கட்டிட பொறியாளர்களை கவர்ந்த மரபுசார் கட்டிடங்கள்

நமது பகுதிகளில் தற்போது நமது பழமையான பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு பரவலாகி வருகிறது.

Update: 2018-03-23 22:00 GMT
மது பகுதிகளில் தற்போது நமது பழமையான பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு பரவலாகி வருகிறது. குறிப்பாக, முன்னோர்களால் அமைக்கப்பட்ட பழமையான கட்டுமானங்கள் ஆண்டுகள் பல கடந்தும் வலிமையாக இருப்பது கட்டுமான பொறியாளர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. அதன் காரணமாக பல முக்கிய நகரங்களில் மரபுசார் கட்டுமான மையங்கள் உருவாகியுள்ளன.

மரபுசார் கட்டுமானங்கள்

தமிழக அளவிலும் ஒரு சில மரபு சார் கட்டுமான மையங்கள், தன்னார்வ வல்லுனர் குழுவுடன் செயல்பட்டு வருவது ஊடகங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அவற்றில் அமைப்பு பொறியியல், கட்டிட பொறியியல், மேஸ்திரிகள், கட்டுமான தொழிலாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து மரபு வழியான கட்டிட அமைப்புகளை வடிவாக்கம் செய்துள்ளனர்.

உபயோகத்தில் மறுசீரமைப்பு

வாஸ்து சாஸ்திர நுட்பத்துடன், மரபுசார் கட்டுமான தொழில்நுட்பத்தையும் இணைத்து, சம்பந்தப்பட்ட இடங்களில் கிடைக்கும் மண் மூலம் வீடுகள் உள்ளிட்ட பண்ணை வீடுகளை இந்த முறையில் அமைக்கலாம். பழைய வீடுகளில் உள்ள கதவு, ஜன்னல்களை முறையாக மறுசீரமைப்பு செய்து மீண்டும் உபயோகப்படுத்த இம்முறை வழிகாட்டுவதோடு, மரபு வழியிலான கட்டுமான பொருட்கள் சுற்றுச்சூழலை பாதிக்காத தன்மை கொண்டதாக இருப்பதால், அவற்றை சீர்படுத்தி சிக்கன பட்ஜெட்டில் கட்டிடங்களை அமைக்கவும் உதவுகின்றன.

வலிமையான சுவர்

மரபுசார் முறைப்படி மண்சுவர்கள் கான்கிரீட் சுவர்களை விடவும் வலிமையானவை என்று அறியப்பட்டதால் அதற்கேற்ப பொருத்தமான மண்ணை தேர்வு செய்து, உரிய முறையில் பதப்படுத்தி இறுக்கமாக சுவர்களை அமைத்து மண் வீட்டை நீடித்து நிற்கும்படி செய்யும் வகையில் தொழில்நுட்பங்கள் இப்போது இருக்கின்றன. முன்னோர்களின் மரபு முறையில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப கடுக்காய், வெல்லம், நெல்உமி, கற்றாழை, வைக்கோல் போன்ற மண்ணை இறுகச்செய்யும் தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்தி சுவர்கள் அமைக்கப்படுவது மரபுசார் முறையின் முக்கியமான அம்சம்.

மண் சுவர் இறுக்கம்

மண் சுவர்களை இறுக்கமாக அமைக்க பயன்படும் பொருட்களும், அதற்கான முறைகளும் ஊர் மற்றும் அந்தந்த நிலப்பரப்புகளுக்கு ஏற்ப வெவ்வேறு விதங்களாக அமையும். இறுக்கமாக அமைக்கப்பட்ட மண்சுவர் பாறையின் கெட்டித்தன்மையை பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, காலம் செல்லச்செல்ல பல்வேறு தட்பவெப்ப மாற்றங்கள் காரணமாக மேலும், அவை வலுவாக மாறிவிடுவதும் குறிப்பிடத்தக்கது.

சுவர்களின் சுவாசம்

மண்சுவர்களுக்கு சுவாசம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, அதற்குள் உள்ள மிக நுண்ணிய துளைகளில் காற்று நிறைந்திருப்பதாகும். அதன் காரணமாக, வெளிப்புற சீதோஷ்ண நிலைகள் வீட்டின் உட்புறத்தில் எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை. மண் சுவரைச் சுற்றிலும் சாய்வுதளம் மற்றும் திண்ணை போன்றவற்றை அமைப்பதோடு, மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்காத இடமாக தேர்ந்தெடுத்து மரபுசார் வீடுகளை அமைத்தல் அவசியம். வீட்டிலிருந்து குறைந்தது மூன்று மீட்டர் தொலைவுக்கு அப்பால் மழைநீர் செல்லும்படி வழி அமைப்பதன் மூலம், கீழ்ப்புற சுவர்களில் ஈரப்பதம் தாக்காமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

‘ஹட்கோ’ விருது

நமது பகுதிகளில் பல இடங்களில் சுண்ணாம்பு காரையில் கட்டப்பட்ட மண் வீடுகள் முறையான பராமரிப்புகள் காரணமாக, 60 ஆண்டுகள் கடந்தும் நல்ல நிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. நவீன வடிவமைப்பை பின்பற்றி மரபுவழியில் மண்கொண்டு கட்டப்பட்ட மண் வீட்டுக்கு, பசுமை வீடுகள் பிரிவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘ஹட்கோ விருது’ (வீட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாட்டு கழகம்) கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அத்தகைய மண் வீடுகள் கட்டுமானத்திற்கு குறைந்த முதலீடே போதுமானது.

சாய்வுக்கூரை

மேற்கண்ட முறையில் அமைத்த மரபுசார் வீடுகளில் உள்ள சாய்வுக்கூரை அமைப்பு வெயில், குளிர், மழையில் இருந்து வீட்டின் சுவர்களை பாதுகாப்பதோடு, பதப்படுத்தப்பட்ட மூங்கில் தளம் அமைப்பில் ஆர்.சி.சி தளத்தை விட கிட்டத்தட்ட 40 சதவிகித செலவுகள் சேமிப்பாக மாறுகிறது.

தரைத்தளம்

மண்சுவர், இறுக்கிய மண்சுவர், செங்கல் எலிவளை சுவர் அமைப்பு, கருங்கல் சுவர் போன்ற முறைகளில் மொத்த செங்கல் தேவையில் 25 சதவிகிதத்தை குறைக்கலாம். தரைத்தளத்திற்கு ஜிப்சம் பூச்சு, மண்பூச்சு, செராமிக் ஓடுகள், கிரீன் அல்லது ரெட் ஆக்சைடு பூச்சு, ஆத்தங்குடி ஓடுகள், மரங்களால் அமைக்கப்பட்ட தரை ஆகியவற்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

நிபுணர் வழிகாட்டல்

மேற்கண்ட வகையிலான மரபுசார் கட்டமைப்புகள் பெரும்பாலும் தனி வீடுகளாக அமைக்கப்படுகின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்கள் கொண்ட வீடுகள் அமைக்க இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திவதில் தக்க பொறியியல் நிபுணர் மற்றும் வடிவமைப்பு வல்லுனர் ஆகியோர்களது வழிகாட்டல்கள் அவசியமானதாகும்.

மேலும் செய்திகள்