காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
மகா கும்பாபிஷேகம் தொடர்பான யாகசாலை பூஜைகள் கடந்த 23-ம் தேதி தொடங்கின.
காஞ்சிபுரம்,
கஜேந்திர மோட்சம் நடைபெற்ற சிறப்புக்குரிய காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புஷ்பவல்லித்தாயார் சமேத அஷ்டபுஜப் பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் 75 வது திருக்கோவிலாகவும், இக்கோவில் மூலவர் 8 திருக்கரங்களை உடையவராகவும், கஜேந்திர மோட்சம் நடந்த சிறப்புக்கும் உரியது காஞ்சிபுரத்தில் உள்ள புஷ்பவல்லித்தாயார் சமேத அஷ்டபுஜப் பெருமாள் கோவில். இக்கோவில் கடந்த 9.12.2021 ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் செய்வதற்காக பாலாலயம் செய்யப்பட்டு ஆலயம் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் தொடர்பான யாகசாலை பூஜைகள் இம்மாதம் 23-ம் தேதி தொடங்கின.
இதனைத் தொடர்ந்து மூலவருக்கும் உற்சவருக்கும் 108 கலச சிறப்புத் திருமஞ்சனம் நேற்று நடைபெற்றது. இன்று மகா பூரணாகுதி தீபாராதனைக்குப் பின்னர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர் மூலவர், உற்சவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்புத் திருமஞ்சனம், அன்னதானம் நடைபெறுகிறது. மாலையில் பெருமாள் திருவீதி புறப்பாடு நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ் கே பி. எஸ் சந்தோஷ் குமார் தலைமையிலான அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.