், சரியான தரை அமைப்பு, சமைப்பது அல்லது நெருப்பு மூட்டி அமர்வது போல் இடத்தை அமைப்பது, விருந்தினர்களுக்கு விருந்தளிக்கும் இடமாக மாற்றுவது, திறந்தவெளியில் தியேட்டர்கள் அமைப்பது இவை அனைத்துமே நம்முடைய மொட்டை மாடிக்கு மிகவும் பிரம்மாண்டமான தோற்றத்தை தரும்.

மேலும் செய்திகள்