பத்திரங்களை சுலபமாக எழுத உதவும் மாதிரி ஆவண வடிவங்கள்

உரிமையாளர்களே தயார் செய்து அதற்கான பதிவுகளை மேற்கொள்ளும் வகையில் நடைமுறைகள் அமைய வேண்டும் என்பது பலரது நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.

Update: 2018-05-04 22:00 GMT
குறிப்பிட்ட ஒருவருக்கு சொந்தமான வீடு, மனை, இடம் அல்லது அடுக்குமாடி குடியிருப்பு போன்ற சொத்துக்களை வேறு ஒருவருக்கு விற்பனை செய்யும் நிலையில், சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்களை, அவற்றின் உரிமையாளர்களே தயார் செய்து அதற்கான பதிவுகளை மேற்கொள்ளும் வகையில் நடைமுறைகள் அமைய வேண்டும் என்பது பலரது நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. அதன் அடிப்படையில் சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம் உள்ளிட்ட 23 வகையான வெவ்வேறு ஆவணங்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

சொத்து பரிமாற்றம்

பொதுவாக, சொத்து பரிமாற்றம் என்பது இரு நபர்களுக்கு இடையில் நடக்கும் கொடுக்கல்–வாங்கல் நிகழ்வாக இல்லாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாகவும் கவனிக்கப்படுகிறது. எனவே, அதுபோன்ற சொத்து பரிமாற்றங்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

பதிவுத்துறை சட்டங்கள்

குறிப்பாக, மன்னர்கள் ஆட்சி காலம் முதலாகவே சொத்து பரிமாற்றங்களை ஆவணப்படுத்தும் நடைமுறைகள் இருந்துள்ளன. கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள் என்ற பதிவேடுகளும், அதற்கான பதிவு மொழி வழக்குகளும் காலத்திற்கேற்ப மாற்றம் பெற்று வருகின்றன. அவற்றின் சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதி செய்ய 1864–ம் ஆண்டில் பதிவுத்துறை, 1899–ம் ஆண்டில் இந்திய ஸ்டாம்ப் சட்டம் மற்றும் 1908–ல் பதிவு சட்டம் ஆகியவை உருவாக்கப்பட்டன. அவற்றின் தொடர்ச்சியாக பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு சம்பந்தப்பட்ட பணிகள் முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.     

ஆவண உருவாக்கம்

இன்றைய நிலையில், தமிழகத்தில் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்களும் பதிவு செய்யபடுகின்றன. அதன் அடிப்படையில் சராசரியாக ஆண்டுக்கு 1.5 கோடி பேர்கள் பதிவு அலுவலகங்களுக்கு வந்து செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைகளால் எழுதப்பட்ட அல்லது டைப் செய்யப்பட்ட ஆவணங்களை பதிவு செய்வதற்கு முன்பு அவை கச்சிதமாக எழுதப்பட்டிருப்பது முக்கியம். அதன் அடிப்படையில் பல்வேறு ஆவணங்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில மாதிரி படிவங்களை பதிவுத்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இணைய தளம்

பதிவுத்துறையின்  www.tnreginet.net  என்ற இணைய தளத்தில் இருந்து சம்பந்தப்பட்ட ஆவண மாதிரியை இலவசமாக பதிவிறக்கம் செய்து, சொத்துக்கள் குறித்த பெயர், முகவரி மற்றும் சொத்துக்களின் விவரங்கள் ஆகியவற்றை பூர்த்தி செய்து பயன்படுத்திக்கொள்ள இயலும்.

மேலும் செய்திகள்