சொந்த வீடு வாங்குபவர்களுக்கு நிபுணர்கள் தரும் ஆலோசனைகள்
வீடு வாங்க முடிவு செய்யும் குறிப்பிட்ட சதவிகித மக்களுக்கு உள்ள ஆரம்ப குழப்பம், அடுக்குமாடி குடியிருப்பில் ‘பிளாட்’ வாங்குவதா..? அல்லது தனி வீடு வாங்குவதா..? என்பதாகும்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் வீடு வாங்க முடிவு செய்யும் குறிப்பிட்ட சதவிகித மக்களுக்கு உள்ள ஆரம்ப குழப்பம், அடுக்குமாடி குடியிருப்பில் ‘பிளாட்’ வாங்குவதா..? அல்லது தனி வீடு வாங்குவதா..? என்பதாகும். அந்த முடிவை எடுப்பதில் தனிப்பட்ட விருப்பம், குடும்ப ரீதியான நிர்பந்தம் மற்றும் பொருளாதார நிலை போன்றவை முக்கியமான இடத்தில் இருக்கின்றன. நமது விருப்பம், குடும்ப சூழல், பட்ஜெட் உள்ளிட்ட இதர காரணங்கள் ஆகியவற்றையும், நிபுணர்களது, கீழ்க்கண்ட ஆலோசனைகளையும் மனதில் கொண்டு சரியான முடிவுக்கு வரலாம்.
• காற்றோட்டமாகவும், சுதந்திரமாகவும் இருக்க தனி வீடு உகந்தது. நாம் ஊரில் இல்லாத சமயங்களில் வீடு மற்றும் பொருட்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு பொருத்தமானது.
• திருமணம், குழந்தைகள், வயதானவர்கள் என்ற குடும்ப ரீதியான அடிப்படையிலும் வீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல், பணியிடத்துக்கும், வீட்டுக்கும் உள்ள தூரம் ஆகியவற்றை மனதில் கொண்டு புறநகர் பகுதி அல்லது நகருக்குள் வீடு அல்லது ‘பிளாட்’ என்ற முடிவை எடுக்கலாம்.
• அடுக்குமாடி குடியிருப்பாக இருக்கும்பட்சத்தில் பிளம்பிங், எலக்ட்ரிகல் மற்றும் கழிவு நீர் போன்றவற்றில் பிரச்சினை வரும்பட்சத்தில் எல்லோரும் சேர்ந்து செயல்பட வேண்டும். தனி வீடாக இருந்தால், பராமரிப்புகளை தனியாக சரி செய்ய வேண்டியிருக்கும்.
• பிளாட் எனும்போது மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட இதர பராமரிப்புகள் போன்றவற்றை குடியிருப்பு நிர்வாகிகள் பார்த்துக்கொள்வார்கள். மேலும், பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வேலை போன்றவற்றுக்கு ஆட்கள் தயாராக இருப்பார்கள்.
• பிளாட் எனும்போது ஒட்டு மொத்த அபார்ட்மெண்ட் பகுதியையும் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை அனைவரும் இணைந்து அழகாக பராமரிப்பு செய்து கொள்ளலாம். நமது பிளாட்டை விற்க வேண்டிய நிலையில் வெளித்தோற்றம் காரணமாக நல்ல விலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
• அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்குபவர்கள், இயன்ற வரையில் அதன் கட்டுமான பணிகள் நடக்கும்போதே கவனித்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் நமக்கு தேவையான மாற்றங்களை முன்னதாகவே செய்ய இயலும்.
• அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் முன்னர், அதற்கான வழிகாட்டுதல்களின்படி பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளதா..? என்பதை கவனிப்பது அவசியம். தனி வீடாக இருக்கும் பட்சத்தில் குறைகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
• வீடு என்பது ஒரு வகை முதலீடு என்ற அடிப்படையில் மறு விற்பனையின்போது என்ன விலைக்கு போகும் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். இடத்தின் மதிப்பு உயர்ந்துகொண்டிருக்கும் நிலையில், கட்டிடத்தின் மதிப்பு குறைந்து கொண்டிருக்கும். அதாவது, 20 வருடம் ஆன தனி வீட்டுக்கும், அடுக்கு மாடி குடியிருப்புக்கும் மறு விற்பனையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் என்பதை கவனிக்கவேண்டும். தனி வீடு அமைந்த, நிலத்தின் மதிப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
• பொதுவாக, அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும், பாதுகாப்புக்காக முன்புற கேட்டில் காவலாளிகள் இருப்பார்கள். யாரெல்லாம் குடியிருப்புக்குள் வந்தார்கள்..? என்பது போன்ற தகவல்கள் அவர்களால் பதிவு செய்யப்படும்.
• பூங்கா, நீச்சல்குளம், விளையாடும் வசதிகள், உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதற்கான இட வசதிகள் அபார்ட்மெண்ட் அமைப்பில் இருப்பதோடு, குழு மனப்பான்மையோடு அனைவரிடமும் பழகவும் வாய்ப்பு கிடைக்கும்.
• அடுக்கு மாடிகளில் குடியிருப்பவர்களுக்கு பணியிட மாற்றம் ஏற்படும் சமயங்களில், வீட்டை வாடகைக்கு விடும் பொறுப்பை அபார்ட்மெண்ட் அசோசியேஷன் வசம் எளிதாக ஒப்படைக்க இயலும்.
• வாகனங்கள் நிறுத்த அடுக்குமாடிகளில் தனித்தனியான இடவசதி செய்யப்படும். தனி வீடுகளில் இவ்விஷயத்தில் சற்று கூடுதலான கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.
• ‘கம்யூனிட்டி டெவலப்மெண்ட்’ என்பது அடுக்குமாடி குடியிருப்புகளில்தான் சாத்தியம். மேலும், முதியோர்கள் அல்லது குழந்தைகளின் மனநலனுக்கு உகந்த சூழல்கள் அங்கு ஓரளவாவது சாத்தியம். மருந்துகள், மளிகை பொருட்கள் போன்றவை எளிதாக கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.
• அடுக்குமாடிகளில் குடும்ப உறுப்பினர்களுக்காக அறைகளை விரிவு செய்து கொள்ள இயலாது. தோட்டம் அமைப்பது, பிராணிகள் வளர்ப்பது போன்றவை பிளாட்களில் எளிதான காரியமில்லை.
• அடுக்குமாடி மற்றும் தனி வீடு ஆகிய இரண்டிலும் உள்ள சாதகமான அம்சங்களோடு வீடுகள் வேண்டுமானால், கூடுதல் பட்ஜெட்டில் அமைக்கப்பட்ட ‘ரெசிடென்ஷியல் புராஜெக்ட்டுகளின்’ வில்லா வகை வீடுகள் சரியாக தேர்வாக இருக்கும்.