கட்டமைப்புகளின் சந்தை மதிப்பை அறிய உதவும் மதிப்பீடு

கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்க விரும்புபவர்களுக்கு அதன் சந்தை மதிப்பு பற்றி சந்தேகம் எழுவதுண்டு.

Update: 2018-11-24 08:03 GMT
அந்த சமயங்களில் தக்க கட்டிட மதிப்பீட்டாளர் மூலம் சம்பந்தப்பட்ட வீட்டை மதிப்பீடு செய்து, அதன்படி முடிவை மேற்கொள்ளலாம் என்று ரியல் எஸ்டேட் நிதி ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கி மதிப்பீட்டாளர்

குறிப்பாக, வீட்டை அடமானமாக வைத்து கடன் பெறும் நிலையில் வங்கிகள் அல்லது கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் அவர்களது அங்கீகாரம் பெற்ற மதிப்பீட்டாளர் மூலம் வீட்டை மதிப்பீடு செய்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் செயல்படுகின்றன.

வீடு, அடுக்குமாடி குடியிருப்பு, அலுவலகம், வணிக வளாகம் போன்றவற்றின் வாடகை பற்றி அறிந்து கொள்வதற்கும் மதிப்பீட்டாளர் அறிக்கை தேவை என்ற நிலையில் அரசு அங்கீகாரம் பெற்ற மதிப்பீட்டாளர்களை தனிப்பட்ட நபர்களும் அணுகி பயன்பெறலாம்.

மதிப்பீட்டு முறைகள்

வீடு உள்ளிட்ட கட்டமைப்புகளின் முதற்கட்ட மதிப்பீட்டில் கீழ்க்கண்ட அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு (Present Worth) தீர்மானிக்கப்படுகிறது.

1) கட்டிடம் அமைந்துள்ள இடத்தின் மதிப்பு

2) கட்டிடம்

3) அதில் செய்யப்பட்டுள்ள வசதிகள்

4) இதர அம்சங்கள்

* கட்டிடம் அமைந்துள்ள இடத்திற்கான சந்தை மதிப்பை அறிய அப்போதைய நிலவரம் கணக்கில் கொள்ளப்படும்.

* வீடுகள் அல்லது அடுக்குமாடிகள் என்றால் எத்தனை சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது, எந்த ஆண்டு கட்டப்பட்டது, சுவரின் அகலம், உறுதி தன்மை, இன்னும் எத்தனை வருடத்துக்குக் கட்டிடம் உறுதியாக இருக்கும், வீட்டை கட்டிய கட்டுநர் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும்.

* பொதுவாக, வீட்டின் மதிப்பு கட்டி முடிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டுக்கும் சுமாராக ஒன்றரை சதவிகித அளவுக்கு மதிப்பு குறைவதாக கணக்கு. அதாவது 10 ஆண்டு வயது கொண்ட வீட்டின் தேய்மான மதிப்பு 15 சதவிகிதமாக எடுத்துக்கொள்ளப்படும்.

* வீட்டில் உள்ள வசதிகள் உள் அலங்கார வேலைப்பாடுகள், வாஸ்து, சமையலறை வசதி, வார்ட்ரோப், ஷோ-கேஸ், பூஜை அறை, மெயின் கதவு ஆகிய வற்றுக்கும் தேய்மான மதிப்பு கணக்கிடப்படும்.

* இதர வசதிகள் என்ற நிலையில் மோட்டார் சர்வீஸ், சாக்கடை வசதி, காம்பவுண்டு சுவர் போன்றவற்றின் மதிப்பு எடுத்துக்கொள்ளப்படும்.

கூடுதல் அம்சங்கள்

அதன் பின்னர் கீழ்க்கண்ட மூன்று வித மதிப்பீடுகளும் முடிவு செய்யப்பட்டு அறிக்கை அளிக்கப்படுகிறது.

1. சந்தை மதிப்பீடு

2. வருவாய் மதிப்பீடு

3. செலவு மதிப்பீடு

சந்தை மதிப்பீடு என்பது சம்பந்தப்பட்ட கட்டமைப்புக்கு அருகில் உள்ள சொத்துக்கள் சமீபத்தில் விற்பனை செய்யப்பட்ட மதிப்பை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.

வருவாய் மதிப்பீடு என்பது வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை ஒரு வருடத்தில் பெறக்கூடிய வருவாயை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.

செலவு மதிப்பீடு என்பது சம்பந்தப்பட்ட கட்டமைப்பு இப்போது உள்ள நிலையில், மீண்டும் புதிதாக உருவாக்க ஆகக்கூடிய பட்ஜெட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

குறிப்பாக, கட்டமைப்பின் தன்மை, காலம், காரணம், கணக்கீட்டு முறை என்ற வெவ்வேறு அம்சங்களை பொறுத்து மதிப்பீடுகள் மாறுபடலாம். அதன் அடிப்படையில் குறிப்பிட்ட முறை எதற்காக தேர்வு செய்யப்பட்டது என்ற காரணத்தை குறிப்பிட்டு அறிக்கை அளிக்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள்

வீட்டு மனை மதிப்பீடு என்றால் மதிப்பீட்டாளருக்கு அதன் பத்திர பதிவு நகல், தாய் பத்திரம், பட்டா, சிட்டா, அடங்கல், எப்.எம்.பி வரைபடம், 13 ஆண்டு முதல் 30 ஆண்டு வரை வில்லங்க சான்று, சொத்து குறித்து வழக்கறிஞரின் கருத்து ஆவணம் ஆகியவை தேவைப்படலாம்.

வீடு அல்லது அடுக்குமாடி என்றால் உள்ளாட்சி அமைப்பின் அனுமதி கடிதம், அங்கீகரிக்கப்பட்ட வரைபடம், கட்டிட பொறியாளர் மதிப்பீடு, கட்டுமான ஒப்பந்த ஆவணம், வீட்டு வரி ரசீது, வீட்டுக்கான மின் கட்டண ரசீது ஆகியவை தேவைப்படும். 

மேலும் செய்திகள்