போலீசில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு

பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

Update: 2017-07-12 21:30 GMT
பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்திய அரசியல்சட்டத்தில் ‘பிரிவு–14’ ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமான உரிமை இருப்பதை கோடிட்டுகாட்டுகிறது. பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும்தான் பெண்கள் இடஒதுக்கீடு நிறைவேறவில்லை என்று பார்த்தால், அரசுப்பணிகளிலும் இன்னும் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. போலீஸ் அமைப்பு புள்ளிவிவரம் சமீபத்தில் ‘போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுமம்’ சார்பில் வெளியிடப்பட்டது. இதில், நாடுமுழுவதும் போலீஸ்படையில் 7.10 சதவீத அளவில்தான் பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலங்களை எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 1 லட்சத்து 23 ஆயிரத்து 456 பேர் கொண்ட காவல்துறையில், 16,850 பெண்கள் பணிபுரிகிறார்கள். சதவீத அடிப்படையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தாலும், எண்ணிக்கை அடிப்படையில் மராட்டிய மாநிலத்தில்தான் போலீஸ்படையில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் பணியாற்றுகிறார்கள். அந்த மாநிலத்தில் 21,249 பெண்கள் போலீஸ் வேலையில் இருக்கிறார்கள். 70,934 பேர் பணியாற்றும் கர்நாடக போலீசில் பெண்களின் எண்ணிக்கை 4,354 மட்டுமே.

தமிழக அரசை பொறுத்தமட்டில், இந்தியாவிலேயே முதன்முதலாக அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்னை ஆயிரம்விளக்கில்தான் 1992–ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு காவல் உட்கோட்டம் அதாவது, டி.எஸ்.பி. கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் ஒரு மகளிர் காவல்நிலையம் என்றவகையில், 200 மகளிர் காவல்நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. இதுதவிர, ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ஒரு பெண் சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் 2 பெண் போலீஸ்காரர்கள் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், எல்லா போலீஸ் நிலையங்களிலும் 2 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். இன்னும் பல காவல் நிலையங்களில் பெண் சப்–இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படவேண்டும்.

திருப்பூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பெண் போலீஸ் சூப்பிரண்டுகள் பணியாற்றுகிறார்கள். திருச்சி, வேலூர், காஞ்சீபுரம் சரகங்களில் பெண் டி.ஐ.ஜி. கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இயங்குகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான வழக்குகள், பெண் போலீசார் மற்றும் பெண் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டால், நிச்சயமாக சிறந்த புலன்விசாரணை செய்யமுடியும். குறிப்பாக பாலியல் பலாத்கார வழக்குகள், ‘ஈவ்டீசிங்’, வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை, வன்கொடுமை மற்றும் கற்பழிப்பு போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான வழக்குகளில் பெண் போலீசார், பெண் போலீஸ் அதிகாரிகளால் புலன்விசாரணை செய்யப்பட்டால், பாதிக்கப்பட்ட பெண்கள் நிச்சயமாக தயக்கமில்லாமல், கூச்சமில்லாமல் புகார்செய்ய முன்வரமுடியும்.

பொதுவாக ஆண் அதிகாரிகளிடம் சென்று எல்லாவற்றையும் விரிவாக சொல்ல பெண்கள் முன்வரமாட்டார்கள். மேலும், பெண்களுடைய பிரச்சினை நிச்சயமாக பெண்களுக்குத்தான் தெரியும். ஓரளவுக்கு சொன்னாலே பெண் காவல் அதிகாரிகளால் புரிந்துகொள்ள முடியும். பெண் அதிகாரிகளால் எந்தநிலையும் சமாளிக்கமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெண்அதிகாரிகள் மாவட்ட சூப்பிரண்டாக இருந்த மாவட்டங்களில் பெரும்பாலும் எந்த வன்முறையும் தலையெடுக்கவில்லை. எனவே, பெண்களுக்கான வழக்குகளை கவனிக்க போதிய அளவில் போலீசில் பெண்கள் நியமிக்கப்பட வேண்டும். தற்போது காவல்துறையில் மேலும் 3,941 பெண் காவலர்களை நியமிப்பதற்கான தேர்வுகள் நடந்துகொண்டு இருக்கின்றன. இது ஓரளவுக்கு நிலைமையை சமாளிக்கும். இதுமட்டுமல்லாமல், மத்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள சிறப்பு பெண் போலீஸ் தன்னார்வலர்களை உடனடியாக தமிழக காவல்துறை அமைத்தால், நிறையப்பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்ததுபோலவும் இருக்கும். குடும்ப வன்முறை, குழந்தை திருமணம், பாலியல் வன்முறை, பொது இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களைத்தடுக்க களப்பணியிலும் இருப்பார்கள். ஏதாவது சம்பவங்கள் நடந்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும் வசதியாக இருக்கும். இதையும் உடனடியாக பரிசீலிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்