திரவுபதி அம்மன் கோவில் ஆணிப்பாதை திருவிழா
கும்பகோணம் அருகே தாராசுரம் திரவுபதி அம்மன் கோவில் ஆணிப்பாதை திருவிழா நடந்தது. விழாவில் பக்தர்கள் ஆணிப்பலகையில் நடந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.;
கும்பகோணம்;
கும்பகோணம் அருகே தாராசுரம் திரவுபதி அம்மன் கோவில் ஆணிப்பாதை திருவிழா நடந்தது. விழாவில் பக்தர்கள் ஆணிப்பலகையில் நடந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திரவுபதி அம்மன் கோவில்
கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் திருக்குளம் மேல்கரை பகுதியில் திவ்ய திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் அக்னி ஆணிப்பாதை திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த திருவிழா தடைபட்டிருந்தது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 1-ந் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு கடந்த 1-ந் தேதி இரவு திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நேற்றுமுன்தினம் 2-ந் தேதி இரவு 10 ஆயிரம் இரும்பு ஆணிகள் பொருத்திய பலகை கோவிலுக்கு முன்பு உள்ள சன்னதி தெருவில் வக்கப்பட்டது.
நேர்த்திக்கடன் செலுத்தினர்
தொடர்ந்து ஆணி பலகையைச்சுற்றி நெருப்பு மூட்டப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு பக்தர்கள் தாய்வீட்டுச் சீர்வரிசைகளை கொண்டு வந்தனர். பின்னர் அரசலாற்றில் இருந்து சக்தி கரகம், வீரபத்திர மகாசூலம், சடையப்பர், முனீஸ்வரர் மகாவேல், அம்மன் திரிசூலம், அலகு காவடி, அக்னி கொப்பரையுடன் திரவுபதி அம்மன் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் ஏராளமான பக்தர்கள் தீ மூட்டப்பட்டு ஆணிபொருத்திய பலகையில் நடந்து சென்று தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை 8 மணிக்கு திரவுபதி அம்மன் திருநடன வீதியுலா தொடங்கியது.