நோய் தீர்க்கும் வைத்தியநாதர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது வைத்தீஸ்வரன் கோவில்.

Update: 2023-08-25 14:47 GMT

பழங்காலத்தில் இந்த தலம் 'புள்ளிருக்கு வேளூர்' என்று அழைக்கப்பட்டுள்ளது. 'புள்' என்பது ஜடாயு என்ற பறவையையும், 'இருக்கு' என்பது ரிக் வேதத்தையும், 'வேள்' என்பது முருகனையும், 'ஊர்' என்பது சூரியனையும் குறிக்கும். இந்த நால்வரும் வழிபட்ட தலம் என்பதால் இது 'புள்ளிருக்கு வேளூர்' என்றானது. காவிரியின் வடகரை தலங்களில் அமைந்த 16-வது தலம் இது. நவக்கிரகங்களில் செவ்வாய் என்று அழைக்கப்படும் அங்காரகன் வழிபட்ட தலம் என்பதால் 'அங்காரகபுரம்' என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு.

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர், 'வைத்தியநாதர்.' அம்பாள் பெயர் 'தையல்நாயகி' என்பதாகும். வைத்தியநாதப் பெருமான், நோய்களையும், ஊழ்வினைகளையும் தீர்க்கவல்லவராக இங்கு எழுந்தருளியுள்ளார். அம்பாள், இறைவனுக்கு உதவியாக தனது கையில் தைல பாத்திரம், அமிர்த சஞ்சீவி, வில்வ மரத்தடி மண் ஏந்தி இருக்கிறார். இப்படி அம்பாளும், சுவாமியும் தீவினை தீர்க்கும் சக்தி படைத்தவர்களாக அருள்பாலிக்கிறார்கள். சூரபத்மனை வெல்வதற்காக, இத்தல அம்பிகையை முருகப்பெருமான் வழிபாடு செய்தாராம். ஆகையால் இங்கு 'செல்வமுத்துக்குமரன்' என்னும் திருப்பெயரோடு முருகன் அருள்கிறார். 'கோளிலித் தலம்' என்று அழைக்கப்படும் வைத்தீஸ்வரன் ஆலயத்தில், நவக்கிரகங்கள் வரிசையாக, மூலவரின் சன்னிதிக்கு பின்புறம் அமைந்திருக்கின்றன. இங்கு அங்காரகனுக்கு தனிச் சன்னிதி உண்டு. மூல விக்கிரகத்தோடு, உற்சவர் விக்கிரகமும் காணப்படுகின்றன. அங்காரகனுக்கு ஏற்பட்ட செங்குஷ்ட நோயை, இத்தல இறைவன் தீர்த்து அருளினார். எனவே இந்த ஆலயம் அங்காரகத் தலமாக விளங்குகிறது. அங்காரக (செவ்வாய்) தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து வழிபாடு செய்தால், அந்த தோஷங்கள் நீங்கும்.

வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள விபூதி குண்டத்தில் (ஜடாயு குண்டம்) இருந்து விபூதியையும், சித்தாமிர்த தீர்த்தத்தின் நீரையும் சேர்த்துக் குழைப்பார்கள். அதனை ஐந்தெழுத்து மந்திரமான 'நமசிவாய' என்ற வார்த்தையை உச்சரித்தபடியே, செல்வமுத்துக்குமரனின் சன்னிதியில் இருக்கும் குழி அம்மியில் அரைத்து, சிறுசிறு உருண்டைகளாக பிடிப்பார்கள். பின்னர் அதனை அம்பாள் திருவடியில் வைத்து அர்ச்சிப்பார்கள். அதன்பிறகு, இத்தல இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, இறைவனின் பிரசாதமாக வழங்கப்படும். இதனை 'திருச்சாந்து உருண்டை' என்பார்கள். இதனை உண்பவர்களுக்கு, எப்பேர்ப்பட்ட வியாதியாக இருந்தாலும் விரைவாக நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இவ்வாலயத்தில் உள்ள 'சித்தாமிர்த தீர்த்தம்' சிறப்புக்குரியது. நான்கு புறங்களிலும் மண்டபத்தோடும், படிக்கட்டுகளோடும் நடுவில் நீராழி மண்டபத்தோடும் இந்த தீர்த்தக்குளம் அமைந்திருக்கிறது. கிருத யுகத்தில், காமதேனு பசு, தன்னுடைய பால் கொண்டு இறைவனுக்கு திருமஞ்சனம் செய்ததாம். அந்த பாலே பெருகி ஓடி, தீர்த்தமாக மாறியதாக நம்பப்படுகிறது. இதனை 'கோட்சர தீர்த்தம்' என்றும் அழைப்பார்கள். இந்த ஆலயத்தில் ஒரு முறை, சதானந்த முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது பாம்பால் துரத்திவரப்பட்ட தவளை ஒன்று, இந்த தீர்த்தக் குளத்தில் குதித்தது. அப்போது தெறித்த தண்ணீர், முனிவரின் முகத்தில் பட்டு அவரது தவம் கலைந்தது. இதையடுத்து இந்தக் குளத்தில் பாம்பும், தவளையும் வசிக்கக் கூடாது என்று சபித்தார். இதன் காரணமாக இக்குளத்தில் தவளைகள் வசிப்பதில்லை என்கிறார்கள். இந்த தீர்த்தத்தில் நீராடினால், சகல நோய்களும் தீரும். நோய் தீர்வதற்காக, குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும், பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் முக்கியமான பிரார்த்தனையாக இருக்கிறது. சித்தாமிர்த தீர்த்தம் தவிர, கோதண்ட தீர்த்தம், கவுதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், அங்கசந்தனத் தீர்த்தம், முனிவர் தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்களும் இங்கு உள்ளன.

அமைவிடம்

புதியதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது, வைத்தீஸ்வரன் கோவில். கும்பகோணம்- சீர்காழி நெடுஞ்சாலையில் உள்ளது மயிலாடுதுறை. இங்கிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திலும், சீர்காழியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்