ராமேஸ்வரம் கோவிலில் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்
மார்கழி மாத அஷ்டமியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சுவாமி-அம்பாள் எழுந்தருளினர்.
ராமேசுவரம்,
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று மார்கழி மாத அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலிலும் மார்கழி மாத அஷ்டமியை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணியில் இருந்து 4 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து கால பூஜைகள் நடைபெற்ற பின்னர் காலை 7 மணி அளவில் சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து எழுந்தருளினர்.
தொடர்ந்து கோவிலின் கிழக்கு வாசல், தெற்கு ரதவீதி சாலை, மார்க்கெட் தெரு வழியாக திட்டக்குடி சந்திப்பு சாலை, ராம தீர்த்தம், சீதாதீர்த்தம் வரை வந்த சுவாமி-அம்பாள் பின்னர் காமராஜ் நகர் சாலை, அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட நகரின் பல முக்கிய வீதிகளில் வீதி உலா சென்று மீண்டும் கோவிலுக்கு பகல் 12.30 மணிக்கு வந்தடைந்தது. நகரின் அனைத்து பகுதிகளுக்கும் சுவாமி-அம்பாள் வந்தபோது ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்தும், தேங்காய் உடைத்தும் தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணை அன்று ஒரு நாள் மட்டுமே சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து நேரடியாக எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு படி அளப்பதாக ஐதீகம். அதுபோல் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணையை முன்னிட்டு நேற்று காலை சுவாமி-அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யவும், தீர்த்தம் நீராடவும் அனுமதிக்கப்படவில்லை.