பாவங்களில் இருந்து விமோசனம் தரும் உத்தான ஏகாதசி

விரத காலத்தில் வழக்கமான ஏகாதசிக்கு உரிய கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவேண்டும்.

Update: 2024-11-11 07:43 GMT

விரதங்களில் மிக மிக உயர்ந்தது ஏகாதசி விரதம் என்று சொல்வார்கள். இந்த ஏகாதசி விரதங்களிலும் சில ஏகாதசி விரதங்கள் மிகுந்த பலன்களை தரும் ஆற்றலை கொண்டது. குறிப்பாக மகாவிஷ்ணு ஓய்வெடுக்க செல்வதாக கூறப்படும் 4 மாத காலத்தில் வரக்கூடிய மூன்று ஏகாதசிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

அவை, ஆடி மாதம் மகாவிஷ்ணு சயன கோலத்தில் இருக்கும் 'சயனி ஏகாதசி', அடுத்து மகாவிஷ்ணு படுக்கையில் திரும்பி படுக்கும் 'பரிவர்த்தினி ஏகாதசி' மற்றும் மகாவிஷ்ணு ஓய்வு காலத்தை முடித்து யோக நித்திரையில் இருந்து எழுந்திருக்கும் 'உத்தான ஏகாதசி' ஆகும்.

அவ்வகையில் நாளை உத்தான ஏகாதசி தினம் (12.11.2024) ஆகும். இந்த ஏகாதசி ஹரிபோதினி ஏகாதசி, பிரபோதினி ஏகாதசி, தேவோத்தானி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த புனிதமான நாள் பகவான் மகாவிஷ்ணுவின் நான்கு மாத ஓய்வு காலத்தின் நிறைவைக் குறிக்கிறது. 

உத்தான ஏகாதசி நாளில் பக்தர்கள் விரதம் இருந்து சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்கள். அப்போது வாழ்வில் ஆரோக்கியம், வளம் மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்காக பகவானிடம் வேண்டிக்கொள்வார்கள். விரத காலத்தில் வழக்கமான ஏகாதசிக்கு உரிய கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவேண்டும்.

விரதம் இருப்பவர்கள், ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று (11.11.2024) கடைசி உணவை சூரிய அஸ்தமனத்திற்குள் உட்கொண்டு விரதத்தை ஆரம்பிப்பது நல்லது. ஏகாதசி விரதத்தைக் கடைபிடிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு முக்கியம் அடுத்த நாள் துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்தில் விரதத்தை முடிப்பதாகும். நாளை மறுநாள் (13.11.2024) புதன்கிழமை காலை 6:30 மணி முதல் 09:45 மணிக்குள் விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.

இந்த ஏகாதசி விரதத்தை முறைப்படி மேற்கொண்டு பகவானை சரணடையும் பக்தர்கள் அனைத்து விதமான பாவங்களில் இருந்து விடுபட்டு, பெரும் புண்ணியத்தை பெறுவார்கள் என்பது ஐதீகம்.

Tags:    

மேலும் செய்திகள்