வீடுகள் கட்டுமான பணியில் உள்ள வரிசை முறை
கட்டுமான பணிகளில் உள்ள வரிசை முறை பற்றி குறிப்பிட்டுள்ள அடிப்படை தகவல்
வீடு கட்டுதல் என்பது பல நிலைகளில், பல்வேறு வல்லுனர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கூட்டு முயற்சியாகும். அவ்வாறு வீடு கட்டுபவர்களுக்கு திட்டமிட ஏற்ற வகையில் சிவில் பொறியாளர்கள் கட்டுமான பணிகளில் உள்ள வரிசை முறை பற்றி குறிப்பிட்டுள்ள அடிப்படை தகவல்களை இங்கே காணலாம்.
* பொதுவாக, கட்டுமான பணிகளின் தொடக்கத்தில் பூமி பூஜை என்ற வாஸ்து பூஜை செய்யப்படும். குறிப்பிட்ட ஒரு நாளில் அந்த பூஜையானது சம்பந்தப்பட்ட கட்டுனர் அல்லது பொறியாளர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் முன்னிலையில் நடத்தப்படும்.
* பின்னர், அஸ்திவார பணியில் கட்டிடத்தை பொறுத்து கருங்கல் அஸ்திவாரம் அல்லது பில்லருக்கான அஸ்திவாரம் ஆகியவை மனையின் மண் கட்டமைப்புக்கு ஏற்ப எடுக்கப்படும். பில்லர் அஸ்திவாரம் அளவு சுமார் 6 அடி ஆழம், 4 அடி நீளம் மற்றும் 4 அடி அகலம் இருக்கலாம்.
* பின்னர் அஸ்திவார குழிக்குள் கால் அங்குல கனத்துக்கு ஆற்று மணல் போடப்படும். அதன் பின்னர், கால் அங்குல கனத்தில் ஒன்றரை அங்குல ஜல்லி கான்கிரீட் கலவையானது 1:5:10 என்ற விகிதத்தில் அமைக்கப்படும்.
* அதன் பின்னர், ஆர்.சி.சி மேட் கான்கிரீட் 1:3:4 கலவை, 10 மி.மி இரும்பு கம்பிகள் 6 அங்குல இடைவெளியில் அமைத்து, 6 அங்குல கனத்தில் போடப்படும். ஆர்.சி.சி புட்டிங் கான்கிரீட் 1:3:4 கலவை மூலம் ஒரு அடி உயரத்தில் கட்டப்படும்.
* அதன் தொடர்ச்சியாக 9 அங்குலத்துக்கு 9 அங்குலம் என்ற அளவில், 1:3:4 கலவையில் பில்லர்கள் 8 மி.மி ஸ்டிரப்ஸ் (Sti-r-rups) மூலம் 9 அங்குல இடைவெளி கொண்டதாக அமைக்கப்படும்.
* தரை மட்ட ‘எர்த் பீம்’ 9 அங்குல அகலத்தில், பி.சி.சி கான்கிரீட் 1:6:10 கலவை மூலம் கட்டப்படும். பேஸ்மென்டு உயரம் 3 அடி என்பது வழக்கமானது. ஆர்.சி.சி எர்த் பீம் கான்கிரீட் என்பது ஒரு அடிக்கு முக்கால் அடி கனம் உள்ளதாக 12 மி.மி கம்பி மற்றும் 8 மி.மி ஸ்டிரப்ஸ் முக்கால் அடி இடைவெளியில் அமைக்கப்படும்.
* தளப்பரப்பில் ஒன்றரை ஜல்லி கான்கிரீட் 1:6:10 கலவையில் 4 அங்குல கனம் கொண்டதாக போடப்படும். வெளியில் உள்ள செங்கல் சுவர்கள் முக்கால் அடி கனம் கொண்டு 1:5 கலவையால் பூசப்படும். இடைவெளி தடுப்பு சுவருக்கும் தக்க பூச்சு வேலைகள் மேற்கொள்ளப்படும். பேஸ்மென்டிலிருந்து மூன்றடி உயரம் கொண்ட செங்கல் சுவர் அமைக்கப்படும். அந்த மட்டத்திலிருந்து மேற்கூரை சுமாராக 10 அடி உயரம் கொண்டதாக கட்டமைக்கப்படும்.
* மேற்கூரைக்கான டி.எம்.டி கம்பிகள் 10 மி.மி அளவில் அரையடி இடைவெளி கொண்டதாகவும், மெயின் கம்பிகள், எக்ஸ்டென்ஷன் கம்பிகள் 6 மி.மி அளவில் முக்கால் அடி இடைவெளியில் போதுமான கனத்தில் அமைக்கப்படும்.
* ஆர்.சி.சி லிண்டல் பீம் கான்கிரீட் 1:3:4 கலவை மூலம் 12 மி.மி கம்பி கொண்டதாக 6 மி.மி ஸ்டிரப்ஸ் கொண்டு முக்கால் அடி இடைவெளியில் கட்டப்படும். மேலும், லாப்ட் மற்றும் சன்ஷேடு சிலாப் ஆகியவற்றில் 8 மி.மி கம்பி அரையடி இடைவெளியில் அமைத்து தக்க பூச்சு கனம் கொடுக்கப்படும். ஆர்.சி.சி மேற்பூச்சு பணிகளுக்கு 1:3 கலவையும், செங்கல் சுவர் மேற்பூச்சுக்கு 1:5 கலவையும் பயன்படுத்தப்படும்.
* வீடுகளின் உள்புற கதவுகளை பட்ஜெட்டுக்கு ஏற்ப ரெடிமேடாக வாங்கி கொள்ளலாம். டாய்லெட், பாத்ரூம் கதவுகளுக்கு யு.பி.வி.சி கதவுகள் ஏற்றதாக இருக்கும். ஜன்னல்களில் பொதுவாக 5 மி.மி கண்ணாடிகள் (Pi-n-n-ed Gl-asses) பொருத்தப்படும். ஜன்னல் கிரில் கம்பிகள் பொதுவாக 12 மி.மி ஸ்கொயர் ராடுகளாக இருப்பது முறை.
* தரைத்தள டைல்ஸ் வகைகளில் இரண்டடிக்கு இரண்டடி வெட்ரிபைடு டைல்ஸ் பதிப்பது வழக்கம். தேவைக்கேற்ப மற்ற வகைகளையும் தேர்வு செய்து கொள்ளலாம். பாத்ரூம் உள்புற சுவர்களில் 7 அடி உயரம் வரை ‘வால் டைல்ஸ்’ பதிப்பது நடைமுறையாகும்.
* ஒரு வீட்டுக்கு பொதுவாக 33 முதல் 35 எண்ணிக்கையில் எலக்ட்ரிகல் பாயிண்டுகள் இருக்கலாம். வீட்டின் உள் அறை கப்போர்டுகளில் பட்ஜெட்டுக்கேற்ப கடப்பா கற்களை பயன்படுத்தலாம்.
* உள்புற சுவர் மற்றும் வெளிப்புற சுவர்களுக்கு பொதுவாக, ஒயிட் சிமெண்டு பூசப்படுவதுடன், வீட்டிலுள்ள கிரில் மற்றும் மரப்பொருட்களுக்கு மட்டி மற்றும் தக்க எனாமல் பெயிண்டு பூசப்பட வேண்டும்.
* பொதுவாக, சமையலறை பிளாட்பார்ம் ‘கிரானைட்’ கொண்டு அமைக்கப்படும். அத்துடன் தளம் மற்றும் சுவர்களில் கழிவு நீர் குழாய் அமைப்புக்கு பி.வி.சி குழாய்கள் பொருத்தமானது. சமையலறை, பாத்ரூம் மற்றும் டாய்லெட் ஆகியவற்றின் சுவர்களில் குழாய்கள் கன்சீல்டு அமைப்பாக உள்ள நிலையில் வெளிப்புற சுவர்களில் குழாய்கள் தக்க ’கிளாம்ப்’ மூலம் வெளிப்புற அமைப்பாக இருக்கும்.
* மேல்மாடி விளிம்பின் கைப்பிடி சுவர் சுமாராக 3 அடி உயர செங்கல் சுவராகவும், நான்கரை அங்குல மேற்பூச்சு கொண்டதாகவும் கட்டமைக்கப்படும். மேல்மாடி தளப்பரப்பில் வெப்ப தடுப்பாக சுண்ணாம்பு, செங்கல் மற்றும் ஜல்லி கொண்ட சுருக்கி அமைத்து முக்கால் அடி தட்டு ஓடுகள் பதிக்கப்படலாம்.
மேற்கண்ட வரிசை முறையானது வீடுகளுக்கான கட்டுமான பணிகளில் பொதுவானதாகும். கட்டமைப்பின் அளவு, உயரம், பட்ஜெட், இதர பணிச்சூழல்கள் மற்றும் கட்டுமான பொறியாளர்களுடைய வழிகாட்டுதல் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கண்ட முறைகளில் மாற்றங்கள் இருக்கலாம் என்பது கவனிக்கத்தக்கது.