பங்குனி உத்திர திருவிழா: சபரிமலை அய்யப்பன் கோவிலில் 13-ந்தேதி நடை திறப்பு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் 13-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.;

Update: 2024-03-07 01:51 GMT

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது தவிர ஒவ்வொரு தமிழ் மாத (மலையாள மாதத்தின்) பிறப்பை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜை நடைபெறும். மேலும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர திருவிழாவையொட்டியும் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி ண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுவார்.

அதைத்தொடர்ந்து 14-ந் தேதி முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, சகஸ்ர கலச பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். 18-ந் தேதி வரை 5 நாட்கள் தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

பங்குனி உத்திர திருவிழா 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 9.45 மணிக்கு கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். விழாவையொட்டி வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெறும்.

25-ந் தேதி 10-ம் நாள் திருவிழாவன்று பம்பையில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுபெறும். அதைத்தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு நடை அடைக்கப்படும். பங்குனி உத்திர திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்