திருமலையில் இனி ஒரே நிமிடத்தில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெறலாம்.. புதிய கவுண்டர்கள் திறப்பு

திருமலையில் உள்ள கோகுலம் கலையரங்கின் பின்பக்கம் புதிய கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

Update: 2024-11-14 05:55 GMT

திருமலை,

திருப்பதி ஏழுமலையானை தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இதனால் எப்போது சென்றாலும் தரிசனத்திற்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். பொது தரிசன வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் இரண்டு நாட்கள்வரை காத்திருந்தும் தரிசனம் செய்கிறார்கள்.

பொது தரிசனத்தில் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்வதற்காக, 300 ரூபாய் கட்டணத்தில் விரைவு தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த விரைவு தரிசன டிக்கெட்டை பக்தர்கள் பலர் விரும்புகிறார்கள். ஆனால் இந்த டிக்கெட்டை நேரடியாக பெற முடியாது. ஆன்லைனில் தான் பெற முடியும். அதுவும் சில மாதங்களுக்கு முன்பே, டிக்கெட் வெளியிடப்படும். அதனை சரியாக கவனித்து முன்பதிவு செய்யவேண்டும்.

விரைவு தரிசனம் தவிர, வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டும் உள்ளது. வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெற கோவிலுக்கு 10,000 ரூபாய் நன்கொடை செலுத்த வேண்டும். அதாவது, நாடு முழுவதும் கோவில்களை கட்டவும் பராமரிக்கவும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு இந்த நன்கொடையை செலுத்தவேண்டும். நன்கொடையுடன் தரிசன டிக்கெட்டுக்கான 500 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். அப்படி செலுத்தினால் ஒரு நபருக்கு விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படும். இதற்காக சில விதிமுறைகளும் உள்ளன.

இந்நிலையில் விரைவாக வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெறும் வகையில் திருமலையில் உள்ள கோகுலம் கலையரங்கின் பின்பக்கம் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளுக்கான (பிரேக் தரிசனம்) புதிய கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி நேற்று ரிப்பன் வெட்டி ஸ்ரீவாணி தரிசன கவுண்டர்களை திறந்து வைத்தார். பின்னர் சிறப்பு பூஜை செய்து, பக்தரின் விவரங்களை கேட்டு டைப் செய்து முதல் தரிசன டிக்கெட்டை ஒதுக்கீடு செய்தார்.

பின்னர் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திருமலையில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை ஆப்லைனில் ஒதுக்கும் செயல்முறை இப்போது எளிதாக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும்போது முந்தைய ஸ்ரீவாணி கவுண்டரில் காத்திருக்கும் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளானதால் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீவாணி பக்தர்கள் இனி சிரமமின்றி டிக்கெட்டுகளை பெறலாம்.

ஒரு நாளைக்கு 900 டிக்கெட்டுகள் ஆப்லைனில் ஒதுக்கப்படுகின்றன. இதற்கு முன்பு இந்த டிக்கெட்டை ஒதுக்கீடு செய்ய மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வரை ஆகும். ஆனால், இப்போது ஒரு நிமிடத்தில் பக்தர்களுக்கு டிக்கெட் ஒதுக்கும் வகையில் அப்ளிகேசன் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. 5 கவுண்டர்கள் மூலம் பக்தர்கள் எளிதாக டிக்கெட் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான என்ஜினீயர் சத்தியநாராயணா, துணை செயல் அதிகாரி ராஜேந்திரன், உதவி செயல் அதிகாரி கிருஷ்ணய்யா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்