வீட்டு தோட்டத்திற்கான உரங்களை நாமே தயாரிக்கலாம்
நகர்ப்புறங்களில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள மாடி தோட்டத்திற்கு தேவையான உரத்தை, சுற்றுச் சூழலுக்கு உதவி செய்யும் வகையில் வீட்டிலேயே தயாரித்து கொள்ள இயலும் என்று தோட்டக்கலை வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.;
அதாவது, வீட்டின் சமையலறை கழிவுகளை மேல்மாடி தோட்ட செடி, கொடிகளுக்கு ஏற்ற உரமாக எளிதாக மாற்றி பயன்படுத்தலாம்.
இரு வகை சமையலறை கழிவுகள்
சமையலறையில் உருவாகும் கழிவுப்பொருள்கள் பொதுவாக இரண்டு வகையாக உள்ளன. ஒன்று மக்கும் கழிவுகள் இன்னொன்று மக்காத கழிவுகள். அவற்றை இரண்டு விதமான குப்பை தொட்டிகளை வைத்து தனிப்பட்ட முறையில் சேகரிக்க வேண்டும்.
கழிவுகளில் உரம்
மக்காத சமையலறை கழிவுகளை நகராட்சி குப்பை வண்டிகள் மூலம் அகற்றிக்கொள்ளலாம். அதே சமயத்தில் மக்கும் கழிவுகளை தக்க முறையில் சேகரித்து வைக்க வேண்டும். சிறிது காலத்தில் அவை மக்கி விடும் நிலையில் தொட்டிகளில் சேமித்து மேல்மாடி தோட்டத்திற்கான உரமாக பயன்படுத்தலாம். தொட்டிகளில் வளர்க்கப்படும் மீன்களின் கழிவைக்கூட பிளாஸ்டிக் தொட்டியில் சேமித்து உரமாக பயன்படுத்தலாம். அவற்றின் நாற்றம் விலகுவதற்காக வெல்லத்தை கலந்தும் வைக்கலாம்.
இயற்கை உரம்
தோட்டத்திற்கு தேவையான இயற்கை உர வகைகளான பஞ்சகவ்யா போன்றவற்றையும் வீட்டில் தயார் செய்து செடிகளுக்கு மண்ணில் உரமாக இடலாம். அல்லது தண்ணீரில் கலந்து செடிகள் மேலாகவும் தெளிக்கலாம். மண் கலவை, செம்மண் சாண எரு, மண்புழு உரம், தேங்காய் நார், வேப்பம் புண்ணக்கு, கடலை புண்ணாக்கு ஆகியவையும் மாடி தோட்டங்களுக்கு ஏற்ற உரங்களாக இருக்கின்றன.
‘கம்போஸ்டிங்’ முறை
மண்ணில் ஆக்ஸிஜன் மற்றும் ஈரப்பதம் ஆகியவை இருக்கும்போது ‘கம்போஸ்டிங்’ என்ற கழிவுகளின் சிதைவு நடக்கும் என்ற அடிப்படையில் வீட்டின் தோட்டப்பகுதிகளில் உள்ள ஒரு இடத்தில் சமையலறை கழிவுகளை தக்க ஈரப்பதம் உள்ள குழிகளில் போட்டு மூடி வைத்தால் அவை சிறிது காலத்துக்குள் தொழு உரமாக மாறி விடும். அதன் மூலம் சிக்கன முறையில் மேல்மாடி தோட்டம் அல்லது வீட்டு தோட்டத்திற்கான உரத்தை தயார் செய்து கொள்ளலாம்.
அரசின் உதவிகள்
அரசு தோட்டக்கலை துறை நகர்ப்பகுதிகளில் மேல்மாடி தோட்டம் அல்லது வீட்டு தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் தேவையான பொருட்களை குறைந்த செலவில் வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது. அதன் மூலம் வீட்டு எல்லைக்குள் குறைந்த அளவு இடத்திலும், மேல் மாடியிலும் தோட்டம் அமைப்பதை அரசு வரவேற்கிறது. அதற்கான விதை, உரம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ‘காய்கறி கிட்’ அளிக்கப்பட்டு மாடித் தோட்ட இயக்கமாக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
வெயில் பாதிப்பு தவிர்ப்பு
குறிப்பாக, வெயில் பாதிப்பால் மாடித்தோட்ட செடி, கொடிகள் நீர்ச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்படாமல் இருக்க உதவும் வலையும் சிக்கன விலையில் தோட்டக்கலை துறையிடமிருந்து பெற்றுகொள்ளலாம். சம்பந்தப்பட்ட பகுதி வட்டார தோட்டக்கலை துறை அலுவலகம் மூலமாக மேற்கண்ட பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.