மேல்மலையனூரில் ஊஞ்சல் விழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பூசாரிகள் பக்திப் பாடல்கள் பாடியவுடன் அம்மன் ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;

Update: 2023-11-14 10:02 GMT

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி ஐப்பசி மாதத்துக்கான அமாவாசை விழா நேற்று நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம் பஞ்சாமிர்தம், இளநீர், தேன், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.

இரவு 11 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு வந்து ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளச் செய்தனர். பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்கள் பாடியவுடன் அம்மன் ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்