இந்திய நீதிப்பணி

பா.ஜ.க. அரசாங்கம் ஐ.ஜே.எஸ். என்று கூறப்படும் இந்திய நீதித்துறை பணி என்று ஒரு புதிய பணிப்பிரிவை தொடங்குவதற்கான வேலைகளை கையில் எடுத்துவிட்டது.;

Update: 2019-08-02 22:00 GMT
மாவட்ட நீதிபதிகளை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற அகில இந்திய பணிகள் வரிசையில் இந்திய நீதித்துறை பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி தேர்ந்தெடுக்கும் ஒரு முயற்சியை மத்திய அரசாங்கம் தொடங்கியுள்ளது. இந்த முயற்சி இப்போது தொடங்கப்பட்டது அல்ல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, 2009–ம் ஆண்டும், 2013–ம் ஆண்டும், முதல்–அமைச்சர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அப்போது மாநில முதல்–அமைச்சர்கள் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக இந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது பா.ஜ.க. அரசாங்கம் ஐ.ஜே.எஸ். என்று கூறப்படும் இந்திய நீதித்துறை பணி என்று ஒரு புதிய பணிப்பிரிவை தொடங்குவதற்கான வேலைகளை கையில் எடுத்துவிட்டது. 

மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் ஏற்கனவே இதுகுறித்து ஆலோசனைகளில் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளார். அந்த ஆலோசனைகள் ஒருபக்கம் நடந்துகொண்டு இருக்கும்போதே, மத்திய நீதித்துறை செயலாளர் அலோக் ஸ்ரீவத்சவா, அனைத்து மாநிலங்களிலும் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் அரசு தலைமை செயலாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, இதுதொடர்பாக கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டு இருக்கிறார். தற்போது மாநிலங்களில் மாவட்ட நீதிபதிகளை உயர்நீதிமன்றம் தான் தேர்ந்தெடுக்கிறது. இவர்கள் எல்லாம் அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள். அந்தந்த மாநிலங் களிலேயே பணிபுரிபவர்கள். தமிழ்நாட்டில் மாவட்ட நீதிபதிகளிடம் நீதி கேட்டு வரும் பொதுமக்கள் பெரும்பாலும் தமிழ்மொழி மட்டுமே தெரிந்தவர்களாக இருப்பார்கள். அதனால்தான் செசன்சு கோர்ட்டுகளில் பல நேரங்களில் தமிழ் மொழியிலேயே வாதாடுவார்கள். நீதிபதிகள் தமிழிலும் விசாரணை நடத்துவார்கள், தமிழிலும் தீர்ப்புகள் வழங்கப்படுவது உண்டு. ஐகோர்ட்டில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும், தீர்ப்புகள் தமிழிலும் வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், ஐ.ஜே.எஸ். என்ற இந்த புதிய பணிப்பிரிவு ஏற்புடையது அல்ல. இத்தகைய சூழ்நிலையில், இதுபோன்ற பணிகளுக்கு அகில இந்திய நீதித்துறை பணியில் இருந்து தேர்ந் தெடுக்கப்பட்டால், தமிழே தெரியாத வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் மாவட்ட நீதிபதிகளாக நியமிக்கப்பட வாய்ப்புண்டு. தமிழ் மொழி தெரியாமல் அவர்களால் நீதி பரிபாலனம் செய்யமுடியாது என்று ஒருசாரார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 

மற்றொரு பக்கம் இந்திய நீதிப்பணி மூலம் மாவட்ட நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதனால் தேசிய ஒருமைப்பாடு வளரும், ஆற்றல் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் மிகுந்த சட்டஞானம் உள்ளவர்களே நீதிபதிகளாக வருவார்கள். வெளிமாநிலங்களில் இருந்து நியமிக்கப்படும்போது, 

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்போல குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த மாநில மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விதிகள் பிறப்பிக்கலாம், இந்திய நீதித்துறை பணிகளில் தேர்வு பெறுகிறவர்களேயே ஐகோர்ட்டு நீதிபதிகளாகவும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாகவும் பதவி உயர்வு பெற வாய்ப்பு இருக்கிறது என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது. இந்திய நீதித்துறை பணிகள் மூலம் நேரடியாக மாவட்ட நீதிபதிகளை தேர்வு செய்யும் முறைக்கு வரவேற்பும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது. எனவே, தமிழக அரசும், பார்கவுன்சில் மற்றும் வக்கீல்கள் சங்கமும் இதுகுறித்து தீவிரமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், சட்டப்படிப்பு படித்தவர்கள்தான் இத்தகைய பதவிகளுக்கு வரமுடியும் என்ற நிலையில் இந்திய நீதித்துறை பணி வேண்டுமா?, வேண்டாமா? என்பதை முடிவு செய்ய வேண்டியது தமிழக அரசும், நீதிமன்றங்களும், வக்கீல்கள் சங்கங்களும்தான். அவர்களே முடிவு கூறட்டும்.

மேலும் செய்திகள்