அம்மன் சிலையின் கண்களில் ஒளி வீசிய அதிசயம்... வியப்பில் ஆழ்ந்த பக்தர்கள்

கோவில் நடை அடைக்கப்பட்ட பின்பு வந்த பக்தர்கள், ஒளிவீசும் கண்களுடன் கூடிய அம்மனை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Update: 2024-08-08 10:41 GMT

நெல்லை மாவட்டம் திசையன்விளை மெயின் பஜாரில் அற்புத விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் அன்னை மூகாம்பிகை ஆலயம் தனியாக உள்ளது. நேற்று முன்தினம் மாலையில் 6.40 மணிக்கு கோவில் பூசாரி முகேஷ் பட்டர் மூகாம்பிகைக்கு அலங்காரம் செய்து முடித்துவிட்டு பூஜைக்கு தயாராகி கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த முத்து ஆச்சாரி தனது மனைவியுடன் அங்கு வந்திருந்தார். தனது மருமகளின் பிரசவம் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்று வேண்டினார். அப்போது மூகாம்பிகை கல்சிலையில் அம்மன் கண்களில் இருந்து ஒருவிதமான ஒளி வருவதை அவரது மனைவி பார்த்துள்ளார்.

இதை அருகில் இருந்த தனது கணவரிடம் கூறினார். அவரும் அதை பார்த்து வியந்துள்ளார். உடனே அவர் அங்கிருந்த பூசாரியை அழைத்து அம்மனின் கண்கள் திறந்திருப்பது போல் காட்சியளித்ததை பார்க்குமாறு கூறினார். உடனே அங்கிருந்த பக்தர்களும் திரண்டு வந்து பார்த்து வியந்தனர். இதனை ஏராளமானோர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் சுமார் 1 மணி நேரத்தில் காட்டுத்தீ போன்று தகவல் பரவி ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஒளி வீசும் கண்களுடன் கூடிய அம்மனின் திருக்கோலத்தை தரிசனம் செய்தனர்.

போலீசாரின் உத்தரவைத் தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. அதன் பின்பும் பக்தர்கள் அம்மனை காண வந்தனர். ஆனால் கோவில் நடை அடைக்கப்பட்டதால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நேற்று காலையில் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டபோது அம்மனின் கண்கள் வழக்கம் போல் இயல்பாகவே காட்சியளித்தது. 

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

Tags:    

மேலும் செய்திகள்