ஒரே நாடு ஒரே வேளாண் சந்தை!
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று ஏற்கனவே பிரதமர் உறுதியளித்த நிலையில், அந்தக் காலக்கெடுவும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி50 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கிறார்கள். ஆனால், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால், ஆண்டுதோறும் விவசாயிகள் நஷ்டமடைந்து கொண்டிருக்கும் நிலையில், பலர் விவசாய நிலங்களை வீட்டுமனைகளுக்காக அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு, வேறு தொழிலை பார்க்க புறப்பட்டு சென்றுவிடும் நிலை இருக்கிறது.
இந்தநிலை நீடித்தால், எதிர்காலத்தில் உணவு உற்பத்தியே பெரும் பாதிப்புக்கு உள்ளாகிவிடும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று ஏற்கனவே பிரதமர் உறுதியளித்த நிலையில், அந்தக் காலக்கெடுவும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இது நிறைவேற வேண்டும் என்றால், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைத்தால்தான் முடியும். அந்த இலக்கை நோக்கி செல்லும் வகையில் மத்திய அமைச்சரவை சில நல்ல முடிவுகளை எடுத்துள்ளது. ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என்பது போல பல திட்டங்களை நிறைவேற்றி வரும் மோடி அரசாங்கம், இப்போது ஒரே நாடு ஒரே வேளாண் சந்தை என்ற நிலையை உருவாக்க கடந்த வாரம் கூடிய அமைச்சரவையில் சில முடிவுகளை எடுத்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், விவசாயிகள் வேளாண் விளைபொருள் விற்பனை சந்தைக்குழு அங்கீகாரம் அளித்துள்ள சந்தைகளிலும், மாநில அரசுகளால் பதிவு பெற்ற வியாபாரிகளிடமும் தான் விற்க முடியும் என்றநிலை இருக்கிறது. ஆனால், பெரும்பாலான விவசாயிகள் இதற்கு வெளியே இடைத்தரகர்கள் மூலம் அங்கீகரிக்கப்படாத வியாபாரிகளிடம் தங்கள் அவசரத்துக்காக, அவர்கள் கேட்ட விலைக்கு விற்றுவிடும் அவலநிலை இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், மாநிலங்களுக்கு இடையே விளை பொருட்களை கொண்டு சென்று விற்பதற்கும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. இதைத்தடுக்க மத்திய அமைச்சரவை, வேளாண் விளை பொருள் சந்தை குழுக்களின் கீழ் உள்ள சந்தையில் தான் விவசாயிகள் விற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாமல், இந்தியா முழுவதும் எந்த இடத்திலும், எந்த வியாபாரிகளிடமும், அது தனியார் நிறுவனங்கள் ஆனாலும் சரி, ஏற்றுமதியாளர்கள் ஆனாலும் சரி, பதப்படுத்தும் தொழிலில் உள்ளோர் என்றாலும் சரி அல்லது கூட்டுறவு அமைப்புகளானாலும் சரி, நேரடியாக விற்றுக்கொள்ள முடியும் என்று முடிவெடுத்துள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகளால் குளிர்பதன வசதி, பதப்படுத்தும் வசதி போன்ற தொழில்களில் தனியார் ஈடுபட முடியாத காரணத்தால், அழுகும் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், அதை சேமித்து வைக்கும் வசதிகள் இல்லாததால் கேட்ட விலைக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்போது அரசு எடுத்த முடிவுகளால், மொத்த வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோருடன் பயிரிடும் போதே விலைகளை நிர்ணயித்து ஒப்பந்தம் செய்துகொள்ள முடியும். ஒப்பந்த விலையைவிட விளைச்சலுக்கு பிறகு விலை அதிகமாக இருந்தால், அதிலும் ஒரு பங்கு விவசாயிகளுக்கு கிடைக்கும். இதுமட்டுமல்லாமல், தானிய வகைகள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், உணவு எண்ணெய், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப்பொருட்களை சேமித்து வைக்கவும், கொண்டு செல்வதற்கும், வினியோகிப்பதற்கும், அதை விற்பனை செய்வதற்கும் முழு சுதந்திரம் கிடைப்பதால், வேளாண்மைத் துறையில் தனியார் முதலீடு மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் நிறைய கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இதற்கு விவசாயிகளும், வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இந்த முடிவுகளை எல்லாம் நிறைவேற்ற மத்திய அரசாங்கம் அவசர சட்டங்களை பிறப்பித்துள்ளது. இனி வேளாண் விளைபொருள் வர்த்தகத்தில் மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு உள்ளேயும் உள்ள கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கப்படும் நிலையில், விவசாயிகள் தங்கள் விளைபொருளுக்கு யார் அதிக விலை கொடுக்கிறீர்களோ? அவர்களுக்கே விற்று பலன்பெற முடியும். மொத்தத்தில் விவசாயிகளுக்கும் பலனளிக்கும், அவர்களிடம் இருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கும், நிறுவனங்களுக்கும் பலனளிக்கும்.