அடுக்குமாடி வீடு வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

நகர்ப்புற வீடு என்றாலே பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகளாகத்தான் இருக்கின்றன.

Update: 2018-02-09 21:15 GMT
கர்ப்புற வீடு என்றாலே பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகளாகத்தான் இருக்கின்றன. தனி வீடுகளை விட அடுக்குமாடிகள் பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருப்பது மற்றும் மாதாந்திர தவணைகளில் உடனடியாக கிடைப்பது ஆகிய விஷயங்கள் நடுத்தர மக்களுக்கு பல விதங்களிலும் சாதகமாக இருக்கின்றன.

மேலும், மாதாமாதம் வீட்டு வாடகை கொடுப்பதற்கு பதிலாக மாத தவணையை செலுத்தினால் சொந்த வீடே வாங்க இயலும் என்ற திட்டங்களும் பலரது கவனத்தை கவர்ந்ததாக உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி ரியல் எஸ்டேட் நிபுணர்கள் குறிப்பிடுவதை கீழே காணலாம்.

* குடும்பத்தில் பெரியவர்கள் இருக்கும்பட்சத்தில் அவர்களது உடல் நிலை மற்றும் இதர பழக்கங்கள் ஆகியவற்றுக்கு பொருத்தமாக பிளாட்டை தேர்ந்தெடுப்பது முக்கியம். அதாவது குளியலறையில் செய்யப்பட்டுள்ள வசதிகள், வழுக்காத தரைத்தளம், மேல்தளங்களுக்கு எளிதாக செல்ல லிப்ட் வசதி போன்றவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும்.

* எந்த தளத்தில் பிளாட் அமைக்கப்பட்டுள்ளது என்பதோடு, அதன் சுற்றுப்புற அமைப்பையும் கவனிப்பது நல்லது. அருகில் குடியிருப்பவர்களோடு சுமுகமான பழக்கவழக்கம் கொண்டிருப்பது பிளாட் வாங்குபவர்களுக்கு அவசியமானது என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

* தொலைக்காட்சி அல்லது ஸ்பீக்கர்களின் ஒலி அளவை அதிகமாக வைத்து பாடல்கள் அல்லது இசை கேட்பதால் அருகில் வசிப்பவர்கள் பாதிக்கப்படுவதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

* மின் சாதனங்களை புதியதாக பொருத்துவது அல்லது அவற்றை ரிப்பேர் செய்வது போன்ற பணிகளை குடியிருப்புக்கான எலக்ட்ரிஷியன் அல்லது குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒயரிங் பற்றி விபரங்களை அறிந்தவர் ஆகியோர் செய்வதே பாதுகாப்பானது.

* இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில்தான் நிறுத்த வேண்டும். தளத்தின் வரிசைக்கேற்ப எண்கள் குறிப்பிட்டு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், வேறு இடங்ளில் நிறுத்துவது கூடாது.

* அடுக்குமாடியில் அனைத்து உரிமையாளர்களுக்கும், பொது இடங்களை பயன்படுத்தும் உரிமை, சமமாக பகிர்ந்து அளிக்கப்பட்டு இருக்கும். வீட்டு வாசலுக்கு வெளியே உள்ள பகுதிகள் அனைத்தும் பொதுவான பயன்பாட்டு இடங்கள் என்ற நிலையில் அவற்றை பயன்படுத்தும்போது கவனமாக செயல்படவேண்டும்.

* நடையாதைகள், பால்கனி, லிப்ட், மாடிப்படி, தோட்டம், மேல்மாடி ஆகிய பொது பயன்பாட்டு பகுதிகளை பராமரிக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

* கட்டிடத்தின் வெளிப்புற பகுதிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதியதாக வண்ணம் பூசுவது, தனிப்பட்ட முறையில் மேற்கண்ட இடங்களை பராமரிப்பது போன்றவற்றை குடியிருப்போர் சங்கம் அமைத்து பொதுப் பயன்பாட்டு இடங்களை பராமரிக்க அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

மேலும் செய்திகள்