தைலக்காப்பு திருவிழா: நூபுர கங்கையில் நாளை நீராடுகிறார் கள்ளழகர்

தைலக்காப்பு திருவிழாவையொட்டி நூபுர கங்கையில் கள்ளழகர் நாளை நீராடுகிறார்.

Update: 2024-11-12 02:20 GMT

மதுரை,

மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைலக்காப்பு திருவிழாவும் முக்கியமான விழாவாகும். இந்த விழா நேற்று மாலை தொடங்கியது.

இதையொட்டி கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய தேவியர்களுடன் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி நவநீத கிருஷ்ணன் சன்னதி மண்டபத்தில் பரமபத நாதன் சேவையில் காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருகிறார்.

நாளை(புதன்கிழமை) துவாதசி அன்று காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் இருப்பிடத்தை விட்டு புறப்பாடாகிறார். பின்னர் அழகர் மலைபாதை வழியாக சுவாமி சென்று நூபுரகங்கை மாதவி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து 11.30 மணிக்கு மேல் 12 மணிக்குள், தைலக்காப்பு கண்டருளி நூபுர கங்கை தீர்த்தத்தில் திருமஞ்சனம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து சகல பரிவாரங்களுடன் அதே வழியாக மீண்டும் அழகர் கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேர்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்