அழகு செடியை அறையில் வளர்க்க அதிநவீன தொட்டி

பெரியவர்கள் முதல் குட்டி பசங்கள் வரை தொட்டிகளில் பலவகை செடிகளை வைத்து பராமரிப்பது ஒரு ‘ஹாபியாக’ இருந்து வருகிறது.

Update: 2018-09-29 03:15 GMT
வீட்டு தோட்டம் அமைத்து அவற்றில் உள்ள செடி, கொடி வகைகளை தினமும் தண்ணீர் விட்டு பராமரிக்கும் ஆசை பலருக்கும் இருந்தாலும், நகர்ப்புறங்களின் அடுக்குமாடி வாழ்க்கை முறையில், போதிய இட வசதி இருப்பதில்லை. அதனால், அறைகளுக்குள் குறிப்பிட்ட இடங்களில் அழகு செடிகளை தொட்டிகளில் வைத்து பலரும் பராமரித்து வருவது வழக்கம்.     

குட்டி பசங்களின் ஆர்வம்

பெரியவர்கள் முதல் குட்டி பசங்கள் வரை தொட்டிகளில் பலவகை செடிகளை வைத்து பராமரிப்பது ஒரு ‘ஹாபியாக’ இருந்து வருகிறது. குறிப்பாக, இல்லத் தலைவிகள் மற்றும் குட்டி பசங்கள் செடிகளின் வளர்ச்சியை ஆர்வமுடன் கவனித்து வருவதாக அறியப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பம்

தொட்டியில் விதைக்கப்பட்ட ஒரு விதை எவ்வாறு துளிர் விட்டு செடியாக வளரக்கூடிய அன்றாட நிலைகளை படங்களாக கண்டு மகிழ்வதற்கான தொழில்நுட்பம் சமீபத்தில் மேலை நாடுகளில் அறிமுகமாகி உள்ளது. அதாவது, ஜப்பானிய ‘டாமகோச்சி’ என்ற மெய்நிகர் விளையாட்டு செயலியின் அடிப்படையில் இந்த முறை அமைந்துள்ளதாக அவற்றை உருவாக்கியவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

தானியங்கி முறையில் தண்ணீர்

‘புளூம் எஞ்சின்’ (Bloomengine) என்ற அந்த ‘பிளான்டர்’ (Planter) செயல்முறையில் ஒரு வட்ட வடிவமான சிறிய பிளாஸ்டிக் தொட்டியில் தக்க உரங்கள் கலக்கப்பட்ட மண் அடுக்கின் மேற்புறத்தில் ஒரு விதை ஊன்றப்படும். அந்த மண் அமைப்பை சுற்றிலும் உள்ள வெளிப்புற அடுக்கில் அதற்கு தேவையான உர வகைகள் மற்றும் தண்ணீர் விடுவதற்கான தானியங்கி செயற்கை அமைப்புகள் உள்ளடக்கமாக இருக்கும். வெளியூர் செல்லும் பட்சத்திலும் தண்ணீர் உள்ளிட்ட உர வகைகள் தாமாக தேவையான அளவுக்கு அளிக்கும்படி அதில் ‘புரோகிராமிங்’ செய்து கொள்ள இயலும்.

செயற்கை முறையில் ஒளிச்சேர்க்கை

அந்த ‘பிளான்டர்’ செயலியை அதனுடன் இணைக்கப்பட்ட ‘பிளக்’ மூலம் மின் தொடர்பு ஏற்படுத்தியவுடன் அதன் செயல்பாடுகள் தொடங்குகின்றன. விதை முளைப்பதற்கான வெளிச்சம் மற்றும் முளைத்தவுடன் அதன் வளர்ச்சிக்கு உதவும் ஒளிச்சேர்க்கை ஆகியவை இயல்பாக நடப்பதற்கு எல்.இ.டி விளக்குகள் அந்த பிளான்டரில் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், தண்ணீரானது மேலிருந்து நீர்த்திவலை வடிவத்தில் மழைபோல செடியின் மீது தெளிக்கப்படும். மேலும், வெவ்வேறு வண்ணங்களில் வெளிச்சம் கிடைக்கும்படி செய்து அதை வைத்துள்ள இடத்தை வண்ணமயமாக ஆக்கலாம்.

படங்கள் பதிவு

பிளான்டரின் மேற்புறமாக பொருத்தப்பட்டுள்ள உயர்தர கேமரா செடியின் அனைத்து வளர்ச்சி நிலைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை படங்களாக பதிவு செய்து ஸ்மார்ட் போனுக்கு அனுப்பிவிடும். செடியில் பூக்கள் மலர்வது உள்ளிட்ட பல்வேறு நிலைகளை அதன் மூலம் துல்லியமாக காணலாம்.

வித்தியாசமான அனுபவம்  

‘ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ முறைப்படி இயற்கையின் அம்சமாக உள்ள ஒரு செடியின் வளர்ச்சி நிலைகளை ஸ்மார்ட் போனில் காண்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் செடிகள் வளர்ந்த நிலையில் அவற்றை பெரிய தொட்டிகளில் மாற்றி வைத்து வளர்க்க வேண்டும். மேலை நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முறை விரைவில் நமது பகுதிகளிலும் வரலாம். இந்த பிளான்டர் இந்திய பண மதிப்பில் சுமார் 9 ஆயிரத்துக்குள் இருக்கலாம்.  

மேலும் செய்திகள்