பொருளாதார வளர்ச்சி கடும் சரிவு

மற்ற பிரச்சினைகளை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு, பொருளாதார வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.

Update: 2020-01-08 22:30 GMT
ற்ற பிரச்சினைகளை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு, பொருளாதார வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது. கடந்த ஆண்டு உலகிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சியை பெற்ற நாடு இந்தியா என்ற பெயர் இருந்தது. ஆனால் இந்த நிதி ஆண்டில் அது கடுமையான சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சீனாவைவிட மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளையும்விட, பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிவிட்டது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை கண்ட இந்தியா, இரண்டாவது காலாண்டில் 4.5 சதவீத வளர்ச்சியைத்தான் கண்டது. தற்போது மத்திய புள்ளியியல் அலுவலகம் இந்த ஆண்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக குறைவான பொருளாதார வளர்ச்சி இந்த நிதி ஆண்டில்தான் ஏற்பட்டுவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தின் முக்கிய அங்கங்களான விவசாயம், தொழில், சேவைகள் ஆகிய 3 பிரிவுகளிலும் கடந்த ஆண்டைவிட, குறைவான வளர்ச்சியே காணப்படுகிறது. இதில் தொழில் வளர்ச்சிதான் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு தொழில் வளர்ச்சி 3-ல் ஒரு பங்காகத்தான் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் உற்பத்தி பிரிவு கடந்த நிதி ஆண்டில் 6.9 சதவீதமாக இருந்த நிலைக்கு மாறாக, இந்த ஆண்டு 2 சதவீதம்தான் வளர்ச்சி கண்டிருக்கிறது. உற்பத்தி பிரிவு வளர்ச்சிதான் வேலைவாய்ப்பை பெருக்குவதாகும். ஆக, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார வீழ்ச்சியால் அரசுக்கு கடுமையான நிதி பற்றாக்குறை ஏற்படும். உற்பத்தி இருந்தால்தான் வரி வருவாய் அதிகரிக்கும். இப்போது உற்பத்தி குறைந்துள்ளநிலையில், வரி வருவாயும் சரிந்து, நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பெரிய பாதிப்பை சமாளிக்க அரசு தன் செலவினங்களை குறைக்க முடிவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்களுக்காக செலவழிக்க 27.86 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசாங்கம் ஒதுக்கி இருந்தது. 

நிதி ஆண்டு தொடங்கிய ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் முடிய 8 மாதங்களில் மொத்த ஒதுக்கீட்டில் 65 சதவீதம் செலவழிக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள 35 சதவீத தொகையில் 2 லட்சம் கோடி ரூபாய் செலவை மத்திய அரசாங்கம் குறைக்க திட்டமிட்டுள்ளது. இது மொத்த செலவில் 7 சதவீதமாகும். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக 1 லட்சத்து 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். தற்போது நிலைமையில் அது எவ்வாறு நிறைவேறப்போகிறது? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்தநிலையில், அடுத்த மாதம் கூடும் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் மற்றுமொரு வட்டிவிகித குறைப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்புகளை அதிகமாக அள்ளி வழங்கும் உற்பத்தி துறை மட்டுமல்லாமல், கட்டுமான துறையும் பயங்கர வீழ்ச்சியை கண்டிருப்பது மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது. எனவே இப்போதைய சூழ்நிலையில் மத்திய அரசாங்கத்தின் பார்வை மற்ற பிரச்சினைகளை நோக்கி இருப்பதை தவிர்த்து, பொருளாதார வளர்ச்சியிலும், அதிலும் குறிப்பாக தொழில், விவசாயம், சேவைத்துறைகளை மேம்படுத்துவதற்காக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்? எந்தந்த வகையில் ஊக்கங்கள், சலுகைகளை அளித்து இந்தியாவை வேகமான வளர்ச்சி காணும் நாடாக மாற்றலாம் என்பதில் மட்டும் உன்னிப்பான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றுதான் நாடு எதிர்பார்க்கிறது.

மேலும் செய்திகள்