குடியிருப்புகளில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு வசதிகள்

நகர்ப்புற அடுக்குமாடி வீடுகளில் குட்டி பசங்களுக்கான பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்கவேண்டியது முக்கியம்.

Update: 2017-07-14 22:00 GMT
கர்ப்புற அடுக்குமாடி வீடுகளில் குட்டி பசங்களுக்கான பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்கவேண்டியது முக்கியம். குழந்தைகள் எல்லா இடங்களிலும் சுற்றி வரக்கூடியவர்கள் என்ற நிலையில் மாடிப்படிகளில் ஏறி இறங்கி விளையாடுவதை எல்லா நேரங்களிலும் தடுக்க முடிவதில்லை. குறிப்பாக அவர்களது பாதுகாப்பை கருத்தில்கொண்டு பால்கனி மற்றும் மாடிப்படிகளில் கச்சிதமான தடுப்பு முறைகளை கையாளவேண்டும்.

மேற்கண்ட இடங்களில் பொருத்தப்படும் ‘சேப்டி கேட்’ எனப்படும் தடுப்பு கதவுகள் மற்றும் ‘ஹேண்ட் ரெயில்’ என்று சொல்லப்படும் கைப்பிடி அமைப்புகள் ஆகியவை போதுமான உயரத்தில் இருக்குமாறு கவனித்துக்கொள்ளவேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட வீடுகளில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்களில் கவனிக்க வேண்டிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

* சின்ன குழந்தைகள் மாடிப்படிகளில் ஏறுவது அல்லது இறங்குவது ஆகியவற்றை தவிர்ப்பதற்கு மாடிப்படிகளின் நுழைவுப்பகுதியில் சிறியதாக ‘சேப்டி கேட்’ அமைப்பது நல்லது. அந்த கேட்

1 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் இருந்தால் போதுமானது. மரம் அல்லது அலுமினியம் போன்ற பொருட்களால் அதை அமைத்துக்கொள்ளலாம்.

* மாடிப்படிகளில் கைப்பிடி சுவர் அமைப்புகள் 1 மீட்டர் உயரத்துக்கும் அதிகமாக இருப்பது நல்லது. அதை விடவும் உயரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் அதன்மீது ஏறியும், இறங்கியும் சறுக்கி விளையாடும் வாய்ப்புகள் இருக்கின்றன.

* மாடிப்படிகளுக்கு வழவழப்பான டைல்ஸ் வகைகளை பதிப்பதை தவிர்த்து விடவேண்டும். மேலும், கிரானைட், மார்பிள் போன்றவை அட்டகாசமான தோற்றம் கொடுப்பவையாக இருந்தாலும் வழுக்கும் தன்மை கொண்டதாக இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அதனால் சொரப்பான மேற்பரப்பு கொண்ட டைல்ஸ் வகைகளை பயன்படுத்தலாம்.

* தரை மட்டத்திலிருந்து குறைவான உயரத்தில் கண்ணாடி ‘ஷோ–கேஸ்’ போன்றவற்றை குழந்தைகள் உள்ள வீடுகளில் அமைக்கும்போது தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துகொள்ளவேண்டும். மேலும், கண்ணாடிகள் உறுதியாக இருக்கவேண்டும்.

* குழந்தைகள் பயன்படுத்தும் மேஜை முனைகள் கூர்மையாக இருப்பது கூடாது. அவ்வாறு இருந்தால் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேஜைகளின் கார்னர் பாதுகாப்புக்காக பொருத்தப்படும் ‘பிளாஸ்டிக் பிட்டிங்குகள்’ கடைகளில் கிடைக்கின்றன.

* பொதுவாக, குழந்தைகளுக்கான கட்டில் அதிக உயரமாக இருக்கக்கூடாது. மேலும், கட்டிலின் ஓரத்தில் தக்க தடுப்புகள் பொருத்திவிட்டால், தூக்கத்தில் புரண்டு கீழே விழுவது தவிர்க்கப்படும்.

* புதியதாக ‘போர்வெல்’ அமைக்கப்பட்ட மனைகளில், குழாய்கள் பொருத்தப்படும் வரையில் அவற்றை கச்சிதமாக கோணிகள் கொண்டு மறைத்து நன்றாக கட்டி மூடி வைக்கவேண்டும். குழந்தைகள், சிறுவர்கள் இருக்கும் வீடுகளில் உள்ள கிணறுகளுக்கு தக்க மூடி அல்லது வலை போட்டு மூடப்பட்டிருப்பது நல்லது.

மேலும் செய்திகள்