சர்வதேச ரியல் எஸ்டேட் சந்தையில் இந்திய நிறுவனங்கள்

உலக அளவில், குடியிருப்புகளுக்கான முதலீடுகளை மேற்கொள்வதில் இந்திய முதலிட்டாளர்கள் ஐந்தாவது மிகப்பெரிய இடத்தில் உள்ளனர். இதன் மூலம் இந்திய தொழிலதிபர்கள் வெளிநாடுகளிலும் தங்கள் சந்தை முதலீடுகளுக்கான களத்தை விரிவுபடுத்தி உள்ளனர்.

Update: 2019-08-03 10:39 GMT
சமீபத்திய ரியல் எஸ்டேட் சந்தை ஆய்வறிக்கையில் இந்த தகவல் வெளியாகி இருப்பதாக ‘ரியல்ட்டி பிளஸ்’ என்ற ஆங்கில மாதாந்திர ரியல் எஸ்டேட் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வீடு வாங்கிய இந்தியர்களில் பெரும்பாலானோர் தங்களது இரண்டாவது வீடு வாங்கும் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில் வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. சர்வதேச அளவில், அமெரிக்க நாட்டில் வீடு வாங்கியவர்களில் சீனா மற்றும் கனடா ஆகிய நாட்டவர்களுக்கு அடுத்த மூன்றாவது இடத்தில் இந்தியர்கள் உள்ளனர்.

மேலும், இங்கிலாந்தின் பரபரப்பான ‘பிரெக்ஸிட்’ தீர்மானம் காரணமாக நாடு முழுவதும் மக்களிடையே குழப்பம் நிலவியது. அந்த சமயத்தில் அங்கு வழக்கத்தைவிட இந்திய நாட்டவர்களால் வாங்கப்பட்ட சொத்துக்கள் 15 முதல் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஐக்கிய அரபு நாடுகளிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு இந்திய மக்களால் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்ற ஆண்டில் மட்டும் சுமார் 160 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆவணங்கள், ‘துபாய் லேண்ட் டிபார்ட்மெண்டு’ மூலம் இந்திய நாட்டவர் பதிவு செய்ததாக அறியப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்குவது, அதற்கான பதிவை மேற்கொள்வது உள்ளிட்ட சொத்து சம்பந்தமான சட்டதிட்டங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், மத்தியக் கிழக்கு நாடுகள், தெற்காசிய நாடுகள், அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்திய டெவலப்பர்கள் தங்கள் வர்த்தக வரம்புகளை விரிவுபடுத்தி இருக்கின்றனர்.

ஷோபா, அஜ்மீரா ரியல்டி, லோதா, மெர்லின் குரூப், ஹிராநந்தானி போன்ற டெவலப்பர்கள் வெளிநாடுகளில் தங்கள் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். மேலும், இந்திய ஆர்க்கிடெக்டுகள், பொறியியல் வல்லுனர்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் தயாரிப்பாளர்கள் ஆகியோர் சர்வதேச அளவில் அங்கீகாரம் மற்றும் பல்வேறு விருதுகளை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் ‘புஞ்ச் லாயிட்’ என்ற கட்டுமான நிறுவனம் 120 நாடுகளில் 200-க்கும் மேற்பட்ட கட்டுமானத் திட்டங்களை மேற்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது.

கடந்த 10 ஆண்டு காலகட்டத்தில் முதல் 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் இந்திய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், மொரீஷியஸ், சிங்கப்பூர், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் மற்றும் நெதர்லாண்ட் ஆகிய நாடுகளில் முதலீடுகள் செய்யப்பட்டன. மேலை நாடுகளில் உள்ள நிறுவனங்களை தம்முடன் இணைப்பது மற்றும் கையகப்படுத்துவது போன்ற வர்த்தகம் மற்றும் தொழில் ரீதியான நடவடிக்கைகள் மூலம் இந்திய நிறுவனங்கள் மற்றும் டெவலப்பர்கள் தங்கள் வர்த்தகத்துக்கான தளத்தை சர்வதேச அளவில் விரிவுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்