பசுமையான சூழலை வீட்டுக்குள் வரவழைக்கும் சிறிய தோட்டங்கள்

இயந்திர மயமான தற்போதைய வாழ்வில் இயற்கை சூழல் மட்டுமே மனதில் அமைதியை எளிதாக ஏற்படுத்துகிறது. நகரமயமாக்கல் காரணமாக மரம், செடி, கொடிகள் ஆகியவை சுற்றுப்புறத்திலிருந்து அகற்றப்பட்டு விட்டன.

Update: 2017-06-30 21:30 GMT
யந்திர மயமான தற்போதைய வாழ்வில் இயற்கை சூழல் மட்டுமே மனதில் அமைதியை எளிதாக ஏற்படுத்துகிறது. நகரமயமாக்கல் காரணமாக மரம், செடி, கொடிகள் ஆகியவை சுற்றுப்புறத்திலிருந்து அகற்றப்பட்டு விட்டன. மீண்டும் பசுமையான செடி வகைகள் நமது வாழ்வில் இடம் பிடிக்கவேண்டுமானால், அவற்றை சிறிய அளவில் வீடுகளுக்குள் வளர்ப்பது அவசியம். அதற்காக ‘டெரேரியம்’ என்ற முறையில் மீன் தொட்டி அல்லது சிறிய குடுவை போன்றவற்றில் செடிகள் வளர்க்கும் முறை பல இடங்களில் இருக்கிறது. மேலை நாட்டு தோட்டக்கலை நிபுணரால் தற்காலிகமாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த முறையானது பல உலக நாடுகளிலும் வழக்கத்தில் உள்ளது.

‘குட்டி லேண்ட்ஸ்கேப்’

‘டிஷ் கார்டன்’ எனப்படும் தட்டு வடிவ அமைப்புகளில் செடிகள் வளர்க்கும் முறையும் இப்போது நடைமுறையில் உள்ளது. வீடுகளின் உட்புறத்தில் செய்யப்படும் தோட்ட அமைப்பை, குடுவை அல்லது டிரே ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்குவது ‘மினி லேண்ட்ஸ்கேப்’ என்று குறிப்பிடப்படுகிறது. அதில் பயன்படும் தொட்டிகள் செராமிக், களிமண் அல்லது சிமெண்டு போன்ற பொருட்களால் செய்யப்பட்டதாக இருக்கலாம். கச்சிதமான அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவற்றின் கீழ்ப்பகுதியில் கூழாங்கற்கள் மற்றும் சலிக்கப்பட்ட ஆற்று மணலை போட்டு, அதற்கு மேற்பரப்பில் இயற்கை உரம் கலக்கப்பட்ட தோட்ட மண் கலவையை போட்டு செடிகளை நட்டு வளர்க்கலாம்.

நீர்க்கசிவு கூடாது

மேற்கண்ட அமைப்பை சிறிய அளவில் உள்ள டிரே–யில் வைத்தால் அது ‘டிரே லேண்ட்ஸ்கேப்’ அமைப்பாக மாறிவிடும். மேலும் அதில் உள்ள மண் வெளியே சிதறாத வண்ணம், மண்ணை இறுக்கி பிடிக்கும் பாசி வகை செடிகளை வளர்க்கலாம். அந்த அமைப்பில் எவ்வகையிலும் நீர்க்கசிவு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் மேசைகள் மீது வைக்கும்போது பாதிப்புகள் ஏற்படாது. தொட்டிகளை முற்றிலும் மண்ணால் நிரப்பாமல் சிறுசிறு கூழாங்கற்களும் கலந்து வைக்கும்போது வேர்களுக்கு வேண்டிய காற்றோட்டம் கிடைக்க ஏதுவாக இருக்கும்.  

குறைவான பராமரிப்பு

‘மினி லேண்ட்ஸ்கேப்’ அமைப்பில் மண் சட்டி அல்லது பல்வேறு வகை ‘டிரே’ ஆகியவற்றில் வைக்கும்போது தண்ணீர் பயன்பாடு, செடிகளின் வகை, எந்த அறையில் வைப்பது மற்றும் வெயில் அல்லது காற்றோட்டம் படிவதற்கான சாத்தியங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொள்வது அவசியம். மேலும், செடி வகைகளின் இலைகள் சிறியதாகவும், ஒட்டு மொத்த செடியின் வளர்ச்சி மெதுவாகவும் இருப்பதுதான் நல்லது. அதன் காரணமாக அதிகப்படியான பராமரிப்புகள் தேவைப்படாது. பைலியா, ஜேட், சக்யூலண்ட்ஸ் போன்ற குறைவான தண்ணீர் தேவை கொண்ட செடிகள் அதற்கு பொருத்தமாக இருக்கும்.

இரண்டு வகைகள்

‘டெரேரியம்’ முறையில் குடுவை போன்ற உருண்டை வடிவில் உள்ள மீன் தொட்டிகளில் குட்டியான செடிகளை மேசை மீது வைத்தும் வளர்க்கலாம். அந்த மீன் தொட்டியின் அடிப்புறத்தில் ஒரு லேயர் சிறிய கூழாங்கற்களை போட்டு, அதற்கு மேல் ஆற்று மண், அதற்கு மேல்புறம் மண் கலவை போட்டு செடிகளை வளர்க்கலாம். அந்த டெரேரியம் அமைப்பை குளோஸ்டு டெரேரியம் என்ற மூடப்பட்ட நிலையிலும், ஓப்பன் டெரேரியம் என்ற திறந்த அமைப்பாகவும் வைக்கலாம். இருவகை அமைப்புக்கேற்ப தக்க செடி வகைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும் குறிப்பாக தண்ணீர் பயன்பாடு குறைவாக உள்ள செடி வகைகள் பொருத்தமாக இருக்கும்.

தொங்கும் தோட்டம்

குறிப்பாக கண்ணாடி குடுவைக்குள் மண் நிரப்பும்போது சுத்தமாக இருந்தால் வெளிப்புறத்தில் இருந்து பார்க்கும்போது அழகாக தெரியும். மேலும், ஓப்பன் டெரேரியம் அமைப்பில் சிறிய அளவிலான கள்ளிச்செடிகள் வைத்து, குட்டியான பாலைவன எபெக்ட் உண்டாகும்படி செய்யலாம். இவற்றில், ஹேங்கிங் டெரேரியம் எனப்படும் மேற்கூரையிலிருந்து தொங்கும் அமைப்பாகவும் செய்து, கற்பனை மற்றும் கலைத்திறன் வெளிப்படும்படி செய்யலாம். அழகான விதவிதமான பாட்டில்களை வாங்கி, அதனுள் கோலி குண்டு அல்லது கூழாங்கற்களை போட்டு, முழுக்க தண்ணீர் நிரப்பி மணி பிளான்ட் போன்ற செடிகளை வளர்க்கலாம். பாட்டிலின் மூடப்படும் பகுதியில் கார்க் வைத்து மூடிவிட்டு, அதன் வழியே செடியின் தண்டு வளரும்படி செய்தாலும் அழகிய தோற்றம் தரும்.

மேலும் செய்திகள்