குறைந்துவரும் தமிழக சிவில் சர்வீசஸ் அதிகாரிகள்
அரசு பணிகளிலேயே மிக உயர்ந்த பணி சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் பணிகள்தான். இந்திய ஆட்சிப்பணி (ஐ.ஏ.எஸ்.), இந்திய காவல்பணி (ஐ.பி.எஸ்.), இந்திய அயல்நாடுகள் பணி (ஐ.எப்.எஸ்.), இந்திய வருவாய் பணி (ஐ.ஆர்.எஸ்.) உள்பட 24 பணிகள் பல்வேறு துறைகளில் தலைமை பணிகளுக்கு தேர்வுசெய்யும் பணிகளாக இருக்கிறது.
அரசு பணிகளிலேயே மிக உயர்ந்த பணி சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் பணிகள்தான். இந்திய ஆட்சிப்பணி (ஐ.ஏ.எஸ்.), இந்திய காவல்பணி (ஐ.பி.எஸ்.), இந்திய அயல்நாடுகள் பணி (ஐ.எப்.எஸ்.), இந்திய வருவாய் பணி (ஐ.ஆர்.எஸ்.) உள்பட 24 பணிகள் பல்வேறு துறைகளில் தலைமை பணிகளுக்கு தேர்வுசெய்யும் பணிகளாக இருக்கிறது. நீண்ட பல ஆண்டுகளாக ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் ஐ.சி.எஸ். என்ற ஆட்சிப்பணி இருந்தபோதுகூட, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் தேர்வுபெற்று, உயர்பதவிகளில் இருந்து இருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற பல பணிகளில் முன்பெல்லாம் 100–க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆண்டுதோறும் தமிழ்நாட்டிலிருந்து தேர்வுபெறுவது உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியிலும் பல அமைச்சகங்களிலும் சரி, இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் சரி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்தான் கோலோச்சிக்கொண்டிருந்தனர். காலப்போக்கில் இந்த எண்ணிக்கை குறைந்துகொண்டே போனது.
இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. மொத்தம் 577 ஆண்களும், 182 பெண்களும், ஆக மொத்தம் 759 பணிகளுக்கு தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒருகுறை பெண்கள் அதிகளவில் தேர்வு பெறவில்லை. மற்றொரு குறை தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு 36 பேர்தான் தேர்வுபெற்றுள்ளனர். இந்த ஆண்டு தேர்ச்சிபெற்ற 36 பேரில், எத்தனை பேர் ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்வாகப்போகிறார்கள்?. எத்தனை பேர் ஐ.பி.எஸ். ஆகப்போகிறார்கள்?, எத்தனை பேர் ஐ.ஆர்.எஸ். ஆக தேர்வுபெற போகிறார்கள்?. அப்படி தேர்வு பெறுகிறவர்களில் எத்தனை பேர் தமிழக பணிக்காக ஒதுக்கீடுபெற போகிறார்கள்? என்பதெல்லாம் அடுத்தசில நாட்களில்தான் தெரியும். பொதுவாக சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு என்று 3 கட்டங்களாக தேர்வுகள் நடக்கும். இந்த ஆண்டு நேர்முகத்தேர்வுக்கு தமிழ்நாட்டிலிருந்து சென்ற 120 பேரில்தான் இப்போது 36 பேர் தேர்வுபெற்று இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை அதிகம் இருக்கிறது. அந்தகாலங்களில் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களெல்லாம் எந்த பயிற்சி அகாடமியிலும் படித்து தேர்வு எழுதியதில்லை. அவர்கள் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பில் சிறந்து விளங்கியதை வைத்தே தங்களை நன்றாக தயார்படுத்திக்கொண்டு சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதி வெற்றிபெற்றனர். அந்தவகையில் கல்லூரிகளின் கல்வித்தரமும் உயரவேண்டும். தற்போது தமிழ்நாட்டில் ஏராளமான ஐ.ஏ.எஸ். பயிற்சி அகாடமிகள் புற்றீசல்கள்போல உருவாகிவிட்டன. மாணவர்களின் தணியாத ஆசையை பயன்படுத்தி சிலர் அதிகப்படியான கட்டணங்களை வசூலிக்கிறார்கள். இந்தநிலையில், அதிககட்டணம் செலுத்தி படிக்க வசதி இல்லாத ஏழை–எளிய இளைய சமுதாயத்தினருக்கு ஆபத்பாந்தவனாக விளங்குவது உணவு, தங்குமிட வசதியோடு இலவசமாக பயிற்சி அளிக்கும் தமிழக அரசு நடத்தும் அண்ணா மேலாண்மை நிலையமும், சைதை துரைசாமியின் மனிதநேய ஐ.ஏ.எஸ். பயிற்சி மையமும்தான். அனைத்து பயிற்சி நிலையங்களும் இந்தத்தேர்வில் எழுத தகுதியானவர்களை, திறமையானவர்களை மட்டுமே சேர்க்கவேண்டுமே தவிர, எல்லா மாணவர்களையும் சேர்ப்பதை கட்டுப்படுத்தவேண்டும். மாணவர்களும் தங்களை கல்லூரிகளில் படிக்கும்போதே உரியமுறையில் தயார்படுத்திக்கொண்டு தேர்வு எழுதவேண்டும்.