கழிவு நீரை பயன்படுத்துவதில் புதிய முறை

பல வீடுகளில் உபயோகப்படுத்தும் தண்ணீரின் பெரும்பங்கு சமையலறை, குளியலறை ஆகியவற்றிலிருந்து கழிவு நீராக வெளியே செல்கிறது.

Update: 2017-06-09 23:15 GMT
ல வீடுகளில் உபயோகப்படுத்தும் தண்ணீரின் பெரும்பங்கு சமையலறை, குளியலறை ஆகியவற்றிலிருந்து கழிவு நீராக வெளியே செல்கிறது. அந்த தண்ணீரானது வீட்டு தோட்டத்திற்கு அல்லது மரம், செடி கொடிகளுக்கு நேரடியாக பாயும்படி விடப்படுகிறது.

பாதிப்புகள்

வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீரானது, செடி கொடிகள் மற்றும் மரங்களுக்கு அப்படியே நேரடியாக பாய்ச்சப்பட்டால், அவற்றின் வளர்ச்சி பாதிப்புக்கும் என்பது அறியப்பட்டுள்ளது. காரணம், அந்த நீரில் சலவை பவுடர் மற்றும் சோப்பு கரைசல் ஆகியவை கலந்திருப்பதால் தண்ணீரானது ரசாயன மாற்றத்தை அடைந்திருக்கும். அதன் காரணமாக மரம் மற்றும் செடி கொடிகளுக்கு அந்த நீர் ஊறு விளைவிப்பதாக அமையும்.

புதிய வழி

வீடுகளில் வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வதற்கு புதிய வழியை நிபுணர்கள் காட்டுகிறார்கள். அந்த முறையை நமது வீடுகளிலும் பயன்படுத்தலாம். அதாவது, மூன்றடி நீளம், மூன்றடி அகலம், மூன்றடி ஆழம் கொண்ட ஒரு சிமெண்டு தொட்டியை தோட்டத்தில் அமைக்க வேண்டும். வீட்டின் கழிவு நீர் மொத்தமாக அதற்குள் வந்து சேர்வதாக குழாய் அமைப்புகளை பொருத்தியிருக்க வேண்டும். அந்த குழியின் கீழ்புறமாக நீர் வடிந்து வெளியில் வர ஒரு துளை இருக்க வேண்டும்.

அந்த தொட்டிக்குள் கழிவு நீரை விடுவதற்கு முன்பு அதற்குள் மணல் மற்றும் ஒன்றரை அங்குல கருங்கல் ஜல்லி ஆகியவற்றை தொட்டியின் பாதியளவுக்கு நிரப்பி விட வேண்டும். பாதியளவு மணலும் ஜல்லியும் போடப்பட்ட தொட்டிக்குள் கல்வாழை மற்றும் சேப்பங்கிழங்கு போன்ற செடி வகைகளை நட்டு வளர்க்க வேண்டும். கச்சிதமாக சுத்திகரிக்கப்பட்ட பிறகு, கழிவு நீரை பயன்படுத்தினால் எந்த பிரச்சினையும் இல்லாமல் செடி கொடிகள் நன்றாக வளரும்.

பாசிகள்

அந்த ஜல்லியிலும் மணலிலும் நாளாக நாளாக ஒரு வகை பாசிகள் தோன்றி வளர்ந்து கொண்டிருக்கும். அந்த பாசியில் உள்ள பாக்டீரியாக்கள் குளியலறை மற்றும் சமையலறையிலிருந்து வெளியேறும் நீரில் கலந்துள்ள பாஸ்பேட் போன்ற உப்புக்களை சாப்பிட்டு வளரக்கூடியவையாகும். கல்வாழை மற்றும் சேப்பக்கிழங்கு செடிகளின் வேர்கள் சுத்தமான நீரை தொட்டிக்கு கீழே செல்ல உதவும்.

சுத்தமான நீர்

கழிவுநீர் வந்து சேர்ந்த இரண்டு மணி நேரத்திற்குள் அது நல்ல நீராக மாறி கீழேயுள்ள துளையின் வழியாக வெளியில் வரத்துவங்கும். சுத்தமான அந்த நீரை செடி கொடிகளுக்கு பாய்ச்சினால் அவை, சுகாதாரமாக நல்ல முறையில் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்.

மேலும் செய்திகள்