சாமிதோப்பில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம்.;
நாகர்கோவில்,
சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா இன்று 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழா தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி , தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 5.30 மணிக்கு குரு சுவாமி தலைமையில் குரு ராஜசேகரன் திருக்கொடியேற்றினார்.
நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் நடந்தது. 2ம் நாளான நாளை இரவு அய்யா பரங்கி நாற்காலியில் பவனி வருதல் நடைபெறுகிறது.வரும் 31-ம் தேதி 8ம் திருவிழாவில் அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்வு, தொடர்ந்து அன்னதர்மம் நடக்கிறது.
10-ம் திருவிழாவான (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனி, 11ம் திருவிழாவான ஜூன் மாதம் 3-ம் தேதி திங்களன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் அய்யா வைகுண்டர் கலையரங்கத்தில் தினமும் அய்யாவழி சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.