இன்று ஆடி 2-வது செவ்வாய்.. முருகப்பெருமானின் அன்பை பெற இதை செய்யலாம்..!

செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு ஏற்ற நாள் என்பதால் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.

Update: 2024-07-30 07:10 GMT

வழிபாட்டுக்கு உரிய உன்னதமான ஆடி மாதத்தில் வரக்கூடிய அனைத்து நாட்களுமே அருமையான நாட்கள். ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சக்தி வியாபித்திருக்கும் அற்புதமான இந்த மாதத்தில், நாம் செய்யக்கூடிய பூஜைகளும் விரதங்களும் வழிபாடுகளும் நமக்கு நல்ல பலன்களை கொடுக்கும் என்பது நம்பிக்கை.

அம்மன் வழிபாடு மட்டுமல்லாமல் அழகன் முருகனுக்கும் இந்த மாதத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை, சஷ்டி தினங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகள் மிகவும் விஷேசமான நாட்கள்.

அவ்வகையில் இன்று ஆடி இரண்டாவது செவ்வாய்க்கிழமை. ஆடிக்கிருத்திகை மற்றும் ரோகிணி நட்சத்திரத்துடன் இணைந்து வருவது தனிச்சிறப்பானதாகும். இந்த நாளில் அம்மன் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, வேண்டுதல் நிறைவேற்றுவது என எதை செய்தாலும் அது பல மடங்கு அதிகமான பலனை தரும்.

குறிப்பாக, செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு ஏற்ற நாள் என்பதால் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு. இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்தால் முருகனின் அன்பையும் அருளையும் பெறலாம். அன்னதானம் செய்ய முடியாதவர்கள், முருகன் கோவிலுக்கு சென்று அங்கிருக்கும் ஏழைகளுக்கு தங்களால் முடிந்த தானத்தை செய்யலாம். கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வரும்போது தானம் செய்வதைவிட கோவிலினுள் நுழையும் முன்னரே தானம் செய்வது நல்லது. தரிசனம் செய்வதற்கு முன்பாக தானம் செய்வதால் புண்ணியம் அதிகரிக்கும்.

நவக்கிரக வழிபாடுகளில் செவ்வாயோடு நேரடி தொடர்புடையவர், முருகப்பெருமான். அதனால் தான், பொதுவாகவே செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வேண்டி விரதமிருந்து வழிபடுவது உகந்தது என்கிறார்கள். அதிலும், ஆடி செவ்வாய்க்கிழமை விரதம் மிகவும் உயர்ந்த விரதமாகவே பாவிக்கப்படுகிறது.

ஆடி செவ்வாயில் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்தால், குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கல்வியில் உயர்வடைய நினைக்கும் மாணவர்கள் சிறந்து விளங்கலாம். சொந்த வீடு கனவுகள் நனவாக முருகப்பெருமான் அருள்புரிவார். திருமணப்பேறும் குழந்தை செல்வமும் அருள்வார். வாழ்க்கையில் பேரும் புகழும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

Tags:    

மேலும் செய்திகள்