ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்

பங்குச் சந்தையில் மறைமுகமாகவும், பாதுகாப்பாகவும் முதலீடு செய்ய பரஸ்பர நிதியமைப்புகள் உதவுகின்றன.;

Update:2021-03-06 09:31 IST
அதேபோல நிலம், வீடுகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் மனை வணிகத்தில் மறைமுகமாகவும், பாதுகாப்பாகவும் முதலீடு செய்ய உதவும் புதிய வகை முதலீட்டு வாய்ப்பு என்பது மனை வணிக முதலீட்டுப் பத்திரங்கள் ஆகும். ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் (Real Estate Investment Trust -REIT) எனப்படும் மனை வணிக முதலீட்டு அறக்கட்டளை அமைப்புகள் இவ்வகை பத்திரங்களை வெளியிட்டு பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. அந்த நிதியைக் கொண்டு பல்வேறு பகுதிகளில் நிலங்களை வாங்கி விற்பது, வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அலுவலகங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றைக் கட்டி வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுவது, விற்பனை செய்வது ஆகிய நடவடிக்கைகளில் இந்த நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. அவற்றில் கிடைக்கும் லாபத்தைக் 
கொண்டு பத்திர முதலீட்டாளர்களுக்கு லாப ஈவுத்தொகை (டிவிடெண்ட்) வழங்குகின்றன.

இதுபோன்ற ஆர்.இ.ஐ.டி முதலீடுகளில், சாதாரண முதலீட்டாளர் நேரடியாக எந்தவொரு நிலத்திலும் முதலீடு செய்வதில்லை, மாறாக அவரது முதலீடு, பல்வேறு வகை நிலங்களில், மனைகளில், கட்டிடங்களில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. இவ்வாறு பிரித்து முதலீடு செய்யப்படுவதாலும், உரிய நிபுணர்கள் இதனை நிர்வகிப்பதாலும் முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதோடு, கூடுதல் வருவாயையும் ஈட்டுகிறது. 2014-ம் ஆண்டில் இவ்வகை முதலீடுகளுக்கான நெறிமுறைகளை செபி (The Securities and Exchange Board of India - SEBI) அமைப்பு கொண்டுவந்தது. இந்தியாவில் சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்புக்கும் மேலாக ஆர்.இ.ஐ.டி முறையில் மனை வணிக வர்த்தகம் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒரு தனியார் மதிப்பீடு குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்