கார்கள் மோதல்: சென்னையை சேர்ந்த 4 என்ஜினீயர்கள் சாவு

கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் சென்னையை சேர்ந்த 4 என்ஜினீயர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2019-02-03 21:45 GMT
சென்னை,

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் நவீன்சாமுவேல்(வயது 35). அதே பகுதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் பூபதி உள்பட 4 பேரும் நண்பர்கள். என்ஜினீயர்களான இவர்கள் 5 பேரும் காரில் திருச்சிக்கு சென்றனர்.

பின்னர் அதே காரில் நேற்று மாலை சென்னைக்கு புறப்பட்டனர். திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வந்தபோது காரின் முன்பக்க டயர் வெடித்தது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் ஏறி மறுமார்க்கமாக சென்னை-திருச்சி சாலைக்கு சென்று ஓடியது.

அப்போது எதிர்முனையில் வந்த காரும், என்ஜினீயர்கள் வந்த காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 கார்களின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கின. இதில் நவீன்சாமுவேல், பூபதி உள்பட 4 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். என்ஜினீயர்கள் காரில் இருந்த ஒருவரும், மற்றொரு காரில் வந்த பரமக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(37), ராஜபதி(43), சரவணபெருமாள், சுந்தர்ராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த வேப்பூர் போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பலியான 4 என்ஜினீயர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களில் சுந்தர்ராஜன் பரமக்குடி தாசில்தாராகவும், சரவணபெருமாள் பரமக்குடியில் வருவாய் ஆய்வாளராகவும் உள்ளனர். சரவணபெருமாள் புதிதாக வாங்கிய காரில் 4 பேரும் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று விட்டு, திரும்பி வந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது தெரியவந்தது.

விபத்து தொடர்பாக வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியான மேலும் 2 என்ஜினீயர்கள் மற்றும் படுகாயமடைந்த மற்றொரு என்ஜினீயர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்