கிரக தோஷங்களை நீக்கும் திருவாலீஸ்வரர்

ராமாயணத்தில் பராக்கிரமசாலியாக வர்ணிக்கப்படும் வாலி வழிபாடு செய்த லிங்கத்திற்கு திருவாலீஸ்வரர் என்று பெயர் வந்தது.

Update: 2023-05-02 10:33 GMT

ராமாயணத்தில் பராக்கிரமசாலியாக வர்ணிக்கப்படும் வாலி, வானரர்களின் தலைவனாக விளங்கியவன். கிஸ்கிந்தபுரி என்ற இடத்தை ஆட்சி செய்து வந்த வானரப் பேரரசன். இவன் சிறந்த சிவ பக்தனும் ஆவான். தினமும் வேளை தவறாது, சிவபெருமானை வழிபாடு செய்வான். ஒரு நாள் வாலி, காட்டுப் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தான். அவன் சென்ற வழியில் ஒரு அசரீரி ஒலித்தது.

"வானர அரசனே.. நீ செல்லும் வழியில் பசுமை நிறைந்த அசனலபுரம் என்ற இடத்தில், 16 வகையான செல்வங்களைப் பெறும் வகையில் 16 பட்டைகள் கொண்ட சிவலிங்கம் அமைத்து வழிபடு. அப்படிச் செய்தால் நீ நினைத்த காரியம் வெற்றிபெறுவதுடன், அனைவரும் நலமுடன் இருப்பார்கள்" என்றது அந்தக் குரல்.

தென்திசை நோக்கி தன் படைகளுடன் சென்று கொண்டிருந்த வாலி, குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் அங்கு ஒருவித அமைதி நிலவுவதைக் கண்டு அதிசயித்தான். அசரீரி சொன்னது போலவே, 16 பட்டை கொண்ட சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். தன் படைவீரர்களின் உதவியோடு அங்கே ஒரு குளத்தை வெட்டி, அதில் இருந்து கிடைத்த நீரைக்கொண்டு, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தான். பின் மலர்கள் சர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கினான். வாலி வழிபாடு செய்த லிங்கத்திற்கு, 'திருவாலீஸ்வரர்' என்று பெயர் வந்தது.

புராண காலத்தில் அசலனபுரம் என்று அழைக்கப்பட்ட ஊர், இப்போது அரசூர் என்று அழைக்கப்படுகிறது. வாலி வழிபட்ட வாலீஸ்வரர், பிற்காலத்தில் மண்மூடிப் போனது. ஆனால் பிற்காலத்தில் வந்த பல்லவ மன்னன் இரண்ராம் நமசிம்மன் என்கிற ராஜசிம்மன், சோழ மன்னன் ராஜராஜ சோழன் ஆகியோர் இந்த ஆலயத்தை திருப்பணி மூலம் முடித்துக் கொடுத்துள்ளனர் என்பதை இங்குள்ள கல்வெட்டுக்கள் வெளிப்படுத்துகின்றன.

அமெரிக்க நாட்டின் தத்துவத்துறை திறனாய்வாளர் ஜான்ஸ்டீபன் என்பவர் சிவலிங்கம் என்ற தலைப்பில், ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மகரிஷிகள், தவசீலர்கள் மற்றும் ஞானிகளின் வழிபாட்டாலும், மந்திர உச்சாடனங்கள் மூலமாகவும் ஏற்படுகின்ற அதிர்வலைகளை தன்னகத்தே ஈர்த்து வைத்துக் கொள்ளக்கூடிய பேராற்றல் சிவலிங்கத்திற்கு உள்ளது. அதை இந்த திருத்தலத்திற்கு வந்து இறைவனை தரிசித்தவுடன் நமக்குள் ஏற்படும் பக்தி பரவசத்தின் மூலம் உணர முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆலயத்தின் விமானம், அகமண்டபம், முகமண்டம், சவுந்தரவல்லி அம்பாள் சன்னிதி, 132 அடி கொண்ட திருசுற்று மதில் சுவர், கோபுர வாசல் ஆகியவற்றின் திருப்பணிகள், கல்லால் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் ஞான பிரசன்னாம்பிக்கை சமேத காளத்தீஸ்வரர், ஏலவார் குழலி அம்பிகை சமேத ஜம்புகேஸ்வரர், காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், பர்வதவர்த்தினி சமேத ராமநாதன் ஆகிய தெய்வங்களை ஒரு சேர வணங்கலாம். வாலியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 16 பட்டைகள் கொண்ட சிவலிங்கத்தை, 'ஷோடச லிங்கம்' என்று அழைக்கிறார்கள். இந்த இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படும்போது, அபிஷேக நீர் 16 பட்டைகளின் வழியாக வழிந்து செல்வதை காண கண் கோடி வேண்டும்.

இலங்கை மன்னன் ராவணேஸ்வரனை தனது வாலினால் கட்டிப்போடும் அளவிற்கு, வலிமை வாய்ந்த வாலி வழிபட்ட சிவபெருமான் என்பதால், இவரை வழிபாடு செய்தால் நமக்கும் மன உறுதியும், தேக பலமும், சாதனை படைக்கும் சக்தியும் ஒருங்கே கிடைக்கப்பெறும் என்கிறார்கள். இத்தல அம்பாள் சவுந்தரவல்லி, அழகுடை நாயகி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இத்தல சுவாமியையும், அம்பாளையும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், கிரக தோஷங்கள் விலகும், கிரகங்களால் வாழ்வில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.

இந்த ஆலயத்தில் நடராஜர், நர்த்தன கணபதி, பிரம்மன், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பைரவர், சனீஸ்வரர் ஆகிய தெய்வங்களின் திருமேனிகளும் உள்ளன. இங்கு வருகை தந்து வழிபட்டால், படிப்பில் மந்த நிலையில் உள்ளவர்கள், கல்வியில் உயர்ந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. பெண்கள் மற்றும் ஆண்களின் திருமணத் தடை நீக்கும் திருத்தலமாகவும் இது திகழ்கிறது. இவ்வாலயத்தில் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், பத்திரகிரியார், வரகுணபாண்டியன், அருணகிரிநாதர், வியாசமுனி, கருவூர்தேவர், ரோம மகரிஷி, வள்ளலார், காஞ்சி முனிவர் உள்பட பல அருளாளார்கள் வணங்கியிருக்கிறார்கள்.

அமைவிடம்

சென்னையில் இருந்து பொன்னேரிக்கு மின்சார ரெயில் மற்றும் அரசு பஸ்கள் மூலமாக வந்து, அங்கிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசூருக்கு பஸ் மற்றும் ஆட்டோ மூலமாக பயணிக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்